Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான நடவடிக்கை: சார்க் தலைவர்கள்!

Webdunia
திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (12:59 IST)
பயங்கரவாதத்தின் கரங்களில் சிக்கி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சார்க் நாடுகள், அதனை எதிர்த்துப் போராடுவதற்கு வலுவான கூட்டு நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தியுள்ள தெற்காசிய நாடுகளின் தலைவர்கள், அதுதொடர்பான ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்திட்டு உள்ளனர்.

கொழும்பில் ஆகஸ்ட் 2, 3ஆம் தேதிகளில் நடந்த சார்க் மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பயங்கரவாதத்துக்கு எதிராக வலுவான கூட்டு ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதில் சார்க் தலைவர்கள் உறுதியுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாதம், போதைப்பொருள் மற்றும் ஆள் கடத்தல் ஆகிய பிரச்சனைகளைத் தடுப்பதில் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், இந்த விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்க சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்களின் கூட்டத்தை இந்த ஆண்டின் பிற்பகுதியில் கூட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த கூட்டறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், சார்க் மேம்பாட்டு நிதியை ஏற்படுத்தி அதைக் கொண்டு சமூக மேம்பாட்டுத் திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்திலும் சார்க் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

மேலும், நீர்மின் சக்தி, எரிவாயுக் குழாய் ஆகியவற்றின் மூலம் பிராந்திய எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்வது, உணவுப் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், தடையில்லா வர்த்தகம் ஆகியவை குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

பயங்கரவாதம் பற்றிய விவாதத்தின் போது காபூல் இந்தியத் தூதரகம் அருகே நடந்த தற்கொலைத் தாக்குதல், பெங்களூரு, அகமதாபாத் நகரங்களில் சமீபத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் முக்கிய இடம் பிடித்தன. பயங்கரவாதமே நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கும் முக்கியக் காரணி என்பதையும் சார்க் தலைவர்கள் அப்போது ஒப்புக்கொண்டனர்.

நாடுகளுக்கு இடையே குற்ற விவகாரங்களில் பரஸ்பரம் சட்ட உதவிகளை அளிப்பது மற்றும் குற்றவாளிகளைப் பரிமாறிக் கொள்வது தொடர்பான உடன்பாட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் சார்க் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயணிகளின் கனிவான கவனத்திற்கு... நாளைக்கு மின்சார ரயில்கள் இயக்கம் எப்படி தெரியுமா?

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்... இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் 156 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்... களப்பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்!

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு புதிய சிறப்பு ரயில்கள்!

Show comments