ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ளது கடம்பூர் மலைப்பகுதி. இங்கு வசிக்கும் பல்வேறு பழங்குடி இன மக்களில் மலையாளி இனத்தை சேர்ந்தவர்களும் அடங்குவர். ஆனால் இவர்களை ஈரோடு மாவட்டத்தில் பழங்குடிகளாக அங்கீகாரம் செய்யவதில்லை. இவர்களுக்கு பழங்குடியின சான்றிதழ்கள் வழங்காத காரணத்தால் இவர்களின் குழந்தைகளின் கல்வி பெரிதும் பாதித்துள்ளது.
இந்த மலையாளி இன மக்கள் தமிழகத்தில் சேலம், நாமக்கல், கொல்லிமலை, திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் வசித்து வருகின்றனர். இவர்களை பழங்குடியினர்களாக அங்கீகாரம் செய்து அவர்களுக்கு பழங்குயினர் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் கடம்பூரில் வசிக்கும் மலையாளி இன மக்களுக்கு மட்டும் அதாவது ஈரோடு மாவட்டத்தில் மட்டும் இந்த பழங்குடியினர் சான்றிதழ் வழங்குவதில்லை.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையமும் கடம்பூரில் வசிக்கும் மலையாளி இன மக்கள் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் என பரிந்துரை செய்தும் இன்னும் இவர்கள் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படவில்லை. கோபிசெட்டிபாளையம் நாடாளுமன்ற தொகுதியாக இருந்தபோது அப்போது மத்திய அமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளங்கோவனும் இவர்கள் பிரச்சனையை தீர்பதாக உறுதி கொடுத்தார். ஆனால் வழக்கம்போல் ஏமாற்றமே மிஞ்சியது.
இதையடுத்து தொகுதி மறு சீரமைப்பில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் இணைந்து அதில் வெற்றிபெற்று மத்திய அமைச்சரான ராசாவும் இவர்கள் பிரச்சனையை கிடப்பில் போட்டார் என்பதே இந்த பகுதி மக்களின் குற்றச்சாட்டாகும். மாநிலத்தில் தி.மு.க., ஆட்சியும் மத்தியில் அதன் தோழமையான காங்கிரஸ் ஆட்சி நடந்தும் இந்த பிரச்சனைக்கு முக்கியதுவம் கொடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் கொந்தளிக்கின்றனர்.
இவர்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் கிடைக்க வேண்டும் என்றால் தமிழக அரசு பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு அனுப்பி பாராளுமன்றத்தில் சட்டதிருத்தம் செய்தால் மட்டுமே இவர்களுக்கு சான்றிதழ் கிடைக்கும். கடந்த தி.மு.க., ஆட்சியில் ஒரு மாநில அரசு பரிந்துரை செய்து அனுப்பியபோது மலையாளி என்று அனுப்புவதற்கு பதிலாக மலையாளி கவுண்டர் என அனுப்பியதால் மத்திய அரசு மீண்டும் திருப்பி அனுப்பிவிட்டதாக தமிழ்நாடு பழங்குடியினர் சங்கத்தின் பொறுப்பாளர் கடம்பூர் ராமசாமி குற்றம்சாட்டுகிறார்.
அதிகாரிகளின் அலட்சியத்தால் மத்திய அரசு வரை சென்று மீண்டும் தமிழகத்திற்கு வந்துள்ள கடம்பூர் மலையாளி இன மக்கள் பிரச்சனையை மீண்டும் மத்திய அரசுக்கு கொண்டு சென்று இவர்களுக்கு விடிவு ஏற்படுத்தி கொடுப்பவர்கள் யார் என்பதே இப்போதைய கேள்வி.