Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் பாலத்தை யார் வழிபடுகிறார்கள் - உச்ச நீதிமன்றம் கேள்வி!

Webdunia
செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (20:12 IST)
ராமர் பாலம் என்று கூறப்படும் கடலில் மூழ்கியுள்ள நிலத்திட்டை ஒரு வழிபாட்டுத் தலம் என்று யார் கூறியது? நடுக்கடலிற்குச் சென்று அதனை யார் வழிபடுகிறார்கள்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது!

சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இத்திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், ஜனதா கட்சித் தலைவருமான சுப்பிரமணியம் சுவாமி, ராமர் பாலம் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட வழிபாட்டுத் தலம் என்றும், தான் ஒவ்வொரு வருடமும் கடலிற்குச் சென்று அதனை வழிபட்டு வருவதாகவும் கூறினார்.

" கணம் நீதிபதி அவர்களே, இது உங்களது நம்பிக்கையைப் பொறுத்த கேள்வி அல்ல. ஆனால், இந்த நாட்டு மக்களின் நம்பிக்கை தொடர்பானது" என்று கூறினார்.

அப்பொழுது குறுக்கிட்ட நீதிபதிகள், அது ஒவ்வொருவரும் புரிந்துகொள்வதைப் பொறுத்தது என்று கூறினர். அதற்கு, அந்த இடம் ஒரு வழிபாட்டுத் தலம்தான் என்பதை இந்துக்கள் ஒட்டுமொத்தமாக நம்புகின்றனர் என்று சுப்பிரமணியம் சுவாமி கூறினார்.

" இது எனது நம்பிக்கை மட்டுமல்ல, அது புனிதத் தலம்தான் என்பது இந்த நாட்டு மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு நீங்கள் தடையேதும் போட முடியாது" என்று கூறினார்.

அப்பொழுது குறுக்கிட்ட தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், அது வழிபாட்டுத் தலம்தான் என்று கூறியது யார்? கடலிற்கு நடுவில் சென்று அதனை யார் வழிபடுகிறார்கள்? மக்கள் அங்குச் சென்று வழிபடுகிறார்கள் என்றெல்லாம் கூறாதீர்கள் என்று கூறினார்.

சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ள அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், பா.ஜ.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண் ஜேட்லி ஆகியோர், சேதுக் கால்வாய் பகுதியில் தொல்லியல் துறையைக் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியதை சுட்டிக்காட்டினார்கள்.

அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் ஆகியோர் கொண்ட நீதிமன்றக் குழு, "இந்த நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பிக்கும் போது நீங்கள் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை வலியுறுத்தக் கூடாது" என்று கூறினார்.

இவ்வழக்கின் இறுதிகட்ட விசாரணை வரும் 29 ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

தென்கொரியா கோர விமான விபத்து.. 179 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: 8-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை..!

Show comments