Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழைகள் பற்றிய நேர்மையற்ற கணக்கெடுப்பு!

Webdunia
புதன், 7 ஆகஸ்ட் 2013 (15:55 IST)
FILE
நமது மன்மோகன், பிரணாப், சிதம்பரம் போன்றவர்கள் அலுவாலியா போன்ற நிபுணர்கள் டிவி டீ.ஆர்.பி. ரேட்டிங்கை வைத்து இந்தியாவின் வறுமை நிலையை கணக்கிடும் தெய்வங்கள்!! என்ன செய்வது? இதுதான் அரசியல் பொருளாதாரம்! இதுதான் ஜனநாயகம்!

மன்மோகன் சிங், ப.சிதம்பரம் கூட்டணி ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி, உலகமய "வளர்ச்சி' பொருளாதாரத்துடன் கைகோர்த்துள்ளதை நியாயப்படுத்த நேர்மையற்ற முறையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பற்றிய கணக்கெடுப்பு திட்டக் கமிஷனால் நடத்தப்படுகிறது.

நகர்ப்புறங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் 13.7% குறைந்ததாகவும், கிராமப்புறங்களில் 25.7% குறைந்ததாகவும் கணக்கு காட்டியுள்ளது திட்டக்கமிஷன்.

அதாவது நகர்ப்புறங்களில் மாதம் ரூ.1000 சம்பாத்தியம் சாத்தியமாகியுள்ளதாம்! கிராமப்புறங்களில் மாதம் ரூ.816 சாத்தியாம்கியுள்ளதாம். இதனால் நகர்ப்புறங்களில் தினசரி ரூ.33க்கு நுகர்பவர்களும், கிராமப்புறங்களில் ரூ.27க்கு நுகர்பவர்களும் அதிகரித்துள்ளதால் வறுமை ஒழிந்ததாம். ஒரு ஆண் முடிவெட்டிக் கொள்ளும் பைசாக்கள் இவை என்று கூடவா திட்டக்கமிஷன் பொருளாதார போலி நிபுணர்களுக்கு தெரியாமல் போய்விடும்.

இவர்களின் நேர்மையற்ற கணக்கீட்டின் படி பார்த்தால் 2014-15 இல் இந்தியாவில் வறுமை ஒழிந்துவிடும். அதாவது நகர்ப்புறங்களில் வறுமையில் வாழ்பவர்களே இல்லை. கிராமப்புறங்களில் 12% தான் இருக்கின்றனர். அதையும் அடுத்த கணக்கீட்டில் சரி கட்டிவிடலாம்!! இது எப்படி இருக்கு?

ஆனால் யதார்த்தத்தில் நிலைமை என்ன?

FILE
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள் என்பதே! 2009-10 நிலவரப்படி ஒரு மனிதன் அத்தியாவசிய தேவைகளை அதாவது உணவல்லாத பிற அத்தியாவசிய பொருட்களின் தேவையை பூர்த்தி செய்து கொண்ட பிறகு உடலுக்கு தேவையான 2200 கலோரி உணவு எடுத்துக் கொள்ளமுடிவதில்லை என்பதே உண்மை. நகர்ப்புறங்களில் 73 சதவீதத்தினர் உணவல்லாத செலவினங்களை செய்து முடித்து நாளொன்றுக்கு 2,100 கலோரி சக்தி தரும் உணவை உண்ண முடிவதில்லை. இதுதான் யதார்த்தம்! ஆனால் மத்திய அரசும், திட்டம்க்கமிஷனும் புருடா விட்டுக் கொண்டு திரிகின்றன. பணவீக்கம், இறக்குமதிக்கு செலவாகும் மிகப்பெரிய தொகை, வரி வசூல் செய்யவேண்டிய துறைகளில் சலுகைகள், இதிலெல்லாம் வளர்ச்சிப் பொருளாதாரம் இல்லை! ஊழல் பொருளாதாரமே மித மிஞ்சியுள்ளது.

கல்வி பற்றி கேட்கவே வேண்டாம், கட்டணக்கொள்ளை, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத் துறைகளில் நடக்கும் கொள்ளை வசூல், உணவுப்பொருட்களின் அநியாய விலை, வேலைவாய்ப்பில் கடும் சரிவு இந்த நிலைமைகளில் ஒரு மாற்றமும் கொண்டு வர முடியாத மோசமான அரசு வறுமையை ஒழித்து விட்டோம் என்று புருடா விட்டால் அதனை ஒருவரும் நம்பப்போவதில்லை.

இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானோருக்கு ஊட்டச்சத்து உணவு கிடைப்பதேயில்லை. ஒரு பள்ளிக்கூடம் தனது பாஸ் மார்க் Level- ஐ குறைத்துக் கொண்டே சென்று கடைசியில் எங்கள் பள்ளி 100% தேர்ச்சி பெற்று விட்டது என்று கூறினால் எவ்வளவு ஏமாற்று வேலையோ அதைத்தான் இந்திய அரசும் செய்கிறது. திட்டக்கமிஷனின் கணக்கீட்டு முறைமை நேர்மையற்றதாகும். அதனால் பிரைஸ் இன்டெக்ஸ், சம்பள உயர்வு ஆகியவற்றை வைத்து வறுமையை கணக்கிடுகிறது. மாதம் எவ்வளவு பணம் இருந்தால் ஒரு குடும்பம் வறுமைக் கோட்டிற்கு கீழிருந்து மேலே வரும் என்ற உண்மை கணக்கீட்டை விடுத்து இவர்களாகவே ஒரு உத்தேசத் தொகையை கூறி அதன் மூலம் வறுமை குறைந்து விட்டது என்று சுய தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர்.

12 ரூபாய்க்கு சாப்பாடு கிடைக்கிறது. இல்லை இல்லை எங்கள் ஊரில் 5 ரூபாய்க்கு கிடைக்கிறது. இல்லையில்லை ஒரு ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரைக்கும் சாப்பாடு உள்ளது. சாப்பிடுபவரின் விருப்பத்தைப் பொறுத்ததுதான் என்றெல்லாம் ஒரே உளறல் மயம். இதற்கு எதிர்ப்பு என்ற பெயரில் ஒரு கேலிக்கூத்து. இதனை கவர் செய்யும் மீடியாக்கள். உடனே 4 பேரை கூப்பீட்டு அவர் இப்படி கூறியிருக்கிறாரே, இவர் இப்படி கூறியிருக்கிறாரே என்று! உண்மையான அரசியல் பொருளாதாரம் என்றால் என்னவென்று தெரியுமா இவர்களுக்கு?

திருடித் தின்றால் காசே செலவில்லாமல் சாப்பிடலாம்! எல்லாம் நேர்மையாக உழைத்து அந்த வருமானத்தில் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களிடத்தில் உள்ள பிரச்சனை என்று நாளை மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மாதவருமானம் ரூ.5000 கூட இல்லாதவர்கள் நாட்டின் மக்கள் தொகையில் 90% என்றால் நாம் நம்புவோமா? இவர்கள் வறுமைக்கோட்டை ரூ.1040, என்று கூறிவிட்டால் இந்தியா வறுமையிலிருந்து மீண்டதாக ஆகிவிடுமா? பாஸ்மார்க் 25 என்று ஆக்கிவிட்டு எல்லோரும் பாஸ் எங்கள் ஸ்கூல்தான் சிறந்தது என்று யாராவது கோரினால் சிரிக்க மாட்டோமா நாம்?

அடுத்த ஆண்டு திட்டக்கமிஷன் மனிதன் உயிர்வாழ மாத வருவாய் 450 இருந்தால் போதும் என்று கூறி இந்தியாவில் வறுமையை ஒழித்து விட்டோம் என்பார்கள். பக்கா ஏமாற்று வேலைக்கு இதைவிட உதாரணம் கூற முடியுமா?

இன்ஸூரன்ஸ் பாலிசிக்கு சேவை வரி, பள்ளிகளுக்கு சேவை வரி என்று மக்களை ஓட ஓட விரட்டும் இந்த மத்திய அரசு ரிலையன்ஸ் அடிக்கும் கொள்ளையில் பாதியைத் தடுத்தாலே வறுமை பாதி ஒழியும் என்றுதான் வல்லுனர்கள் கூறுகின்றனர். வரியை வசூலிக்கவேண்டிய இடங்களில் ஏகப்பட்ட சலுகைகளை வழங்குவது என்பதுதான் ஊழலின் ஊற்றுக்கண்.

