பாகிஸ்தான்-ஆஃப்கானிஸ்தான் எல்லையில் பாதுகாப்பாக பதுங்கியிருக்கும் தாலிபான், அல் கய்டா பயங்கரவாதிகளை ஒழிக்க மூன்று நாடுகளும் இணைந்து கூட்டு நடவடிக்கை மேற்கொள்வது என்று முடிவெடுத்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் ஷா மொஹம்மது குரேஷி, ஆஃகானிஸ்தான் அயலுறவு அமைச்சர் ரங்கீன் டாட்ஃபர் ஸ்பாண்டா ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பிறகு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், பயங்கரவாதிகளை ஒழிக்க மூன்று நாடுகள் இணைந்து முக்கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அயலுறவுச் செயலர் ஹில்லாரி கிளிண்டன் கூறியுள்ளார்.
பயங்கரவாதத்தைப் பொறுத்தவரை இம்மூன்று நாடுகளுக்கும் அது பொதுவான அச்சுறுத்தலாக, இலக்காக, பணியாக உள்ளது என்று கூறியுள்ள ஹில்லாரி, இந்த நடவடிக்கை வெற்றிபெற வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியுடன் உள்ளது என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவுடன் நடத்திய ஆலோசனை எதிர்பாரததாகவும், பயனுள்ளதாகவும் இருந்ததாகக் கூறிய ஆஃப்கான் அயலுறவு அமைச்சர் ஸ்பாண்டா, பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு மேலும் 17,000 அமெரிக்க வீரர்கள் ஆஃப்கானிஸ்தானத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் அயலுறவு அமைச்சர்களுடன் ஹில்லாரி கிளிண்டன் நடத்திய ஆலோசனையின் போது இவ்விரு நாடுகளுக்குமான சிறப்புத் தூதர் ரிச்சர்ட் ஹால்புரூக் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.