Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே

கா. அய்யநாதன்

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2011 (20:30 IST)
FILE
தனது பேரன் தயாநிதி மாறன் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதற்குக் காரணம் ஊடகங்கள்தான் என்று நேரிடையாக குற்றஞ்சாற்றியுள்ளார் முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி.

சென்னையில் நேற்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தயாநிதி மாறன் பதவி விலகல் குறித்து கருத்து கேட்டதற்கு இவ்வாறு கருணாநிதி குற்றஞ்சாற்றியுள்ளார்.

“இன்றைய உலகில், குறிப்பாக இந்தியாவில் ஊடகங்கள் ராஜ்ஜியம்தான் நடக்கிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்த முடியும். அதற்கு தயாநிதி மாறன் விதிவிலக்கல் ல” என்று கூறி அருகிலிருந்த ஊடகவியலாளர்களை அழுத்தமாக நோகடித்துள்ளார்.

தனது பேரன் பதவி இழந்ததில் ஏற்பட்ட வலியைக் காட்ட இதழாளர்களை விட்டால் அவருக்கு அருகில் யார் இருக்கிறார்கள்? இதழாளர்கள் மீது கருணாநிதி பாய்வது இது முதல் முறை அல்ல என்பதால் இதழாளர்களும் பெரிதாக அதற்காக வருந்தவில்லை. அவர்களும் புன்னகைத்து விட்டு சென்றுவிட்டனர்.

ஆனால், கருணாநிதி கூறியதை இன்று காலை நாளிதழ்களில் படித்த மக்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தி.மு.க. தொண்டர்களாக இருந்தாலும், நிச்சயமாக சிரித்திருப்பார்கள். ஏனெனில் தயாநிதி மாறனை எந்த ஊடகமும் இழிவுபடுத்தவில்லை என்பதும், அவர் செய்த அதிகார துஷ்பிரயோகத்திற்கும், அதனால் அவருடைய சகோதரனின் நிறுவனத்திற்கு பெரும் பலன் ஏற்படுத்திக் கொடுத்ததற்காகவுமே அவர் பதவியை இழந்துள்ளார் என்பது செய்திகளை தொடர்ந்து படித்து வரும் சராசரி மக்கள் அறிவர்.

தயாநிதி மாறனின் திருவிளையாடல்கள் பற்றி ஊடகங்களில் செய்திகள் வரத் தொடங்கியது கடந்த 6 வாரங்களாகத்தான். ஆனால் அவரின் திருவினை என்பது 2004 முதல் 2007ஆம் ஆண்டு வரை தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த காலத்தோடு தொடர்புடையதாகும்.

FILE
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஏர்செல் நிறுவனம் 2ஜி அலைபேசி சேவை நடத்தும் தகுதி பெற்றிருந்தும் அதற்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய மறுத்தது, தனது மலேசிய நண்பரின் நிறுவனத்திற்கு ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை விற்க நிர்பந்தம் கொடுத்து நிறைவேற்றியது, அதன் காரணமாக சந்தை விலையை விட குறைந்த விலைக்கு ஏர்செல் பங்குகளை மாக்சிஸ் நிறுவனத்திற்கு விற்றது, மாக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தை வாங்கிய பிறகு அந்நிறுவனம் முதலில் கேட்ட தொலைத் தொடர்பு வட்டங்களின் எண்ணிக்கைக்கும் அதிகமான வட்டங்களை - விதிமுறைகளுக்கு முரணாக ஒதுக்கீடு செய்து ‘ஊக்குவித்தத ு ’, அதற்கு ஈடாக, மாக்சிஸ் நிறுவனம் கலாநிதி மாறனின் சன் நெட்வொர்க் நிறுவனத்தில் 599 கோடி ரூபாய் முதலீடு செய்தது போன்ற அனைத்தும் அன்றைக்கு ஊடகங்கள் எதற்கும் தெரியாமல் நடந்தேறிவிட்டது. ஆனால் இவை யாவும் கருணாநிதிக்குத் தெரியும், அப்போது அது கருணாநிதிக்கு இழி செயலாகத் தெரியவில்லை. ஏனெனில் வருவாய் வளம் கண்ணை மறைத்தது.

இப்போது கூட இந்தத் திருவிளையாடலை உலகத்தின் பார்வைக்குக் ஊடகங்கள் ஒன்றும் கொண்டு வரவில்லை. 2ஜி அலைக்கற்றை ஊழலின் நாயகன் என்று தன்னை ஊடகங்கள் உட்பட அனைவரும் வர்ணிப்பதை பொருக்க முடியாத தொலைத் தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.இராசா ஒரு உண்மையை கூறினார். “எந்த வழிமுறைகளை பின்பற்றி எனக்கு முன்னால் இருந்த அமைச்சர்கள் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை செய்தார்களோ அதே வழியைத்தான் நானும் கடைபிடித்தேன ்” என்று கூறினார். அதுதான் தயாநிதி மாறனுக்கு வினையானது. முதலில் வரும் நிறுவனத்திற்கு முதலில் என்கிற வித்தையை பயன்படுத்தி, தனக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது எப்போது இருந்து தொடங்கியது என்று மத்திய புலனாய்வுக் கழகம் நோண்ட ஆரம்பித்தது. இரண்டு அமைச்சர்கள் அதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் ஆனார்கள். ஒருவர் அருண் ஷோரி, மற்றவர் தயாநிதி மாறன்.

