Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புவியின் மீது நரகத்தை ஏற்படுத்தியது சீனா: தலாய் லாமா குற்றச்சாற்று

புவியின் மீது நரகத்தை ஏற்படுத்தியது சீனா: தலாய் லாமா குற்றச்சாற்று
, செவ்வாய், 10 மார்ச் 2009 (18:24 IST)
தங்களுடைய சுதந்திர வாழ்வுரிமைக்காக போராடிய திபெத்தியர்கள் மீது முரட்டுத்தனமான ஒடுக்குமுறையை ஏவி இப்புவியின் மீது நரகத்தை ஏற்படுத்தியுள்ளது சீனா என்று திபெத்தியர்களின் தலைவர் தலாய் லாமா குற்றம்சாற்றினார்.

1959ஆம் ஆண்டில் திபெத்தியர்களின் உரிமை போராட்டத்தை தனது இராணுவத்தை ஏவி ஒடுக்கியது சீன அரசு. இதில் 90,000 திபெத்தியர்கள் கொல்லப்பட்டனர். திபெத்தில் சீனா நடத்திய அந்த இனப் படுகொலையின் 50வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மெக்லியோட்கஞ்ச் என்ற இடத்தில் கூடிய திபெத்தியர்களிடையே உரையாற்றி தலாய் லாமா, இமாலயத்திலிருக்கும் தங்களுடைய நாட்டிற்கு சட்டப் பூர்வமான சுயாட்சி வழங்கிட முன்வருமாறு சீன அரசிற்கு வேண்டுகோள் விடுத்தார்.

“திபெத்தியர்களுக்கு சொல்லொனா துயரத்தையும், அழிவையும் சீனா ஏற்படுத்தியது. திபெத்தியர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண தற்பொழுது சீன அரசு நடத்திவரும் பேச்சுவார்த்தையிலும் எந்த பலனும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் எங்களின் உரிமைக்காக குரல் கொடுத்துப் போராடிய மக்களை கடந்த ஆண்டு மார்ச் மாதம் முரட்டுத்தனமாக ஒடுக்கியது சீன அரசு, அதை கண்டு உலகமே அதிர்ச்சிக்குள்ளானது” என்று கூறிய தலாய் லாமா, “நூற்றாயிரக்கணக்கில் திபெத்தியர்களின் உயிர்களைப் பறித்து, அவர்களை துயரின் ஆழங்களில் தள்ளியதன் மூலம் இப்புவியில் ஒரு நரகத்தையே ஏற்படுத்தியுள்ளது சீனா” என்று கூறினார்.

“சீன மக்கள் குடியரசின் கீழ் அர்த்தமுள்ள, சட்டப்பூர்வமான ஒரு சுயாட்சி அளிப்பதன் மூலம் திபெத்தியர்களின் முழு உரிமையுடன் வாழும் ஒரு ஏற்பாட்டை சீனா ஒப்புக்கொண்டு நிறைவேற்றிட வேண்டும” என்றும் தலாய் லாமா கூறினார்.

தலாய் லாமா பேச முடித்ததும் அங்கு கூடியிருந்த திபெத்தியர்கள், திபெத்தை விட்டு சீனா வெளியேற வேண்டும் என்றும் திபெத்தியர்களுக்குத்தான் திபெத் சொந்தமானது என்றும் முழக்கமிட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil