அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன்சிங், இந்திய மக்கள் உங்கள் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிடம் தெரிவித்துள்ளார்.
PTI Photo
FILE
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு நடப்புக் கூட்டத் தொடர் முடிவடைவதற்குள் அமெரிக்க நாடாளுமன்றம் அனுமதி வழங்கிவிடுமா என்ற பரபரப்பான சூழலில் அதிபர் ஜார்ஜ்-புஷ், பிரதமர் மன்மோகன்சிங் இருவரும் இன்று அதிகாலை சந்தித்தனர்.
சுமார் 40 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின் போது, நீங்கள் (புஷ்) அதிபராக இருக்கும் காலத்தில் இதுவே எனது கடைசி அமெரிக்க அரசுப் பயணமாக இருக்கும் எனக் கூறிய பிரதமர், இந்தியா-அமெரிக்கா இடையே உள்ள நெருக்கத்தை வலுப்படுத்த தாங்கள் எடுத்த முயற்சிகளால், இந்திய மக்கள் உங்கள் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளனர் என அதிபர் புஷ்ஷை பாராட்டியுள்ளார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த போது இரு தலைவர்களுமே மிகவும் மகிழ்ச்சிகரமாக காணப்பட்டதாகவும் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்து வரும் ஜார்ஜ் புஷ்ஷின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவடைவது நினைவில் கொள்ளத்தக்கது.