பீகார் மக்களின் மத உணர்வை புண்படுத்தும் விதமாக கருத்துகளை வெளியிட்ட குற்றத்திற்காக பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவின்படி, ஜாம்ஷெட்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கும்படி ராஜ் தாக்கரே தாக்கல் செய்த மனுவை ஏற்க அந்த நீதிமன்றம் மறுத்துவிட்டது.
PTI Photo
FILE
இவ்வழக்கு தொடர்பாக ராஜ் தாக்கரேவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஆர்.கே.சிங், ஷீடா சிங் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், கடந்த நவம்பர் 15ஆம் தேதி மஸ்கான் பெருநகர நீதிமன்ற கூடுதல் நீதிபதி ஜாமீன் பிறப்பித்துள்ளதால், இவ்வழக்கு விசாரணைகளின் போது ராஜ்தாக்கரே நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கும்படி கோரியிருந்தனர்.
ஆனால், மனுவை விசாரித்த ஏ.கே.திவாரி, மஸ்கான் நீதிமன்றம் வழங்கிய ஜாமீர் உத்தரவின் நகலை மனுவுடன் இணைக்கத் தவறிய காரணத்தால், இதனை ஏற்க முடியாது என்று நிராகரித்தார்.
மேலும் இவ்வழக்கு தொடர்பான விசாரணை டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறும் என்றும், அப்போது ராஜ்தாக்கரே தரப்பு, மஸ்கான் நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் மனுவின் நகலை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
கடந்த ஜுன் மாதம் ஹமீத் ராஸா என்பவரால் ஜாம்ஷெட்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பீகார் மக்களின் மத உணர்வுகளை புண்படுத்திய ராஜ்தாக்கரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனடிப்படையில், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி ராஜ்தாக்கரே மீது ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.