தனிமனிதருடைய உரிமை பறிக்கப்படும் போது மட்டுமல்ல, வேலை வழங்குபவரால் அநீதியாக அவர் தண்டிக்கப்பட்டாலும் நீதிமன்றங்கள் தலையிட முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இது தொடர்பான வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.பி.சின்ஹா, எல்.எஸ்.பாண்டா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, "அரசியலமைப்புச் சட்டப்படி, தனிமனிதரின் அடிப்படை உரிமை மீறப்படும்போது மட்டுமல்ல, அவருக்கு அநீதி இழைக்கப்படும்போதும் அவரை நீதிமன்றங்கள் காக்க முடியும்" என்று நீதிபதிகள் கூறினர்.
இதுபற்றிய வழக்கின் விவரம் வருமாறு:
ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோஹ்டக்கில் காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணியாற்றுபவர் மான்சிங். இவர் துணை உதவி ஆய்வாளர் சுச்சா சிங், தலைமைக் காவலர்கள் சுரேஷ் பான், விஜய் பால் ஆகியோர் கொண்ட குழுவிற்குப் பொறுப்பாளர் ஆவார்.
இக்குழுவினர் காவல்துறை வாகனங்கள் இரண்டை பழுதுபார்ப்பதற்காக சண்டிகரில் இருந்து ஹைதராபாத்திற்குக் கொண்டு சென்றனர். அப்போது மான்சிங்கிற்குத் தெரியாமல் 12 மது பாட்டில்களை வாகனத்தின் பின்புறம் விஜய் பால் மறைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வாகனத்தில் இருந்த மது பாட்டில்களை ஆந்திரப் பிரதேச சுங்க அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து நடந்த துறை ரீதியான விசாரணைக்குப் பிறகு, விஜய் பால் குற்றமற்றவர் என்று குற்றவியல் நீதிமன்றம் கூறிவிட்டதால் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், மான்சிங்கிற்கு இரண்டு ஊதிய உயர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
காவல்துறைக் குழுவிற்குப் பொறுப்பாளர் என்ற முறையில் கடமையில் இருந்து தவறியதற்காக மான்சிங்கிற்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஹரியானா உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதை எதிர்த்து மான்சிங் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ததுடன் மேற்கண்டவாறு தீர்ப்பளித்துள்ளது.