Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழல் சுழலில் சோனியா?

Webdunia
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவில் தொடங்கி, தற்போது தயாநிதி மாறனை வளைக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ள 2ஜி ஊழல் சுழல், விரைவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் நெருங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது டெல்லி வட்டாரங்கள்.

2 ஜி ஊழல் விவகாரம் வெடித்த தொடக்க காலத்திலிருந்தே, இந்த ஊழல் காங்கிரஸ் தலைமை மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தெரியாமல் நடந்திருக்காது என்று ஒருதரப்பு ஊடகங்கள் அடித்துக் கூறி வந்திருக்கத்தான் செய்கின்றன.

ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைப்பாவையாகிப்போன ஆங்கில ஊடகங்கள ், 2 ஜி ஊ ழல ் என்றாலே ஆ.ராசா மட்டும்தான் என்பதுபோன்ற ஒரு பிம்பத்தை திரும்ப திரும்ப உருவாக்கியதால் ஏற்பட்ட சவுகரியத்தில், இந்த ஊழலில் தொடர்புடைய அல்லது அந்த ஊழலால் பயனடைந்த முக்கிய அரசியல் புள்ளிகளும், பெரு நிறுவனங்களின் முதலாளிகளும் வசதியாக தங்களை இந்த ஊழலிலிருந்து மறைத்துக்கொண்டனர்.

தற்போது 2ஜி ஊழல் வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்று வந்தாலும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் இந்த வழக்கில் இதுவரை சிக்கியுள்ள ஆ.ராசா, கனிமொழி, சாகித் பால்வா போன்றவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்துவிட்டு, இந்த வழக்கை ஊத்தி மூட காங்கிரஸ் கட்சி துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறது.

இந்த ஊழல் வழக்கில் இந்த அளவுக்கு விசாரணை நடைபெற்று, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றால், அதற்கு உச்ச நீதிமன்றத்தின் நேரடி தலையீடு மற்றும் கண்காணிப்புதான் காரணம்.அப்படி உச்ச நீதிமன்றம் மட்டும் தலையிடவில்லை என்றால், இந்த வழக்கிற்கும் போபர்ஸ் ஊழல்வழக்கு கதிதான் ஏற்பட்டிருக்கும்.

போபர்ஸ் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சோனியா காந்தியின் உறவினர் ஒட்டாவியோ குட்ரோச்சியை, சிபிஐ-யால் நீதிமன்றத்திடம் பரிந்துரைக்க வைத்து விடுவித்தது போன்றே, 2ஜி வழக்கில் தொடர்புடையவர்களும் விடுவிக்கப்பட்டிருப்பார்கள்.

ஆனால் உச்ச நீதிமன்றம் என்ற கத்தி தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருப்பதால்,2ஜி வழக்கை ஊத்தி மூடவும் முடியாமல், அதே சமயம் அதிக நாட்கள் நீடித்துவிடக் கூடதே என்ற தவிப்பிலும் காங்கிரஸ் புழுங்கிக் கொண்டிருக்கிறது.

2 ஜி வழக்கு நீடிக்க நீடிக்க, அந்த சுழல் மெல்ல மெல்ல காங்கிரஸ் புள்ளிகள் மற்றும் அமைச்சர்களையும் வளைக்கத் தொடங்கிவிடும் என்ற பதைபதைப்புதான் அதற்கு காரணம்.

ஏனெனில் இப்போதே 2ஜி ஊழல் வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழத்தொடங்கிவிட்டது. அரசியல் தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் `டேப்' மூலம் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்து உள்ளது என்பதால், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று பா.ஜனதா கூறியுள்ளது.

( ஆனால் அவசர அவசரமாக இந்த விவகாரம் அமுக்கப்பட்டதோடு, வழக்கம்போல் நமது ஆங்கில ஊடகங்களும் இதை அடக்கியே வாசித்தன)

அதுமட்டுமல்லாது 2ஜி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஷாகித் பால்வா தொடர்புடைய நிறுவனம், தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய வேளாண்துறை அமைச்சருமான ஷரத் பவாருக்கு சொந்தமானது என்று கூறப்படும் நிலையில், அது உண்மைதானா என்று பவாரை இந்த வழக்கில் பெயரளவுக்கு விசாரிக்கும் துணிச்சல் கூட சிபிஐ-க்கோ அல்லது அதனை ஆட்டுவிக்கும் காங்கிரஸ் கட்சிக்கோ இல்லை.

