Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டு பிறக்கட்டும், புது வழி காட்டட்டும்

கா. அய்யநாதன்

Webdunia
சனி, 31 டிசம்பர் 2011 (20:32 IST)
FILE
புத்தாண்டுப் பிறப்பு என்பது ஒரு நாட்காட்டியின் முடிவும், புதிதாக பயன்படுத்தப்போகிற மற்றொரு நாட்காட்டியின் வருகை என்பதைத் தவிர, அதற்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியும்? என்று வினவுபவர்கள் உண்டு.

ஆனால் ஒரு புதிய ஆண்டின் பிறப்பில் நல்லது நடக்கும், நல்லதே நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு கொண்டாடும் மக்களே உலகெங்கிலும் அதிகம். தங்களாலும், தாங்கள் தேர்வு செய்யும் அரசுகளாலும், அரசமைப்பின்படி ஏற்படுத்தப்பட்ட ஆட்சி நிர்வாகத்தாலும் பல பத்தாண்டுகளாக எதையும் சாதிக்காத நாடுகளில் காலத்தையும், அதன் மாற்றத்தையும் நம்பிக்கையோடு மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே புத்தாண்டு பிறப்பு என்பது, அது தமிழ்ப் புத்தாண்டாக இருந்தாலும், ஆங்கில புதிய ஆண்டாக இருந்தாலும், தைப் பிறப்பாக இருந்தாலும் அதற்கு மக்கள் மனதில் மிகுந்த முக்கியத்துவம் உண்டு.


அப்படி ஒரு எதிர்பார்ப்போடுதான் நாளை பிறக்கிறது 2012. ஒவ்வொரு ஆண்டையும் விட அடுத்துப் பிறக்கும் ஆண்டின் மீது அதிகமான நம்பிக்கை ஏற்படுகிறது. அதுவே நாளை பிறக்கும் புதிய ஆண்டின் மீதும் உள்ளது. இன்றோடு முடியும் கி.பி. 2011ஆம் ஆண்டு பொருளாதார ரீதியாக - 2008ஆம் ஆண்டைப்போல் - உலகிற்கு மிக மோசமான ஆண்டாக இருந்தாலும், இந்த ஆண்டு பல எழுச்சிகளை மானுடத்தில் ஏற்படுத்தியது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னமைந் த அரசுகளில் பல ஜனநாயக அரசுகளாக தங்களைக் கூறிக்கொண்டாலும், அரசமைப்பிலும் ஆட்சி முறையிலும் அவை வெகுசன விரோத அரசுகளாக இருந்தன. அதன் விளைவாக மக்கள் நலன், உரிமை, எதிர்காலப் பாதுகாப்பு ஆகிய முக்கிய அடிப்படைகள் புறக்கணிப்பட்டது. இந்த ஏற்பட்ட குமைச்சல் இந்த ஆண்டில்தான் ஜனநாயகப் புரட்சிகளாக வெடித்தது. மல்லிகைப் புரட்சியாக டூனிசியாவில் வெடித்தது. அது பெரும் மக்கள் புரட்சியாக எகிப்து அரசுக்கு எதிராக மலர்ந்தது. பல பத்தாண்டுகளாக, உலகின் முதன்மை வல்லரசின் துணையுடனும், இராணுவத்தின் ஆதரவுடனும் நிகழ்ந்துவந்த சர்வாதிகார அரசு வீழ்ந்தது. ஹோஸ்னி முபாரக் அயல் நாட்டிற்குத் தப்பி சென்றதால் பிழைத்தார். இப்போது அங்கு உண்மையான ஜனநாயக அரசு அமைவதற்கான செயல்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

எகிப்தைத் தொடர்ந்து மேலும் பல மத்திய கிழக்காசிய நாடுகளில் மக்கள் ஜனநாயகப் புரட்சி வெடித்தது. சிரியா, லிபியா, பஹ்ரைன் ஆகிய நாடுகளிலும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் அரசு ஒடுக்குமுறையில் கொல்லப்பட்டனர். ஜனநாயகத்தைத் தவிர அனைத்தையும் தனது மக்களுக்கு அளித்த லிபிய அதிபர் கர்னல் முவம்மர் கடாஃபியின் 40 ஆண்டுக்கால ஆட்சி முடிவிற்கு வந்தது. தனது நீண்ட கால எதிரியை வீழ்த்த சந்தர்பத்தை எதிர்பார்த்திருந்த அமெரிக்க வல்லரசு, நேச நாடுகளுடன் இணைந்து அரசுக்கு எதிரான படைகளுக்கு முழு ஆதரவு அளித்து கடாஃபியின் ஆட்சி அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது மட்டுமின்றி, அவரை கொடூரமாக கொலை செய்து பழி தீர்த்துக்கொண்டது.

