உளுந்தை இறக்குமதி செய்ததில் மோசடியில் எஸ்.டி.சி.யைச் சேர்ந்த மூன்று உயர் அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
மத்திய வர்த்தக அமைச்சரவைக்கு கீழ் இயங்கும் நிறுவனம் ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் (எஸ்.டி.சி) . இது இறக்குமதி-ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. மத்திய அரசுக்காக அந்நிய நாடுகளில் இருந்து உணவு தாணியங்கள் உட்பட பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்கிறது.
எஸ்.டி.சி. நிறுவனத்தை சேர்ந்த மூன்று உயர் அதிகாரிகள் உளுந்து இறக்குமதி மோசடியில் ஈடுபட்டதற்கான ஆவணங்களை சி.பி.ஐ கைப்பற்றியுள்ளது.
சி.பி.ஐ. நேற்று டில்லி, கொல்கட்டா, மும்பை ஆகிய முன்று நகரங்களில் 9 இடங்களில் திடீர் சோதனை நடத்தியது. அப்போது உளுந்து இறக்குமதி மோசடியில் மூன்று அதிகாரிகள் ஈடுபட்டதற்கான ஆவணங்களை கைப்பற்றியது.
இது பற்றி சி.பி.ஐ. செய்தி தொடர்பாளர் கூறியதாவது:
2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தாணியம் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. இவர்கள் இந்த ஒப்பந்த புள்ளியில் அதிக விலைக்கு உளுந்து வாங்கியுள்ளனர். அதை சந்தை விலையை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளனர். இவர்கள் இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு சலுகை அளித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.7 கோடியே 71 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நேற்று நடந்த திடீர் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணஙகளில் இருந்து ஒரே குழுவை சேர்ந்தவர்களிடம் இருந்து அதிக விலைக்கு இறக்குமதி செய்து, மீண்டும் அதே குழுவை சேர்ந்தவர்களிடம் உள்நாட்டில் குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த மோசடியில் ஈடுபட்ட எஸ்.டி.சி.யின் தலைமை பொது மேலாளர், பொது மேலாளர், துணை பொது மேலாளர் ஆகிய மூன்று பேர் மீதும் மோசடி, ஏமாற்றுதல், அதிகாரத்தை தவறான நோக்கத்திற்காக பயன் படுத்துதல் ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து இருப்பதாக தெரிவித்தார்.