அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் அங்கம் என்பதை சீனா பூரணமாக உணர்ந்துள்ளது என அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
PTI Photo
FILE
அருணாச்சலத்தின் தவாங் பகுதியில் உள்ள 400 ஆண்டு கால பழமையான பௌத்த மடாலயத்திற்கு நேற்று நடந்த 8வது புத்த மஹோத்சவ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றப் பேசியதாவது:
இந்தியாவும், சீனாவும் எல்லைப் பிரச்சனை குறித்து அமைதியான தீர்வைப் பெறவே விரும்புகின்றன. இருநாட்டுப் பிரதமர்களின் சிறப்பு பிரதிநிதிகள் இதுவரை 12 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அருணாச்சலம் இந்தியாவின் அங்கம் என்பதை சீனா பூரணமாக உணர்ந்துள்ளது. அவ்வப்போது அருணாச்சலம் தங்களுடையது என அவர்கள் (சீனா) கூறிவந்தாலும், நமது (இந்தியர்கள்) மனதில் அருணாச்சலத்திற்கு என்று தனி இடம் உள்ளது என பிரணாப் முகர்ஜி கூறினார்.
மக்களவை அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து 2 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தியாவின் பிற மாநிலங்களைப் போல், அருணாச்சல் மாநில நிர்வாகத்தை மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட சட்டப்பேரவை நிர்வகிக்கிறது.
இந்நிலையில், அருணாச்சலம் யாருக்கு சொந்தம் என்ற சந்தேகம் யாருக்கும் எழ வேண்டியதில்லை. அது இந்தியாவுடையதே என பிரணாப் முகர்ஜி கூறியதும் அங்கு கூடியிருந்த மக்கள் கைதட்டி பெரும் கரவொலி எழுப்பினர்.
சமீபத்தில் அம்மாநிலத்திற்கு வந்திருந்த பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவில் சூரியன் முதலில் உதிப்பது அருணாச்சலப் பிரதேசத்தில்தான் என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் அதனை உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.