FILE
வெனிசூலாவில் முதலில் மறைந்த புரட்சி அதிபர் கையை வைத்தது தனியார்மயமாக்கலைத்தான். அவர் போன்று ஒருவர் இங்கு வந்தால் முதலில் கொழிக்கும் டெலிகாம் பிரிவில் பல நிறுவனங்கள் மூட்டைக் கட்டிக் கொண்டு ஓட வேண்டியதுதான்! அனைத்தும் பி.எஸ்.என்.எல். தான், அரசுதான் என்று அதிரடி முடிவெடுப்பார்.

இன்று ஏர்டெல், ஏர்செல், வோடபோன் போன்ற தனியார் ஜாம்பவான்கள் செய்யும் சட்டரீதியான வரி ஏய்ப்புகள், சட்டத்தை ஏமாற்றி பெட்டி கொடுத்து செய்யும் ஏய்ப்புகளை ஒழிக்க முடியுமா? பாஜக செய்யுமா? மோடி இந்தியாவை புரட்டி போட்டு விடுவாரா? ஏதோ மோடியை மோடி மஸ்தான் போலவும் மந்திர வித்தை தெரிந்தவர் போலவும் அனைவரும் காட்டுகின்றனர். தீவிர மாற்றங்கள் எதையும் இந்திய அமைப்பில் அவரால் செய்து விட முடியுமா?

மக்களின் சுமையைக் குறைத்து உற்பத்தியைப் பெருக்க வேண்டிய துறைகளையெல்லாம் தனியார் மயமாக்கி தனது பொறுப்புகளை கைகழுவி வருவதை ஒரு ஆட்சி என்று வெட்கங்கெட்டத் தனமாக உரிமை வேறு கொண்டாடுகிறது.

உலக வர்த்தக ஒப்பந்தங்களின்படி எந்த ஒரு தேச அரசும் அதாவது ஏழை நாடுகளின் தேச அரசுகளும் மக்கள் நலனுக்கான எந்தக் கொள்கைகளையும் வகுத்து விட முடியாது.

உணவு தானிய ஜாம்பவான் நிறுவனங்கள், அதாவது மிகப்பெரிய நிறுவனங்கள், இந்தியா, பாகிஸ்தான், மட்டுமல்ல பல ஏழை நாடுகளை வாங்கும் அளவுக்கு பணம் படைத்த நிறுவனங்கள். அவற்றிடம் உணவுச்சந்தையை அடகு வைத்து விட்டால், பிறகு பொது வினியோகம் என்ற ஒன்று இந்தியாவில் தேவையில்லாமல் (?!) நடந்து கொண்டிருக்கிறது அல்லவா? அதையும் முற்றிலும் ஒழித்து விடலாம். மேலும் கோடிக்கணக்கான ஏழைகளை நடுத்தெருவுக்கும், குப்பைத் தொட்டிகளிலும் சாக்கடைகளிலும் தள்ளிவிடலாம். தாராளமயக் கொள்கையின் அடிப்படை லட்சியம் பாதி முடிந்து விடும்.

இந்த நிலையில் ஏழைகளைக் கணக்கிடுவதில் மோசடியான கணக்கீடுகளை வெளியிட்டு உண்மையான ஏழைகளின் அளவை குறைத்துக் காட்டி மக்களை மேலும் சாக்கடைக்குள் தள்ளுவதே இவர்களது திட்டம்!

அலுவாலியா போன்ற மண்டைகளின் களிமண்ணை ஊர்ஜிதம் செய்ய ஊடகங்கள் எந்த ஊரில் என்ன விலைக்கு சாப்பாடு கிடைக்கிறது என்று பரபரப்பு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதற்கு ஒரு எதிர்ப்பு, இரண்டு பேர் மறுப்பு என்று ஒரே பம்மாத்து!!

இதுதான் ஜனநாயகம்! காணி நிலம் வேண்டும் பராசக்தி என்று பாரதியார் வேண்டினார். நாடு போகப்போக ஒரு பருக்கை சோறு கொடுங்க சாமி என்று பிச்சைக்காரர்கள் எண்ணிக்கைதான் பெரும்பான்மையாக இருக்கும்.

நமது மன்மோகன், பிரணாப், சிதம்பரம் போன்றவர்கள் அலுவாலியா போன்ற நிபுணர்கள் டிவி டீ.ஆர்.பி. ரேட்டிங்கை வைத்து இந்தியாவின் வறுமை நிலையை கணக்கிடும் தெய்வங்கள்!! என்ன செய்வது? இதுதான் அரசியல் பொருளாதாரம்! இதுதான் ஜனநாயகம்!
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

Show comments