Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நூல் நூற்கும் போதே மின்சாரம் உற்பத்தி!

நூல் நூற்கும் போதே மின்சாரம் உற்பத்தி!

Webdunia

, வியாழன், 4 அக்டோபர் 2007 (19:56 IST)
கதர் நூல் நூற்கும் போதே மின்சாரத்தையும் உற்பத்தி செய்யும் ராட்டையை பெங்களூருவைச் சேர்ந்த பொறியாளர் உருவாக்கியுள்ளார்.

ராட்டையில் நூல் நூற்பது மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தது மட்டுமல்ல, அது சக்தி வாய்ந்த அகிம்சையின் ஆயுதமாக சுதந்திரப் போராட்ட காலத்தில் பயன்பட்டது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் கையாலேயே நூல் நூற்று தேவையான உடைகளை தயாரித்துக் கொண்டனர்.

ராட்டையில் தினமும் நூல் நூற்பது ஒரு வேள்வியாகவே நடத்தப்பட்டது. காந்தியும் ராட்டையும் இணைபிரியாத அம்சங்கள்.

இன்றளவும் காதி கிராமத் தொழில்கள் மூலம் ராட்டையில் நூல் நூற்பதில் இலட்சக்கணக்கான மக்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் வாழ்க்கையின் பொருளாதார ஆதாரமே, கதர் நூல் நூற்பது, கதர் துணிகளை உற்பத்தி செய்வதுதான்.

பிரிட்டிஷாருக்கு எதிரான அந்நிய துணிகள் பகிஷ்கரிப்பு போராட்டம், அடையாள எதிர்ப்பு போராட்டம் மட்டும் அல்ல. அது பிரிட்டிஷ் பொருளாதார அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்த போராட்டம்.

இவ்வாறு இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ராட்டை. இந்த ராட்டையில் நூல் நூற்கும் போதே மின்சாரத்தையும் உற்பத்தி செய்யும் நவீன ராட்டையை கண்டுபிடித்துள்ளார் பெங்களுரைச் சேர்ந்த பொறியாளர் ஹிர்மத். இவர் இந்த நவீன ராட்டையை காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்திற்காக உருவாக்கியுள்ளார்.

இந்த நவீன ராட்டையில், இரண்டு மணிநேரம் நூல் நூற்றால், ஒரு வீட்டுக்கு தேவையான ஒரு விளக்கையும், ரேடியோவையும் 6 முதல் 7 மணி நேரம் வரை இயக்க முடியும். இதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமிக்க, பராமரிக்க தேவையில்லாத பேட்டரி (எமர்ஜென்ஸி விளக்குகளில் பயன்படுத்தும் ) இணைக்கப்பட்டுள்ளது. இது மின் சேமிப்பு கலனாக பயன்படுகிறது. இதன் தயாரிப்பு செலவு ரூ. 3,000.

இந்த ராட்டையை பயன்படுத்தி நூல் நூற்கும் போதே, உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி, டிரான்சிஸ்டர் வானெலி மூலம் நாட்டு நடப்புகளையும், மனதிற்கு ரம்மியமான இசையையும் கேட்டுக் கொண்டே சம்பாதிக்கலாம்.

மின் உற்பத்தி செய்யும் இரண்டு லட்சம் ராட்டையை நாடு முழுவதும் உள்ள காதி உற்பத்தி நிலையங்களில் பயன்படுத்த கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம் திட்டமிட்டுள்ளது என்று சிறு மற்றம் நடுத்தர தொழில்கள் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை வருகின்ற நவம்பர் மாதம் 19 ஆம் தேதி குடியரசுத் தலைவர் பிரதிபா பட்டேல் நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துகின்றார்.

Share this Story:

Follow Webdunia tamil