Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோபன்ஹேகன்: பேச்சுவார்த்தையில் மீண்டும் முட்டுக்கட்டை

கோபன்ஹேகன்: பேச்சுவார்த்தையில் மீண்டும் முட்டுக்கட்டை
கோபன்ஹேகன் , புதன், 16 டிசம்பர் 2009 (20:14 IST)
பருவ நிலை மாற்றம் தொடர்பாக நியாயமான மற்றும் சமமான உடன்படிக்கை ஏற்பட வேண்டும் என்ற இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் உறுதியாநிலைப்பாடு காரணமாக, கோபன்ஹேகன் மாநாட்டு பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

கோபன்ஹேகனில் நடைபெறும் பருவநிலை மாநாட்டில், வெப்ப வாயு வெளியற்றம் தொடர்பாக, தற்போது நடைமுறையிலுள்ள ஐ.நா. கியோட்டோ புரோட்டோகால் - UN Kyoto Protocol - எனப்படும் வெப்ப வாயு வெளியேற்ற உடன்படிக்கையை சிதைக்க, பணக்கார நாடுகள் முயற்சிப்பதாக கூறி ஆப்ரிக்க நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன.இதன் காரணமாக, இந்த பேச்சுவார்த்தை இரு தினங்களுக்கு முன்னர் நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், வெப்ப வாயு வெளியற்றத்தை குறைக்கும் பிரச்னையில் அனைத்து நாடுகளுக்கும் சமமான மற்றும் நியாயமான உடன்படிக்கை ஏற்பட வேண்டும் என்பதில் இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா மற்றும் பிரேசில் ஆகியவை அங்கம் வகிக்கும் 'பேசிக்' - BASIC - குழும நாடுகள் உள்ளிட்ட வளரும் நாடுகள் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தின.

இதனால் பேச்சுவார்த்தையை தொடர்வதில் தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

மாநாடு நிறைவடைவதற்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், அதில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், சீனப் பிரதமர் வென் ஜியாபாவோ உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், இந்த மாநாட்டில் அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலான ஒரு சுமூகமான உடன்படிக்கை ஏற்படுவது மிகவும் கடினமான ஒன்றே என்று மாநாட்டில் தற்போது பங்கேற்றுள்ள பல்வேறு நாட்டு தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கோபன்ஹேகன் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள இந்தியப் பிரதிநிதிகளுக்கு தலைமையேற்றுள்ள இந்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், அனைத்து நாடுகளுக்கும் சமமான மற்றும் நியாயமான உடன்படிக்கை ஏற்பட வேண்டும் என்பதில் 'பேசிக்' குழும நாடுகள் உறுதியாக உள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதே சமயம் சில காரணங்களுக்காக மாநாட்டு நிறைவில் ஏமாற்றங்கள் ஏற்பட்டால் அதற்காக 'பேசிக்' குழும நாடுகளை குற்றம் சாற்றக் கூடாது என்றும் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil