நாகாலாந்து சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிபெரும்பான்மை கிடைக்காததால், அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ள நாகாலாந்து மக்கள் முன்னணி தலைமையில் கூட்டணி அரசு அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மொத்தம் 60 உறுப்பினர்களைக் கொண்ட இம்மாநிலச் சட்டப் பேரவைக்கு கடந்த 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் உள்ள 6,64,604 வாக்காளர்களில் 85 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.
இதில் 57 தொகுதிகளில் சனிக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடந்தது. காங்கிரஸ் கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நாகாலாந்து மக்கள் முன்னணிக்கு 25 இடங்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்களும், பா.ஜ.க.வுக்கு 2 இடங்களும் கிடைத்தன. சுயேட்சைகள் 6 இடங்களில் வெற்றிபெற்றனர்.
இதுதவிர மறுவாக்குப் பதிவு நடந்த 3 தொகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இவை 3 தொகுதிகளுமே நாகாலாந்து மக்கள் முன்னணியின் செல்வாக்குள்ள தொகுதிகள் ஆகும்.
இதனால் நாகாலாந்து மக்கள் முன்னணி (என்.பி.எஃப்) தலைமையில் செயல்படும் நாகாலாந்து ஜனநாயக கூட்டணி (டி.ஏ.என்) ஆட்சியமைக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
தேர்தலுக்கு முன்னதாக நாகாலாந்து மக்கள் முன்னணி, பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை கூட்டணி ஏற்படுத்திக் கொண்டன. ஆனால் தனித்தனியான தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு போட்டியிட்டன.