Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவுக்கு பயங்கரவாதிகள் தொடர்ந்து மிரட்டல் விடுப்பர்: புஷ் இறுதி உரை

Webdunia
வெள்ளி, 16 ஜனவரி 2009 (12:39 IST)
அமெரிக்காவுக்கு எதிர்காலத்தில் பயங்கரவாதிகளிட‌ம் இருந்து மிரட்டல் வரும் என்றும், அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் பொறுமையுடன் சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அதிபர் ஜார்ஜ் புஷ் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் புஷ், வெள்ளை மாளிகையில் இருந்து தொலைக்காட்சி மூலமாக அந்நாட்டு மக்களுக்கு இறுதி உரை ஆற்றினார். அதில், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட அமெரிக்கா தற்போது மிகவும் பாதுகாப்பாக உள்ளது. ஆனால் மீண்டும் பயங்கரவாதிகள் தாக்கக்கூடும் என்பதால் மக்களுக்கான அபாயம் முற்றிலுமாக விலகவில்லை என்றார்.

இரட்டை கோபுரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நினைவு கூர்ந்த அதிபர் புஷ், நமது எதிரிகள் மீண்டும் நம்மைத் தாக்குவதற்கான தருணத்தை எதிர்நோக்கி பொறுமையாக காத்திருக்கின்றனர் எனக் கூறினார்.

இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்க மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருந்தாலும், தாம் அந்த அதிர்ச்சியில் இருந்து விலகவில்லை என்று தெரிவித்த புஷ், தினந்தோறும் தாம் காலை எழுந்ததும் அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட செய்திகள் குறித்தே தெரிவிக்கப்படுவதால் நாட்டின் நலனைப் பாதுகாக்க தனது சக்திக்கு உட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டேன் என்றார்.

தலிபான்களின் ஆதிக்கத்தில் இருந்து போது ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் வீதிகளில் நிறுத்தப்பட்டு கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் மூலம் அந்நாடு ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியுள்ளது.

இதேபோல் சர்வதிகார ஆட்சியால் அவதிப்பட்ட ஈராக்கிலும் ஜனநாயகம் திரும்பியுள்ளதுடன், மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்காவின் நட்பு நாடாகவும் ஈராக் தற்போது திகழ்கிறது என புஷ் பெருமிதம் தெரிவித்தார்.

நாட்டின் நலனுக்காக பாடுபட்டேன்: அதிபர் பதவியில் இருந்த போது தாம் மேற்கொண்ட முடிவுகளில் சில பின்னடைவுகளை தாம் சந்தித்திருந்தாலும், நாட்டின் நலன் கருதியே அந்த முடிவுகளை அப்போது எடுத்தேன் என்றும் புஷ் தனது உரையின் போது விளக்கினார்.

சில நேரங்களில் தனது மனசாட்டிப்படி சில நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டதாக கூறிய புஷ், அதில் சிலவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அத்தருணத்தில் சில கடுமையான முடிவுகளை நான் மேற்கொண்டதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என தாம் நம்புவதாகக் தெரிவித்தார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக வரும் 20ஆம் தேதி பதவியேற்கும் பராக் ஒபாமாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக புஷ் தனது உரையில் தெரிவித்தார்.

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments