தென்ஆப்ரிக்காவின் முதல் கருப்பின அதிபராக தாம் பதவியேற்ற போது இருந்த அதே உணர்வு, அமெரிக்காவின் அதிபராக ஒபாமா பதவியேற்ற போதும் உலக மக்களிடையே காணப்பட்டது என நெல்சன் மண்டேலா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 44வது அதிபராக பராக் ஹுசைன் ஒபாமா பதவியேற்ற பின்னர் மண்டேலா வெளியிட்டுள்ள வாழ்த்து கடிதத்தில், கடந்த 1994இல் தாம் அதிபராகப் பதவியேற்ற போது ‘அநீதி ஒழிக்கப்படும ் ’ என்று உலக மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டதாகவும், தற்போது ஒபாமா பதவியேற்ற போதும் அதே உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
உங்கள் (ஒபாமா) தலைமையில் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்துவது கஷ்டமானது, உங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது என்பதையும் நாங்கள் அறிந்துள்ளோம் என மண்டேலா அக்கடித்தத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிபராக தாங்கள் பதவியேற்ற விழா உலக மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது. சமீப காலத்தில் ஒரு சில நிகழ்வுகள் மட்டுமே அதுபோன்ற அதீத கவனத்தை பெற்றுள்ளன.
கென்யாவை சேர்ந்த ஒருவரின் மகன், அமெரிக்காவின் அதிபர் பதவியை ஏற்றுள்ளதன் மூலம் ஒட்டுமொத்த ஆப்ரிக்க தேசமும் பெருமையடைந்துள்ளதாக மண்டேலா புகழ்ந்துள்ளார்.