எகிப்தைப் போலவே, லிபியாவிலும் அந்நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் ஜனநாயக ஆட்சி அவ்வளவு சுலபமாக அமைந்துவிடாது. ஏனெனில் தனக்குத் தோதான, லிபியாவின் எண்ணெய் வளங்களை வளைத்துப் போட வழி விடும் ஒரு அரசை - அங்குள்ள கட்சிகளைக் கொண்டு உருவாக்கிய பின்னரே தேர்தல் நடத்த அமெரிக்க சம்மதிக்கும் என்பதை அறியாதார் யாரும் இருக்க முடியாது. ஆயினும், ஒரு சர்வாதிகார ஆட்சியை ஒன்றிணைந்து வீழ்த்தும் வல்லமைப் பெற்ற மக்கள் சக்தியால், சர்வதேச சர்வாதிகாரத்தின் சதித் திட்டத்தை முறியடிக்க முடியாதா என்ன?

எனவே, மத்தியக் கிழக்காசியாவிலும், வட ஆப்ரிக்காவிலும் உருவான மக்கள் ஜனநாயகப் புரட்சிகள் மற்ற பல அரசுகளுக்கு மட்டுமின்றி, ஆட்சித் தலைமைகளை கைக்குள் போட்டுக்கொண்டு அந்நாட்டு வளங்களைச் சுரண்டிக் கொழுக்கும் வல்லரசுகளின் வயிற்றிலும் புளியைக் கரைத்துக்கொண்டுதான் இருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான், கடன் சுமை மிகப் பெரிய அச்சுறுத்தலாகி கிரீஸ் நாட்டை ஆட்டம் காணச் செய்தது. அதனைத் தொடர்ந்து ஐரோப்பாவின் வலிமையான நாடான இத்தாலியின் பொருளாதாரமும் திண்டாட்டத்தில் உள்ளது. ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ள கடன் சுமை ( Debt Burden) இந்தியா உள்ளிட்ட உலகப் பொருளாதாரத்தை புரட்டிப்போட்டுள்ளது. 2008ஆம் ஆண்டில் வீட்டுக் கடன் சிக்கலால் உருவான பொருளாதாரப் பின்னடைவை விட மிகப் பெரிய பின்னடைவு கடன் சுமை அழுத்தத்தால் ஏற்படும் என்று உறுதியாகக் கூறப்படுகிறது.

2012 ஆம் ஆண்டில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தப்போகும் கடன் சுமை, மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் உள்ள நாடுகளை பெரும் பாதிப்பிற்கு உட்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனால் தொழில், வர்த்தகம், வேலை வாய்ப்பு ஆகிய மூன்று துறைகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கான சமிக்ஞைகள் தெரிய ஆரம்பித்துள்ளன. இதனை வளர்ந்த நாடுகள் எப்படி சமாளிக்கப்போகின்றன என்பதை விட, இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து தங்களுடைய பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்திக்கொண்டிருந்து ஜப்பான், சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் எவ்வாறு சமாளிக்கப் போகின்றன என்பதே பெரும் கேள்வியாகும்.

ஜனநாயகப் புரட்சிகள், பொருளாதார சிக்கல்கள் ஆகியவற்றோடு உலகின் நீண்ட கால போர்க்களங்களாகியுள்ள ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கப்போகிறது என்பது இந்த ஆண்டின் முக்கிய எதிர்ப்பார்ப்பாகும். பாகிஸ்தானின் ‘நட்புடன ்’ ஆப்கானிஸ்தானில் தனது ‘பயங்கரவாத ஒழிப்புப் போர ை ’த் தொடங்கிய அமெரிக்கா, இன்று பாகிஸ்தானிற்குள் தனது ஆளில்லா விமானங்களை செலுத்தி குண்டு வீசித் தாக்குதல் நடத்தத் தொடங்கியதும், அதன் உச்சகட்டமாக ஒரு தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவத்தினர் 24 பேர் கொல்லப்பட்டதும் அவர்களுக்கு இடையிலான உறவிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இதனை இரு நாடுகளும் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அதுவே உண்மையாகும். ஆப்கானிஸ்தானில் ஜனநாயக அரசை வலுப்படுத்திவிட்டு வெளியேறுவது என்கிற அமெரிக்காவின் திட்டம் தவிடுபொடியாகிவிட்டது.

2003 ஆம் ஆண்டில் ஆக்கிரமிப்பு செய்த ஈராக்கில் இருந்து எவ்வாறு வேறு வழியின்றி வெளியேறியதோ, அதேபோல் ஆப்கானிஸ்தானில் இருந்தும் அது வெளியேறும் நிலை உறுதியாகியுள்ளது. இதன் மூலம் ஆயுத வல்லமையைக் கொண்டு அமைதி ஏற்படுத்துவது என்பதும், ஜனநாயக அரசை உருவாக்குவது என்பதும் இயலாத காரியம் என்பது நிரூபணமாகியுள்ளது. அமைதியும், ஜனநாயகமும் மக்கள் சக்தியால் மட்டுமே நிகழ்த்தப்பட முடியும் என்பது 6 மாத கால புரட்சியால் எகிப்தில் சாத்தியமாகியுள்ளது.

அதே நேரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகள் ஆதரித்த இலங்கைப் போரில் கொல்லப்பட்ட ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்கிற முனைப்பு இந்த ஆண்டில் எள் முனை அளவிற்குக் கூட சர்வதேச நாடுகளால் முன்னெடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். மனித உரிமைகள், மானுடச் சட்டங்கள், பிரகடனங்கள் ஆகியன பற்றி அன்றாடம் பேசும் உலக நாடுகள், ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மட்டும் பேசத் தயங்குகிறார்கள். போஸ்யாவில் இருந்து சிறிபிரின்னிசா முகாமில் 8,000 முஸ்லீம்கள் செர்பிய இராணுவம் கொன்றொழித்ததை இனப் படுகொலை என்று கூறி, அந்நாட்டு அதிபரையும், கொல்வதற்கு உத்தரவிட்ட ஜென்ரல் ராட்கோ மிலாடிச்சையும் சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியுள்ள சர்வதேசமும், அதன் சட்டங்களும், ஒன்றே முக்கால் இலட்சம் ஈழத் தமிழர்களை கொன்றொழித்த மகிந்த ராஜபக்சவை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தத் தயக்கம் காட்டி நிற்கின்றன.

மகிந்த ராஜபக்ச ஒரு தேர்ந்த அரசியல்வாதி, இலங்கையில் பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்று ‘ஜனநாய க' ரீதியாக அதிபராகியுள்ளார். தன் மீதும், தனது அரசு மீதும் கூறப்படும் குற்றச்சாற்றுகளுக்கு சமீபத்தில் பேட்டியளித்த ராஜபக்ச, ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் குண்டு வீசி அன்றாடம் மக்களைக் கொன்றுக்கொண்டிருப்பவர்கள்தான் எனது அரசைப் பார்த்து போர்க்குற்றவாளி என்று குற்றஞ்சாற்றுகிறார்கள் என்று கூறியுள்ளார். இதற்கு எந்த ஒரு அரசும் பதில் கூறவில்லை. குற்றவாளிகள் நிறைந்த சமூகத்தில் நேர்மையாளன் பைத்தியக்காரன்தானே? அந்த நிலைதான் ஈழத் தமிழ் மக்கள் பட்ட துயரத்திற்கு நியாயம் கிடைக்காமல் தடுக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள் மீது கூறப்பட்ட ஊழல் குற்றச்சாற்றுகளால் நாட்டின் மானம் கப்பலேறிக்கொண்டிருக்கிறது. ஊழல் முறைகேடுகளால் நாட்டிற்கு ஏற்பட்ட நட்டம் பல இலட்சம் கோடிகளைத் தாண்டியுள்ளது. 65 ஆண்டுக்கால ஜனநாயக இந்தியாவிற்கு இதுவும் ஒரு சாதனையே. சுவிஸ் வங்கிகளின் இரகசியக் கணக்குகளில் கருப்புப் பணத்தைப் போட்டு வைத்துள்ள நபர்களின் பட்டியலில் இந்த நாட்டின் முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியின் பெயரும் உள்ளதென மாநிலங்களவையில் மூத்த வழக்குரைஞரும், முன்னாள் அமைச்சருமான ராம் ஜெத்மலானி குற்றஞ்சாற்றினார். அதனை மறுக்கு முடியாத மத்திய அரசு, குற்றச்சாற்றை திரும்பப் பெறுங்கள் என்று மன்றாடுகிறது!

உள்நாட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வக்கற்றதாக இந்நாட்டு நடுவன் அரசு உள்ளது. பொருளாதார நிபுணர்களை பிரதமராகவும், திட்ட ஆணையத்தின் துணைத் தலைவராகவும் கொண்டுள்ள மத்திய அரசால், காய்கறி, பழ வகைகள், பால், முட்டை விலைகளைக் கூட கட்டுப்படுத்த முடியவில்லை. பொருளாதார சீர்த்திருத்தத்தின் மூலம் நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற இந்த மாமேதைகளால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 54 ஆக சரிந்துள்ளது. ரூபாயின் மதிப்பை தூக்கி நிறுத்த ஜப்பானுடன் ஒப்பந்தம் போடுகிறது மன்மோகன் சிங் அரசு.

இப்படி திரும்பிய திக்கெங்கிலும் இருளாய் படர்ந்துள்ள நிலையில்தான் 2012 பிறக்கிறது. இந்த ஆண்டு பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் ஆண்டாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உலகளாவிய பொருளாதாரம், தாராள மயமாக்கல், தனியார் மயமாக்கல் ஆகியன மந்திரங்களாக இருந்த நாடுகளில் இந்தப் பொருளாதார சிதைவு கருக்கொள்கிறது என்பதுதான் கவனிக்கத்தக்கது. இதில் இருந்து ஒரு புதிய பொருளாதார பார்வை பிறக்கலாம், அது நாடுகளுக்கிடையிலான நிறுவன பொருளாதார உறவைக் காட்டிலும் சிறந்ததாகவும் அமையலாம், இன்றுள்ள பல சிக்கல்களுக்குப் புதிய தீர்வுகளையும் தரலாம். எல்லாம் காலத்தின் கையிலும், இறைவனின் சித்தத்திலும் உள்ளது என்று கருதுவோம்.

இருளுக்கு முடிவு உண்டு. அது ஒளியால் பிறக்கும். அந்த நம்பிக்கையோடு 2012ஆம் ஆண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments