கியூபாவின் முன்னாள் அதிபரும், உலகின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவருமான ஃபிடல் காஸ்ட்ரோ சற்று உடல் மெலிந்து காணப்பட்டாலும் நலமுடன் இருப்பது ரஷ்ய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அவரது புகைப்படத்தின் மூலமாக தெரியவந்துள்ளது.
webdunia photo
FILE
தற்போது 82 வயதாகும் காஸ்ட்ரோ, அந்தப் புகைப்படத்தில் நின்ற நிலையில் காட்சியளிப்பதாகவும், அவரது வெண்ணிற தாடி சீர்செய்யப்பட்டு உள்ளதுடன் அவரது சிகையலங்காரமும் கம்பீரமாக காணப்படுவதாக ரஷ்ய ஆர்தடாக்ஸ் தேவாலயத்தின் மூத்த அயலுறவு விவகார அதிகாரி கிர்ரில் கூறியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி, ஹவானாவில் கட்டப்பட்ட தேவாலயத்தை புனிதமாக்கும் சடங்கிற்காக ஹவானாவுக்கு கிர்ரில் சென்ற போது அப்புகைப்படம் கிடைத்ததாக ரஷ்ய தேவாலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிர்ரில்-காஸ்ட்ரோ சந்திப்பை உறுதி செய்த கியூபா அரசு ஊடக நிர்வாகம், அப்போது எந்தப் புகைப்படத்தையும் வெளியிடவில்லை. கடந்த ஜுன் 17ஆம் தேதி வெனிசுலா அதிபர் ஹுகோ சாவேஸ், காஸ்ட்ரோவைச் சந்தித்த போது அவர்கள் இருவரும் உள்ளது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டது.
அதன் பின்னர் எந்தப் புகைப்படமும் வெளியிடப்படாத நிலையில், காஸ்ட்ரோ நலமாக இருப்பதை உலகிற்கு அறிவிக்கும் விதமாக ரஷ்ய தேவாலயத்தின் இணையதளத்தில் புதிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.