மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் எங்களிடம் உள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் எங்கள் அதிகாரிகள் பயன்படுத்தினார்கள் என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் தெரிவித்துள்ளார். மேலும், தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் வானிலை சீரடைந்துள்ளது என்றும் விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேவேளையில், விமானத்தை தேடும் பணியில் 12 விமானங்கள் ஈடுபட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. முன்னதாக, மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8 ஆம் தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.
சீனக்கடலுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, வியட்நாம் அருகே தோ சூ தீவுக்கு 250 கி.மீ. தொலைவில் கடலில் விழுந்து நொறுங்கியதாக முதல் கட்ட தகவல் வெளியானது முதல், இதுவரை பல்வேறு முரண்பட்ட தகவல்களே வந்து கொண்டிருக்கின்றன.