அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமாவின் தலைமையில் அமையவுள்ள புதிய அரசின் அயலுறவு அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ள, ஹிலாரி கிளிண்டன் முடிவு செய்துள்ளதாக நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PTI Photo
FILE
அந்நாட்டில் வெளியாகும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், பராக் ஒபாமாவிடம் இதுகுறித்துப் பேசிய ஹிலாரி, புதிய அரசில் நான் அயலுறவு அமைச்சராகப் பதவியேற்றால் தன்னுடைய பணி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும், தனது அயலுறவுக் கொள்கைகளின் திட்டங்களுக்கு எந்தளவு மதிப்பளிக்கப்படும் என்று விவாதித்ததாக கூறப்பட்டுள்ளது.
இப்பேச்சுவார்த்தைக்குப் பின்னர் புதிய அரசின் அயலுறவு அமைச்சர் பதவியை ஏற்க ஹிலாரி முடிவு செய்ததாக, அவரது நெருங்கிய நண்பரை மேற்கோள்காட்டி அந்த செய்தி தெரிவிக்கிறது.
முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியும், ஒபாமாவை எதிர்த்து வேட்பாளர்கள் தேர்வில் தோல்வியுற்றவருமான ஹிலாரி, புதிய அரசின் அயலுறவு பதவியை ஏற்பதற்கு ஏதுவாக, தனது செனட் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
இதற்கிடையில், இவ்விஷயம் குறித்து ஹிலாரியின் செய்தித் தொடர்பாளர் பிலிப்பி ரெய்ன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹிலாரி அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்வார் என்று தற்போதைய நிலையில் கூறுவது இறுதியானது அல்ல. இவ்விஷயம் தொடர்பாக மேலும் சில பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டியுள்ளது என கூறியுள்ளார்.
ஒபாமாவின் மூத்த ஆலோசகர்கள் இதுபற்றி நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு கூறுகையில், அயலுறவு அமைச்சர் பதவியை ஏற்குமாறு ஒபாமா விடுத்த கோரிக்கையை ஹிலாரி இதுவரை அதிகாரப்பூர்வமாக ஏற்கவில்லை என்றும், இதுதொடர்பாக நவம்பர் 27ஆம் தேதி வரை எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாது என்றும் தெரிவித்துள்ளனர்.