இத்தாலியில் நடைபெற்ற ஜி- 8 நாடுகள் மாநாட்டில் முக்கிய விவாதப் பொருளாக புவி வெப்பமடைதல் ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் புவி வெப்பத்தை 2 டிகிரி செல்சியஸ் (3.6 ஃபாரன் ஹீட்) குறைக்கவும், கரியமில வாயு வெளியேற்றத்தை 80 விழுக்காடு குறைக்கவும் வளர்ந்த நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.
ஆனால் இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளை வெப்ப (கரியமில) வாயு வெளியேற்றத்தை 50 விழுக்காடு குறைக்குமாறு ஜி-8 நாடுகள் இந்த மாநாட்டில் வலியுறுத்த இயலாமல் போய்விட்டது.
சுமார் 5 மாதங்களில் ஐ.நா. வானிலை ஒப்பந்தம் கோபன்ஹேகனில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் ஜி-8 நாடுகள் இந்த ஒப்பந்தத்திற்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
2050 ஆம் ஆண்டிற்குள் வெப்ப வாயு வெளியேற்றத்தை 50 விழுக்காடு குறைக்கவேண்டும் என்ற ஒப்பந்தத்தில் இந்தியாவும் சீனாவும் கையெழுத்திட தயக்கம் காட்டின.
வளர்ந்த நாடுகள் வெப்ப வாயு வெளியேற்றத்தை குறுகிய காலத்தில் அதிக அளவில் கட்டுப்படுத்த வேண்டும் என்று வளரும் நாடுகள் கோரிக்கை வைத்தன. 2 டிகிரி சில்சியஸ் வெப்ப அளவை குறைக்க முதன் முறையாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் 80 விழுக்காடு வெப்ப வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கான கால வரம்பு குறிக்கப்படவில்லை. இதனால் இந்த திட்டம் எழுத்தளவில் மட்டுமே நிறைவேறக்கூடியது என்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது.
" அதிகரித்து வரும் வெப்ப அளவைக் குறைக்க ஒப்புக் கொண்டுள்ள நாடுகள், அதற்கான திட்டமிடுதலிலும், செலவழிக்கவுள்ள தொகை, மற்றும் இதனை எவ்வாறு சாதிப்பது போன்ற விஷயங்களில் ஐ.நா. வானிலை மாற்ற பேச்சு வார்த்தைகளில் எந்த வித பங்களிப்பையும் மேற்கொள்ளவில்லை" என்று கிரீன்பீஸ் இன்டெர்னேஷனல் அரசியல் ஆலோசகர் டோபியாஸ் முயென்ச்மெயர் என்பவர் சாடியுள்ளார்.
PIB Photo
PIB
இந்த மாநாட்டிற்கு இடையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பிரிட்டிஷ் பிரதாமர் கார்டன் பிரவுனுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இதில் புவி வெப்பமடைதலைக் குறைப்பதற்கான நடவடிக்கைத் திட்டத்தில் இந்தியாவின் அக்கறைகள் என்ன என்பதை வினா விடை வடிவத்தில் அடங்கிய குறிப்பாக கார்டன் பிரவுனிடம் அளித்தார் பிரதமர் மன்மோகன் சிங்.
தொழில் வளர்ச்சியில் முன்னேறிய நாடுகள் வெப்ப வாயு வெளியேற்றத்தை குறைப்பதில் உறுதியான நடவடிக்கைகளை இந்தியா கோருகிறது என்றும், வெப்ப வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் பசுமை தொழில் நுட்பங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் உதவி புரிவது அவசியம் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் வளர்ந்த நாடுகளிலிருந்து பசுமை தொழில் நுட்பங்களை வளரும் நாடுகள் குறைந்த விலையில் வாங்குவதற்கு வழி செய்யும் வகையில் அந்த நாடுகள் அதன் மீதுள்ள அறிவுசார் சொத்துரிமை விதிகளை தளர்த்த வேண்டும் என்றும் மன்மோகன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இது போன்ற பசுமை தொழில் நுட்பத் திட்டங்களை இந்தியாவும், பிரிட்டனும் சேர்ந்து கூட்டாக உருவாக்கிட வேண்டும் என்றும் மன்மோகன் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.