தனது இந்தியப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவும், ஒத்துழைப்பும் பல்வேறு துறைகளில் பெருகும் என்றும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு சிகரத்தை எட்டும் என்றும் சீனப் பிரதமர் வென் ஜியாபாவோ கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பிற்குப் பின்னர், பிரதமர் மன்மோகன் சிங் உடனிருக்க செய்தியாளர்களிடம் பேசிய சீனப் பிரதமர் வென் ஜியாபாவோ, “எனது இந்தியப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை பல துறைகளுக்கு பெருக்கும். நமக்கிடையே நிலவிவரும் ஒத்துழபைப்பும், நட்பும் இதுவரை காணாத சிகரத்தை எட்டும்” என்று கூறியுள்ளார்.
சீனாவின் மிகப் பெருமைக்குரிய அண்டை நாடாக இந்தியாவைக் கருதுவதாகக் கூறியுள்ள வென் ஜியாபாவோ, இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியத்துவன் வாய்ந்த பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளில் ஒத்த கருத்து ஏற்படும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் உறுதியாகும் என்றும் கூறியுள்ளார்.
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இரு நாடுகளுக்கும் பொதுவான இலக்குகள் உள்ளதெனவும், அதில் இரு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு மேம்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் ஜியாபாவோ கூறியுள்ளார்.