Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு சக்தி : இந்தியாவின் நலன் பாதுகாக்கப்படும் - பிரணாப்!

Webdunia
புதன், 28 நவம்பர் 2007 (20:53 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டுவர உருவாக்கப்படவுள்ள கண்காணிப்பு ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணு சக்தி முகமையுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் இந்தியாவின் நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்படும் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி உறுதியளித்தார்!

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு குறித்து மக்களவையில் பிற்பகல் 2 மணி முதல் தொடர்ந்து நடந்த விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய பிரணாப் முகர்ஜி, இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பிற்கு அனுமதி அளித்து அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஹென்ரி ஹைட் சட்டம் எந்தவிதத்திலும் இந்தியாவை கட்டுப்படுத்தாது என்று கூறினார்.

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்கு கொண்டுவர உருவாக்கப்பட வேண்டிய இந்தியாவிற்கென சிறப்பான கண்காணிப்பு ஒப்பந்தமும், அமெரிக்காவுடன் செய்துகொள்ள வேண்டிய 123 ஒப்பந்தமும் தான் நம்மைக் கட்டுப்படுத்தக் கூடியதே தவிர ஹென்ரி ஹைட் சட்டம் அல்ல என்று பிரணாப் முகர்ஜி கூறினார்.

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதால், நமது ராணுவ ரீதியிலான திட்டங்கள் எதுவும் பாதிப்பிற்குள்ளாகாது என்று கூறிய பிரணாப் முகர்ஜி, இதுவரை நடத்தப்பட்டுள்ள பேச்சுவார்த்தையில் நமது ராணுவ ரீதியான திட்டங்கள் முழுமையாக காப்பாற்றப்பட்டுள்ளன என்று கூறினார்.

இந்த ஒப்பந்தத்தின் படி, சர்வதேச அணு சக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் எதிர்காலத்தில் நாம் கொண்டுவரக் கூடிய அணு உலைகள் எவை என்பதை நிர்ணயிக்கும் உரிமை நம்முடையதுதான் என்று உறுதியாகக் கூறிய பிரணாப் முகர்ஜி, 123 ஒப்பந்தத்தை உருவாக்குவதில் 9 முக்கிய அம்சங்களை இந்தியா கருத்தில் கொண்டு செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

1) அணு சக்தி தொழில்நுட்பம் தொடர்பாக முழுமையான ஒத்துழைப்பு.

2) அணு சக்தி தொழில்நுட்பத்தை முழுமையாகப் பெற வழிவகை செய்து கொள்வது.

3) நம்முடைய அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளை தொடர்ந்து கிடைக்கச் செய்யக்கூடிய நிரந்தர உடன்படிக்கை.

4) பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறு ஆக்கம் செய்து பயன்படுத்தும் உரிமை.

5) சர்வதேச கண்காணிப்பு அமைப்பின் முழுமையான பாதுகாப்பு.

6) நமது பாதுகாப்பு - ராணுவ ரீதியிலான திட்டங்களை முழுமையாக பாதுகாப்பது.

7) அணு ஆயுதங்களுக்குத் தேவையான அணு வெடி பொருளை சேமிப்பதற்கு எதிரான எந்த உடன்படிக்கையும் ஏற்க மறுப்பது.

8) எதிர்கால பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணு ஆயுதச் சோதனை செய்யும் உரிமையை தக்கவைத்துக் கொள்வது.

ஆகியன உள்ளிட்ட 9 அம்சங்களை அடிப்படையாக வைத்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறினார்.

இந்தியாவிற்கென தனித்த கண்காணிப்பு உடன்படிக்கை உருவாக்குவது தொடர்பான தொழில்நுட்ப அளவிலான பேச்சுவார்த்தை தற்பொழுது நடந்து வருவதாகவும், அதில் 3 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியா பேசி வருவதாகவும் பிரணாப் கூறினார்.

1) நமது அணு உலைகளுக்கு தேவையான எரிபொருளை தொடர்ந்து பெறுவது.

2) ராணுவ ரீதியிலான நமது திட்டங்களை தொடர்வதற்கான உரிமை.

3) தடையற்ற தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகியனவாகும் என்று கூறினார்.

இந்தியாவை அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையில் இழுப்பதே அமெரிக்காவின் பிரதான நோக்கம் என்று எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி கூறியதை மறுத்த பிரணாப் முகர்ஜி, ஹென்ரி ஹைட் சட்டத்தின் சில பிரிவுகள் குறித்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் வெளியிட்ட கருத்துக்களை சுட்டிக்காட்டினார்.
ரஷ்யாவுடன் அணு சக்தி தொடர்பான ஒப்பந்தம் எதையும் செய்து கொள்ளாதது ஏன் என்பதற்கு விளக்கமளித்த பிரணாப் முகர்ஜி, எந்த ஒப்பந்தம் செய்து கொண்டாலும் அவை அனைத்தும் சர்வதேச அணு சக்தி முகமையுடன் செய்துகொள்ளப்படும் உடன்படிக்கைக்கு பின்னர்தான் நடைமுறைக்கு வரும் என்று கூறினார்.

இந்த ஒப்பந்தத்தினால் அமெரிக்காவை சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்படும் என்ற வாதத்தை மறுதளித்த பிரணாப், அவர்களின் மீது சார்ந்திருக்கவில்லை, ஆனால் அணு தொழில்நுட்பத்தைப் பெறும் வாய்ப்பு இதன்மூலம் திறக்கிறது, அது நமக்கு முக்கியம் என்று கூறினார்.

அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக ஏற்படும் முன்னேற்றங்களை ஒவ்வொரு கட்டத்திலும் நாடாளுமன்றத்திற்கு தெரிவித்ததைப் போல, தற்பொழுது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையின் முடிவுகளையும் நிச்சயம் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வருவோம் என்று பிரணாப் முகர்ஜி கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments