Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஜி: ராசா, மாறனை காப்பாற்றுகிறதா மத்திய அரசு?

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2011 (18:22 IST)
2 ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் அரசுக்கு இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று "டிராய்" ஒருபுறம் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு நற்சான்றிதழ் அளித்துள்ள நிலையில், மறுபுறம் சிபிஐ-யும் நேற்று தாக்கல் செய்த தனது
PTI Photo
FILE
விசாரணை அறிக்கையில் தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று கைவிரித்துள்ளதால், காட்டிக்கொடுப்பு பயத்தில் மத்திய அரசு 2ஜி வழக்கின் போக்கை மாற்றுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படாமல் போனதால், அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா பதவி விலகினார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் 2ஜி வழக்கை விசாரித்து வந்த சிபிஐ,நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முதல் குற்றப்பத்திரிகையில் ராசாவின் பதவிக் காலத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் அரசுக்கு ரூ. 33 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் அரசுக்கு இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தொலைத் தொடர்பு துறையின் அதிகாரம் மிக்க அமைப்பாக கருதப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான "டிராய்" தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் "டிராய்" நேற்று அளித்துள்ள விளக்கத்தில்,"முன்னாள் அமைச்சர் ராசா, அரசின் கொள்கையை பின்பற்றியே 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையை செய்தார்.தனது பதவிக்காலத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை ராசா தவறாக கையாண்டுள்ளார் என்று சொல்வது தவறானது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் இழப்புகளை நிர்ணயிப்பது வித்தியாசம் அல்ல.அரசின் கொள்கைப்படியே 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை நடந்துள்ளதால், இழப்பு ஏற்பட்டிருக்க முடியாது" என்று கூறியுள்ளது.

டிராய் ஒருபுறம் இவ்வாறு ஆ.ராசாவுக்கு நற்சான்று அளித்துள்ள நிலையில், இதே 2ஜி வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் சிபிஐ-யால் நற்சான்று பெற்றுள்ளார்.

தயாநிதி மாறன் தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது, 2ஜி ஒதுக்கீடுக்கு விண்ணப்பித்த ஏர்செல் நிறுவனத்திற்கு அலைக்கற்றை உரிமத்தை ஒதுக்கீடு செய்யாமல் இழுத்தடித்ததாகவும், அந்நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவை சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு தொழில் அதிபர் சிவசங்கரனை மிரட்டினார் என்பதும், பின்னர் ஏர்செல் பங்குகள் மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டதும், அதுவரை வழங்கப்படாமல் இருந்துவந்த 2ஜி உரிமங்கள் ஏர்செல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது என்பதுதான் தயாநிதி மாறன் மீது எழுந்த குற்றச்சாட்டு ஆகும்.

அத்துடன் மேக்ஸிஸ் நிறுவனம் தயாநிதி மாறனின் குடும்ப நிறுவனமான சன் குழுமத்தின் ஒரு அங்கமான சன் டிடிஎச்-இல் முதலீடு செய்ததாகவும், இது மேற்கூறிய முறைகேட்டுக்காக பெற்ற ஆதாயமே என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் கடந்த ஜூலை 6 ஆம் தேதியன்று சிபிஐ தாக்கல் செய்த விசாரணை நிலை அறிக்கையில், தயாநிதி மாறனின் கட்டாயத்தின் பேரில்தான் ஏர்செல் நிறுவனம் மலேசிய நிறுவனத்துக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2ஜி வழக்கில் தனது புதிய விசாரணை நிலை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் நேற்று சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்தது.

அதில் 2001-2007ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தொலைத்தொடர்பு உரிமங்கள் வழங்கப்பட்டதில் எந்த சக்தியும் நிர்பந்தப்படுத்தியிருப்பதற்கான முகாந்திரம் இல்லை என்றும், ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவை சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு
PTI Photo
FILE
விற்குமாறு அதன் அப்போதைய அதிபர் சிவசங்கரனை தயாநிதி மாறன் மிரட்டியதற்கு போதுமான ஆதாரம் ஏதுமில்லை என்றும் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு ராசா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோருக்கு நற்சான்று அளிக்கப்பட்டது ஒருபுறம் இருக்க, இவ்விடயத்தில் பா.ஜனதா அதிகம் வாய்திறக்காமல் இருப்பதற்காக அக்கட்சியையும் 2ஜி வழக்கில் இழுத்துவிடும் வேலையையும் சிபிஐ கச்சிதமாக பார்த்துள்ளது.

அதாவது பா.ஜனதா தலைமையிலான முந்தைய மத்திய அரசில் முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த அருண் ஷோரியின் பதவிக்காலத்தில் வழங்கப்பட்ட உரிமங்கள் குறித்து ஆய்வுசெய்யப்பட வேண்டும் என்றும், அப்போதைய நிதி அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சிபிஐ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கடந்தமாதம் 2ஜி வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, ஆ.ராசா தரப்பில் வாதிடுகையில் 2ஜி உரிமங்கள் ஒதுக்கப்பட்டது தொடர்பான அனைத்து விவரங்களும் மற்றும் அந்த உரிமங்களை பெற்ற தனியார் நிறுவனங்கள், தனது பங்குகளை வேறு நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்றதும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு தெரியும் என்று ஆணித்தரமாக வாதிட்டார்.

இது பிரதமர் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோருக்கு மிகுந்த சிக்கலை ஏற்படுத்தியது.மேலும் 2ஜி ஊழல் பணத்தின் பங்கு, காங்கிரஸ் தலைமைக்கும் சென்றதாகவும், அது தெரிந்துதான் பிரதமர் இவ்விடயத்தில், முறைகேடு நடப்பது தெரிந்தும் அமைதி காத்தார் என்றும் கூறப்பட்ட நிலையில், அடுத்தடுத்த விசாரணைகளில் ராசா மேலும் வாய் திறந்து ஏதாவது ஏடாகூடமாக பேசிவிடக்கூடாது என்பது மட்டுமல்ல, திமுக-வும் காட்டிக்கொடுக்கும் வேலைகளில் இறங்கிவிடக்கூடாதே என்ற அச்சமுமே ராசாவை "டிராய்" மூலம் மத்திய அரசு காப்பாற்றியுள்ளதோ என்ற எண்ணம், 2ஜி வழக்கினை ஆரம்பம் முதல் உன்னிப்பாக கவனித்து வருபவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

2 ஜி வழக்கு விசாரணை, 15 நாட்களுக்கு முடிக்கப்பட்டு இறுதி நிலை அறிக்கை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்படும் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிபிஐ-யின் விசாரணை நிலை அறிக்கையையும், டிராயின் பதில் விளக்கத்தையும் பார்த்தால் ஆ.ராசா கம்பீரமாக திகார் சிறையிலிருந்து விரைவிலேயே வெளி வருவார் என்றே தெரிகிறது.

ஆனாலும்,இவ்வழக்கை கண்காணித்து வரும் உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை
PTI Photo
FILE
இருப்பதால், மத்திய அரசின் சித்து விளையாட்டுக்கள் எந்த அளவுக்கு எடுபடும் என்பதை வரும் நாட்கள்தான் தீர்மானிக்கும்!

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

Show comments