Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனித உரிமை மீறல், போர்க் குற்றம் நடந்துள்ளது: சிறிலங்க அரசு ஒப்புதல்

மனித உரிமை மீறல், போர்க் குற்றம் நடந்துள்ளது: சிறிலங்க அரசு ஒப்புதல்
, சனி, 7 நவம்பர் 2009 (13:26 IST)
மனித உரிமை மீறல், போர்க் குற்றம் என்று எதுவும் நடைபெறவில்லை என்று இதுவரை பேசிவந்த சிறிலங்க அரசு, சித்ரவதை, கடத்தல், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் என்று மனித உரிமை மீறல் பிரச்சனைகளை தாங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று ஒப்புக் கொண்டுள்ளது.

மனித உரிமைகள் காப்பதில் தேச அளவில் ஒரு நடவடிக்கைத் திட்டம் தீட்டி வருவதாகக் கூறியுள்ள மனித உரிமைகளுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்கே, “மனித உரிமை தளத்தில் சிறிலங்கா மேம்பட்ட நிலைக்கு வரவேண்டியத” உள்ளது என்று கூறியுள்ளார்.

“சித்ரவதையாகட்டும், காணாமல் போகும் பிரச்சனையாகட்டும், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் பெண்கள், சிறுவர்கள் பாதுகாப்பாகட்டும், இப்பிரச்சனைகள் அனைத்தையும் முடிவிற்குக் கொண்டுவர தேச அளவிலான ஒரு நடவடிக்கைத் திட்டத்தைத் தாயாரித்து வருகிறோம்” என்று சமரசிங்கே கூறியுள்ளதாக பிபிசி செய்தி தெரிவிக்கிறது.

தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல், போர்க் குற்றங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றமும், பிறகு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அயலுறவு அமைச்சகமும் அறிக்கை வெளியிட்டிருந்தன. போர்க் குற்றங்கள் தொடர்பாக சிறிலங்க பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ச, முப்படைகளின் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரிடம் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை விசாரணை நடத்தியது. அந்த விசாரணையை தவிர்த்துவிட்டு சரத் பொன்சேகா அமெரிக்காவில் இருந்து சிறிலங்காவிற்குத் தப்பித்தார்.

போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மீது பன்னாட்டு விசாரணை நடத்த சிறிலங்க அரசு ஒப்புக் கொள்ள வேண்டு்ம் என்றும், அப்படி ஒப்புக் கொள்ளாத நிலையில் சிறிலங்கப் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அளித்துவரும் வாணிப முன்னுரிமை சலுகையை இழக்க வேண்டியதிருக்கும் என்றும் எச்சரிக்கை செய்தது.

இந்த நிலையில், கடந்த வாரம் வரை மனித உரிமை கண்காணிப்பாளர்கள் எவரையும் நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்துவந்த சிறிலங்க அரசு, மனித உரிமை மீறல்கள் தாங்கள் எதிர் நோக்கியிருக்கும் பிரச்சனைகளே என்று ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அதே நேரத்தில், மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்துவதற்கான தேச நடவடிக்கைத் திட்டத்தை தயாரித்துள்ளோம் என்று கூறி, மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக ஆணையங்கள் அமைத்து பிரச்சனைகளை திசை திருப்பவும் முயற்சிக்கலாம். இதனை மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, மனித உரிமை மீறல்கள் தாங்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனை என்று சிறிலங்க அரசு ஒப்புக் கொண்டுள்ள நிலையில் அதனை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்த உலக நாடுகள் அழுத்தம் தரவேண்டு்ம் என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil