அமெரிக்க அயலுறவு அமைச்சராக கடந்த 4 ஆண்டுகளாகப் பதவி வகித்த காண்டலீசா ரைஸ், தனக்குக் கீழ் பணியாற்றிய அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட பிரியாவிடை நிகழ்ச்சியில் பனித்த கண்களுடன் விடை பெற்றார்.
இதற்காக வாஷிங்டனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், என்னுடைய நினைவிலும், இதயத்திலும் நீங்கள் (அயலுறவு அமைச்சக அதிகாரிகள், ஊழியர்கள்) எப்போதும் இருப்பீர்கள் என உணர்ச்சி பொங்கப் பேசிய ரைஸ், சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் காக்க வேண்டியதற்கான அவசியம் பற்றி விவரித்தார்.
இதன் பின்னர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த தூதரக அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், இதர ஊழியர்களுடன் கை குலுக்கிய ரைஸ், அலுவலகத்தை விட்டு வெளியேறும் முன் அனைவருடனும் இணைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பிரியாவிடை பெற்றாலும், வரும் செவ்வாய்க்கிழமை வரை அவர் தனது வழக்கமான பணிகளை தொடருவார் என்றும், புதனன்று புதிய அயலுறவு செயலராக பதவியேற்கும் ஹிலாரி கிளிண்டனை வாழ்த்தும் வகையில் தனது அலுவலக மேஜையின் மீது வரவேற்புக் குறிப்பு ஒன்றையும் எழுதி வைத்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.