குறிப்பிடத்தக்க காந்தியவாதியும் மாநிலங்களவை உறுப்பினருமான நிர்மலா தேஷ்பாண்டேவின் உடல் புது டெல்லியில் இன்று தகனம் செய்யப்பட்டது.
லோதி சாலையில் உள்ள மின் மயானத்தில் நடந்த இறுதி நிகழ்ச்சியில், நிர்மலா தேஷ்பாண்டாவின் வாழ்நாளில் அவருடன் இணைந்து பணியாற்றியவர்கள், ஒத்த கொள்கை உடையவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர்கள் ராகுல் காந்தி, ஜனார்தன் திவேதி, முதலமைச்சர்கள் ஷீலா தீக்ஷித் (டெல்லி), விலாஸ்ராவ் தேஷ்முக் (மராட்டியம்), குலாம் நபி ஆஷாத் (ஜம்மு- காஷ்மீர்), முன்னாள் மத்திய அமைச்சர்கள் திக்விஜய் சிங், அசோக் கெலாட், மோதிலால் வோரா, சமூக சேவகர் சுவாமி அக்னிவேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முகமது யூசுப் தரிகாமி உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
பாகிஸ்தானில் இருந்து தகவல் ஒளிபரப்பு அமைச்சர் ஷெரி ரகுமான், காஷ்மீர் மற்றும் வடக்கு விவகாரங்கள் துறை அமைச்சர் காமர் ஜமான் கைரா ஆகியோர் தலைமையிலான உயர்மட்டக் குழு ஒன்றும் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றது.
பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் நேற்று நிர்மலா தேஷ்பாண்டேவின் இல்லத்திற்கு தொலைபேசியில் பேசினார்.
நமது குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் உள்பட பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்களும், சமூக சேவகர்களும் நிர்மலா தேஷ் பாண்டேவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.