தனது காலத்தில் எவ்வாறு, எந்தெந்த நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதை ம.பு.க. அலுவலகத்திற்கு, அப்போது இருந்த தொலைத் தொடர்புச் செயலரையும் அழைத்துக் கொண்டு வந்து முழுமையாக விளக்கிவிட்டு சென்றுவிட்டார் அருண் ஷோரி. ஆனால் தயாநிதி மாறனுக்கு அந்தத் துணிவு இல்லை. எனவே அவர் காலத்தில் நடந்த ஒதுக்கீடுகளை ம.பு.க. நோண்டியது, உண்மையைக் கண்டறிந்தது. அதில்தான் தனது இல்லத்தில் இருந்து சன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பல இணைப்புகளை தயாநிதி கொடுத்திருப்பதும், ஏர்செல் நிறுவனத்தை மிரட்டி விற்க வைத்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில்தான் தயாநிதி மாறனின் ஊழல் விவகாரத்தை ஊடகங்கள் வெளியிட்டன. இதில் ஊடகங்களின் தவறு என்ன இருக்கிறது? ஊழல் செய்தது தயாநிதி, அதற்கான பலன் பதவி இழப்பு என்றால், அதற்கு ஊடகங்களைக் குறைகூறுவது எதற்காக?

தலைவரின் ஆதங்கம் வேறு? அவர் கூறிய வார்த்தைகளை மீண்டும் நினைவுபடுத்துங்கள். “ஊடகங்கள் நினைத்தால ்” என்று அவர் கூறுவதற்குக் காரணம், தனது கட்சியினரின் ஊழலை மட்டுமே இந்த ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றனவ ே ” என்பது அவருடைய ஆதங்கம். “நாட்டில் யாரும் செய்யாத ஊழலையா நாங்கள் செய்துவிட்டோம், அவர்களையெல்லாம் விட்டுவிடுகிறீர்கள், எங்களை மட்டும் பெரிதாக போடுகிறீர்களே, ஏன்?” என்பது அவருடைய வார்த்தைகளில் தொக்கி நிற்கும் பொருளாகும்.

இதற்கு ஊடகங்கள் என்ன முடியும் தலைவரே? உங்கள் கட்சி ஆட்களை காலி செய்ய முற்படும் மைய சக்திகள் தரும் தகவல்களையல்லவா பெற்று ஊடகங்கள் ‘ஆதாரமா க’ வெளியிட்டு, உங்கள் மானத்தை வாங்குகின்றன. ஆதாரத்தை அள்ளித்தரும் அந்த சக்திகளை நீங்கள் கண்டு கொள்ளாதது ஏன்? நீரா ராடியா உரையாடல்களை பதிவை செய்தது யார்? எந்தத் துறை? வெளியிட்டது யார்? எந்தத் துறை? இதை ஊடகங்களால் இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. உங்களுக்கும் தெரியாதா தலைவரே?

ஆனால், உங்களுக்கு நெருங்கிய அவர்கள் கசியவிடும் ஆதாரத்தைக் கொண்டு நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிவிப்பதா குற்றம்? கசியவிட்ட அவர்களையல்லவா நீங்கள் காய வேண்டும்? வெளியில் சொன்ன ஊடகங்களை காய்வது சரியாகுமா? நானும் பத்திரிக்கையாளன்தான் என்று பெருமையோடு மார்தட்டிக்கொள்ளும் உங்களுக்குத் தெரியாதா இந்த உண்மையெல்லாம்?

கேள்வியும் நானே, பதிலும் நானே, ஆண்டியும் நானே, போண்டியும் நானே என்று என்னவெல்லாம் எழுதியிருப்பீர்கள்? அந்த ரேஞ்சுக்கு ஊடகங்கள் வர முடியுமா தலைவரே? ஆதாரங்களை கசியவிட்டு நீங்கள் பன்னாத அரசியலா?

எனவே ஊடகங்கள் வெளியிடும் ஆதாரங்கள் யாவும் உங்களுக்கு நெருக்கமான சக்திகளிடமிருந்துதான் வருகின்றன, அதுவும் நீங்கள் அறிந்ததே! ஆனால் ஊழலுக்கு நீங்கள் உறுதியாக துணை நிற்பதுபோல், உங்களுக்கு ஊடகங்களும் துணை நி்ற்க வேண்டும் என்று எதிர்பார்பார்த்தால் நியாயமா தலைவா? நீங்களே பல முறை பயன்படுத்திய புராண உதாரணத்தை நினைவூட்டுகிறோம ்: “எய்தவனிருக்க அம்பை நோவானேன்?”

எய்தவனை அறியாதவரா நீங்கள்? உங்களின் நேரம் இன்றைக்கு சிக்கலாக இருக்கிறது, அதை மறைக்க அம்புகளை நோகின்றீர்கள், இதனை அம்புகளும் புரிந்தே புன்னகைக்கின்றன.

இந்தியாவி்ல ஊடகங்கள் ராஜ்ஜியம் நடக்கிறது என்று வேறு புலம்பியுள்ளீர்கள். உங்களையே நீங்கள் ஒரு கணம் மறந்துவிட்டீர்கள் தலைவரே. தங்களுடைய குடும்பத்தினர்தானே தமிழ்நாட்டில் ஊடக சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறார்களே? என்ன செய்வது அவர்களால் மட்டுமே உங்களை காபாற்றிவிட முடியுமா? மக்களோடு நின்றிருந்தால் மக்கள் காப்பாற்றுவார்கள், நீங்கள் தம்மக்களோடு மட்டுமே நின்றீர்கள், இன்று தவிக்கின்றீர்கள். இதற்கு ஊடகங்களால் என்ன செய்ய முடியும்? உங்கள் நிலையை எண்ணி ஒரு சொட்டு கண்ணீர்தான் விட முடியும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

Show comments