அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புப் பிரிவின் ஒப்பந்ததாரராகப் பணியாற்றிய எட்வர்ட் ஸ்னோடன் அமெரிக்கா பிற நாடுகளை உளவு பார்ப்பதை ஆதாரத்துடன் வெளிப்படுத்தினார். இதனால் அந்நாட்டின் குற்றச்சாட்டுக்கு ஆளான அவர் அதிலிருந்து தப்பிப்பதற்காக தற்போது ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்துள்ளார். இந்நிலையில் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகம் இவரை இன்று தங்கள் கல்வி நிறுவனத்தின் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளது.
கல்லூரியின் மாணவர் குழு ஒன்று இவரை இந்தப் பதவிக்குத் தேர்வு செய்துள்ளது. ஸ்னோடனின் வழக்கறிஞர் மூலமாக அவரது சம்மதத்தையும் பெற்றுள்ளதாக அந்த மாணவர் குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் புதிய தலைவராக எட்வர்ட் ஸ்னோடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், அவர் எங்கிருந்தாலும் தாங்கள் துணை நிற்பதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் மூலம் குறிப்பிடத்தக்க அறிக்கைகளை வெளியிடுவது இந்தக் கல்லூரியின் பாரம்பரியமாகும்.
இந்தக் கல்லூரியின் தலைவர் என்ற பதவி மாணவர்களின் பிரதிநிதித்துவமாகவே கருதப்படுகின்றது. தலைவர் என்ற முறையில் அவர் கல்லூரியின் நிர்வாகக் குழு மற்றும் பிற அதிகாரிகளுடனான கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்குமுன், முன்னாள் தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவின் மனைவி வின்னி மண்டேலா, இஸ்ரேலின் அணு ஆயுதப்பிரிவு அதிகாரி மோர்டெச்சாய் வனுனு போன்றோர் இந்தப் பதவியில் இருந்துள்ளனர். தற்போது இந்த நிறுவனத்தின் தலைவராக லிபரல் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் தலைவர் சார்லஸ் கென்னடி பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.