இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு குறித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடசாரிக் கட்சிகள் உயர்மட்டக் குழு வருகிற 6 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மீண்டும் கூடி விவாதிக்க உள்ளது.
அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டிற்கு அவசியமான இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு உடன்பாடு குறித்து சர்வதேச அணுசக்தி முகமையுடன் விவாதித்து மத்திய அரசு இறுதிசெய்துள்ள விவரங்கள் தொடர்பாக இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"சர்வதேச அணுசக்தி முகமையுடன் இந்தியா மேற்கொண்ட பேச்சு குறித்து மத்திய அரசு அளிக்கும் விவரங்களின் அடிப்படையில், அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தை முன்னெடுத்துச் செல்லவுள்ளோம்" என்று இடதுசாரிக் கட்சி ஒன்றின் மூத்த தலைவர் பி.டி.ஐ. நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டிற்கு எதிரான தங்களின் நிலைப்பாடு தொடர்வதாகத் தெரிவித்த அவர், அணுசக்தி உடன்பாட்டை நிறைவேற்றுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும்போது உயர்மட்டக் குழுவின் முடிவைக் கருத்தில்கொள்ள வேண்டிய கட்டாயம் அரசிற்கு உள்ளது என்றார்.
கடந்த மார்ச் 17-ம் தேதி நடந்த கூட்டத்தில், இப்பிரச்சனைகளில் தங்கள் தரப்பு நிலைப்பாடுகளை அரசும், இடதுசாரிகளும் பரிமாறிக்கொண்டன. எனினும் அவை தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.