இப்புவியின் வட தென் துருவப் பகுதிகளிலும், இமாலயம் போன்ற நெடுதுயர்ந்த மலைகளின் சிகரங்களையும் வெள்ளாடை போர்த்தி அழகூட்டி அலங்கரித்துக் கொண்டிருக்கும் பனிப்பாறைகள் மெதுவாக உருகி, சொட்டுச் சொட்டாக விழுந்து, சிறு சிறு நீரோடைகளாகி, அவைகள் ஒன்றாகி ஆறாகப் பெருக்கெடுத்து பெரும் நதிகளாகி, நம் உயிர் வாழ்க்கைக்கு ஆதாரமான விவசாயத்தையும், எண்ணற்ற இயற்கை வளங்களையும் வாரி வழங்கி வருகின்றன.
கடும் வெப்பத்தால் இப்படி பனிப் பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக உருகி, நீர்த் துளிகளாய் விழுவது, நாம் வாழும் இப்புவி வெப்பமடைவதால் அதிகரித்து, வேகமாக உருகத் துவங்கியுள்ளதால் பெரும் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, விவசாய நிலங்கள் பாதிப்பிற்குள்ளாகி, உற்பத்தி பாதிக்கப்பட்டு உணவுப் பற்றாக்குறை உருவாகும் அச்சுறுத்தல் உலகளாவிய அளவில் ஏற்பட்டுள்ளது.
உலகளாவிய அளவில் தற்பொழுது ஏற்பட்டுள்ள உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க ஆண்டிற்கு 10 பில்லியன் டாலர்கள் தேவை என்று ரோம் நகரில் நடைபெற்றுவரும் உலக உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மாநாட்டில் பேசிய ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் கூறியுள்ளார். அந்த அளவிற்கு உணவுப் பற்றாக்குறை மிரட்டிக்கொண்டிருக்கிறது.
webdunia photo
K. AYYANATHAN
வட இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் வேளாண் வளத்திற்கு ஆதாரமாக இருந்துவரும் ஜீலம், பீயாஸ், சட்லஜ், சீனாப், ராவி நதிகள் இமாலய பனி மலைகளில் உருவாகித்தான் நம்மை காத்து வருகின்றன. இந்நதிகளைக் காக்க வேண்டுமெனில் நாம் வாழும் இப்புவியை வெப்பமடைதலில் இருந்து நாம் காத்திட வேண்டும்.
அதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும், நம்மைச் சுற்றி மிஞ்சியுள்ள இயற்கையை அழியாமல் காத்திடவும் வேண்டும்.
இன்று உலக சுற்றுச் சூழல் தினம். நம்மை வாழ வைக்கும் இப்புவியை காத்திட உறுதியேற்போம்.