Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இட ஒதுக்கீடு வழக்கு: ஆக.7 முதல் அரசமைப்பு அமர்வு விசாரிக்கும்

Webdunia
வியாழன், 26 ஜூலை 2007 (12:41 IST)
ஐஐடி, ஐஐஎம், மருத்துவம் உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணாக்கர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டம் அரசமைப்பு ரீதியாக சரியானதுதானா என்பதனை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

உயர்கல்வி நிலையங்களில் இந்த கல்வி ஆண்டிலேயே இதர பிற்படுத்தப்பட்ட மாணாக்கர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து மாணாக்கர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவிற்கு கடந்த மார்ச் 29ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட நீதிமன்றக் குழு இடைக்காலத் தடை விதித்தது.

இந்த தடையை நீக்கக் கோரி மத்திய அரசு மேல் முறையீடு செய்தது. அந்த மேல் முறையீட்டில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு எதிரான வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு (கான்ஸ்டிட்யூஷனல் பெஞ்ச்) விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தது.

மத்திய அரசின் இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான நீதிமன்றக் குழு, இட ஒதுக்கீடு தொடர்பான இவ்வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி முதல் விசாரிக்கத் துவங்கும் என்று உத்தரவு பிறப்பித்தது.

பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு இடைக்காலத் தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட மார்ச் 29ஆம் தேதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் 31ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் அறிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

பெண் போலீஸ் டிஐஜியையே மிரட்டிய சைபர் குற்றவாளி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

Show comments