பெங்களூரில் ரூ.3,470 கோடி மதிப்பீட்டில் 4,000 ஏக்கர் பரப்பளவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையம் செயல்படத் துவங்கியது.
மும்பையில் இருந்து 110 பயணிகளுடன் வந்த ஐ.சி.609 விமானம் நேற்று இரவு 10.40 மணிக்கு புதிய விமான நிலையத்தின் ஓடுபாதையை முதன் முதலாகத் தொட்டது. அதே விமானம் ஐ.சி.957 என்ற எண்ணுடன் சரியாக 12.05 மணிக்குச் சிங்கப்பூருக்குப் புறப்பட்டது.
கர்நாடகாவில் சட்டப் பேரவைத் தேர்தல் ஒழுங்கு விதிகள் அமலில் உள்ள காரணத்தால் பெரிய அளவிலான விழா எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை.
ஆண்டிற்கு 12 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் படைத்த இந்த விமான நிலையத்தின் துவக்க நாள் பல்வேறு காரணங்களால் மூன்றுமுறை தள்ளிவைக்கப்பட்டது.
பெங்களூர் சர்வதேச விமான நிலையம் லிமிட்டெட் நிறுவனத்தில் தனியார் 74 விழுக்காடு பங்குகளையும், அரசு 26 விழுக்காடு பங்குகளையும் கொண்டுள்ளது.
பங்குதாரர்கள் விவரம்: சீமென்ஸ் புராஜக்ட் (40 %), லார்சன் அண்ட் டியூப்ரோ (17%), யுனிக் ஜியூரிச் ஏர்போர்ட் (17 %), கர்நாடக அரசு (13 %), மத்திய அரசு (13 %).
பயணிகளுக்கு தேவையான அனைத்து அதிநவீன வசதிகளும் இந்த விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ளன. 24 மணி நேர மருத்துவ வசதி, குழந்தைகளை பராமரிப்பு வசதி, ஊனமுற்றோருக்கு ஏற்ற வகையிலான கழிப்பிடம் மற்றும் இருக்கை வசதிகள், 7 ஆயிரம் வாகனங்கள் கொள்ளளவு உள்ள `பார்க்கிங்' பகுதி என எல்லா வசதிகளும் சிறப்பாக உள்ளன.
பெங்களூரில் இருந்து விமான நிலையத்திற்கு வருவதற்கு ஏற்ற வகையில் பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகம் சார்பில் அதிகமான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த பேருந்துகள் பெங்களூரில் உள்ள 9 வழித்தடங்களின் வழியாக 26 மையங்களுக்கு இயக்கப்பட உள்ளன. இதில் குளிர்சாதன வசதியுடைய பேருந்துகள் 15 நிமிடத்திற்கு ஒரு முறையும், குளிர்சாதன வசதியற்ற பேருந்துகள் காலை 8-11 மணி வரையும், மாலை 5-10 மணி வரையும் இயக்கப்படும்.