ஆனால் இத்தனை ஆண்டுகால மழை, வெள்ளம், காற்று ஆகியவற்றால் நிலத்தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட மண்டையோடுகளும், எலும்புக்கூடுகளும் வெளியே வரத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்துத் தெரிவித்த பயணி ஒருவர், இன்னும் பதுங்குகுழிக்குள் பெண்களின் சேலைகள், குழந்தைகளின் உடைகள், சூட்கேஸ்கள் திறந்த நிலையில், இவையெல்லாவற்றுக்கும் மேலாக மனித எலும்புகள் மண்டையோடுகள் என அந்தப்பகுதி கண்ணால் காண முடியாத கொடூரமான பகுதியாக உள்ளது என்று தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் என்ற கடற்கரை கிராமத்தில் தான் விடுதலைபுலிகள் கடைசியாக 1,50,000 மக்களுடன் இருந்தனர். இந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் தான் மிக மோசமான போர் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் நடந்தது என்று ஐநா தெரிவித்துள்ளது.
2009 போரின் இறுதி நாட்களில் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் போப் ஆண்டவருக்கு எழுதிய கடிதத்தில், ஒரே இரவில் 3000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், 4000 மக்கள் படுகாயமுற்று இருந்ததாகவும் எழுதியிருந்தார். மேலும் இந்தத் தாக்குதலில் ஆர்டிலெரிகள், மோட்டார்கள், பல்குழல் எறிகணைகள், கொத்து குண்டுகள் ஆகியவை பொதுமக்கள் வாழும்பகுதிகளில் தடை செய்யப்பட்ட குண்டுகளை பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ள அப்பாவி மக்கள் மீது பிரயோகித்தனர் என்று அந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.
இந்தத் தாக்குதலின்போது எழும்பிய நச்சுப் புகையாலும், மாசடைந்த காற்றாலும், ஆரோக்கியமற்ற வாயுக்களாலும் பல குழந்தைகளும், சிறுமிகளும், பெண்களும், வயதானவர்களும் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறி இறந்தனர் என்று தெரிவித்திருந்தார்.
போர் முடிந்த பின்னர் இந்தக் கடிதத்தை எழுதிய பாதிரியார் தடயமின்றி மாயமானார்.
போர் முடிந்து இந்த மூன்றரை ஆண்டுகாலமும் முள்ளிவாய்க்கால் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. தற்போதும் கூட அதிக அளவிளான சிங்களக் காவல்துறையும் இராணுவமும் அங்கு குவிக்கப்பட்டுள்ளது. எப்போதும் இருசக்கர வாகனத்தில் சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள் எனவும், அவர்கள் சாலையில் செல்லும் யாரையும் இழுத்து விசாரணை என்ற பெயரில் கொண்டு செல்ல முடியும் என்று தெரிவிக்கின்றனர்.
மேலும் அங்குள்ள உள்ளூர்வாசிகள் யாரும் வெளியிலிருந்து வரும் பயணிகளிடம் அங்கு உள்ள நிலவரம் குறித்தோ அரசியல் சூழல் குறித்தோ பேசுவதற்கு அஞ்சுவதாகத் தெரிவித்தனர். மேலும் அங்குள்ள விதவைகளைக் கட்டாயப்படுத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதால் சிலர் தனியான வாழ்விடங்களைத் தேடி போகின்றனர்.
பல பத்தாண்டுகளாக போராளிகளின் நிர்வாகத்தில் இருந்த வடக்கு மாகாணத்தைப் பார்வையிட பல்லாயிரக்கணக்கான மக்கள் தெற்கிலிருந்து வருகின்றனர். இலங்கையின் இந்த சுற்றுலாப் பயணிகள் பேருந்துகளில் வந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீடு, பதுங்குகுழிகள், துப்பாக்கியில் சுட்டு பயிற்சி எடுக்கும் பகுதி, நீச்சல் குளம் ஆகியவற்றைப் பார்வையிட்டுச் செல்கின்றனர்.
ஆனால் இந்தப் பகுதிகளில் உள்ள இடங்களுக்கு தெளிவாக தீவிரவாதிகளின் இடம் என பெயரிட்டுள்ளனர். உதாரணமாக தீவிரவாதியின் நீச்சல்குளம் என்று பெயரிட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்களை ஒரே இடத்தில் கொன்ற பகுதியில் தேனீர்க்கடை நடத்துகின்றனர். இலங்கை இராணுவத்தினர் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு தேனீர் வழங்குகின்றனர். அந்தப்பகுதியில் எந்த இடத்திலும் மக்கள் ஒட்டுமொத்தமாக உயிரிழந்ததற்கான குறிப்போ, வாசகமோ, கல்வெட்டோ இல்லை. இந்தப் பகுதியில் தான் இலங்கை இராணுவம் தொடர்ச்சியாக வேண்டுமென்றே மருத்துவமனைகள் மீது, உணவு வழங்கும் இடங்கள் மீது, பாதுகாப்பு வளையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்தப்பகுதியில் 2009-ஆம் ஆண்டு ஒவ்வொரு தமிழ் குடும்பத்திலும ் குறைந்தது ஒரு நபராவது இறந்திருப்பார்கள்.
இனப்படுகொலைகளின் தடயங்களை அழிக்க அதனை ஏதோ சுற்றிப்பார்க்கவேண்டிய இடமாக மாற்றியுள்ளது ராஜபக்சவின் அரசு.