சட்டவிரோதமாக உடல் உறுப்புகள் மாற்றப்படுவதை தடுக்க கண் வங்கிபோல் உடல் உறுப்பு வங்கியை துவங்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
ஜனவரி 24-ம் தேதி ஹரியானா மாநிலம் குர்கான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுநீரக திருட்டு நாடு முழுவதிலும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு, மத்திய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாட்டீல் பதிலளிக்கையில், "சுகாதாரத்துறை அமைச்சகத்தின்கீழ், சட்டரீதியாக தேவையான உடல் உறுப்புகளை வங்கி மூலம் வழங்கும் முறையை கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.
பா.ஜ.க. எம்.பி., மேனகா காந்தி கூறுகையில், "தங்களது உடல் உறுப்புகளை விற்க விரும்பும் மக்கள் உள்ள பகுதியில் உடல் உறுப்பு வங்கியை அமைக்க வேண்டும். இதுபோன்று ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் மிகவும் தனித்துவத்துடன் நடந்து வருகிறது" என்றார்.
600-க்கும் மேற்பட்ட சிறுநீரகங்களை திருடிய முக்கிய குற்றவாளியான அமித்குமார் வழக்கு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பாட்டீல் பதிலளிக்கையில், "அமித்குமாருக்கு அயல்நாடுகளுடன் தொடர்பு உள்ளது. தற்போது மத்திய புலனாய்வுக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளான். இந்த வழக்கில் முடிந்தவரை விரைவாக தீர்வு காணப்படும். அமித்குமாரின் சொத்துக்களை கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க சட்டத்தில் சில வழிமுறைகள் உள்ளது" என்றார்.