ஏனெனில் பவாரை நெருங்கினால்,இந்த 2ஜி ஊழலில் மட்டுமல்லாது வேறு பல ஊழல்களினால் பயனடைந்த காங்கிரஸ் புள்ளிகள் யார் யார் என்பது குறித்து அவர் வாய் திறந்து விடுவார் என்பதும், அப்படி அவர் புகார் குண்டு வீசினால் அது நிச்சயம் டெல்லி, ஜன்பத் சாலை 10 ஆம் எண் (சோனியா) வீட்டில் விழுந்து வெடித்துவிடுமே என்ற அச்சமே காரணம் என்றும் கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, தனது பிணை மனு மீதான விசாரணையின்போது 2ஜி ஒதுக்கீடு தொடர்பாக தமக்கும், பிரதமருக்கும் இடையே நடைபெற்ற 18 கடித தொடர்பு ஆவணங்களை நீதிமன்றத்தில் காட்டி வாதாடப்போவதாக ஆ.ராசா கூறியதாக ஒரு செய்தி ஏற்கனவே டெல்லி வட்டாரங்களில் பேசப்பட்டது.

இவ்வாறு பிணை மனுவுக்காக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தெரியாமல் எதுவும் நடக்கவில்லை என்று கூறுபவர், நாளை இவ்வழக்கில் தமக்கு தண்டனை கிடைத்தால் 2ஜி ஊழலில் நான் மட்டும் பயனடையவில்லை; இவர்களும்தான் பயன்பெற்றார்கள் என்று அதுவரை வழக்கில் சிக்காதவர்களையும் போட்டு கொடுப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளன.

அப்படி போட்டுகொடுத்தால்,ஆயிரம் அதிகாரம் இருந்தும், அரசியல் செல்வாக்கு இருந்தும், உச்ச நீதிமன்றம் கண்காணித்துக் கொண்டிருப்பதன் காரணமாக 2ஜி வழக்கில் எப்படி திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி சிக்கினாரோ, அதேப்போன்று 2ஜி சுழல் காங்கிரஸ் புள்ளிகளையும் வளைத்துவிடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளன.

ஏனெனில் 2ஜி முறைகேட்டில் ராசா இந்த அளவுக்கு புகுந்து விளையாடியதற்கு சோனியாவுக்கு மிக நெருக்கமானவரும், அவரது அரசியல்ஆலோசகருமான அகமது படேலிடமிருந்து கிடைத்த சமிக்ஞையே காரணம் என்றும், விவகாரம் இந்த அளவுக்கு வெடித்துவிட்டதால் வேறு வழியில்லாமல் இந்த வழக்கில் ராசாவையும், திமுகவையும் மாட்டவைத்துவிட்டு தான் மட்டும் தப்பித்துக் கொள்ள பார்க்கிறது காங்கிரஸ் என்ற பேச்சும் ஏற்கனவே எழுந்தது.

போதாதற்கு இந்த 2ஜி ஊழலில் கிடைத்த பணத்தில் 60 விழுககாடு சோனியா காந்தி குடும்பத்திற்குதான் சென்றது என்று ஆரம்பம் முதலே கூறி வரும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, அண்மையில் மேலும் ஒரு குண்டை வீசியிருந்தார்.அது சோனியாவின் சகோதரி சமீபத்தில் வெளிநாட்டில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கியிருப்பதாக கூறியதுதான். சுப்பிரமணியம் சுவாமியின் மேற்கூறிய இரண்டு குற்றச்சாட்டு குறித்தும் காங்கிரஸ் கட்சி இதுவரை வாயே திறக்கவில்லை.

அத்துடன் ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்தி மத்திய அரசுக்கு நெருக்கடியை கொடுத்த பாபா ராம்தேவின் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்ப, பதிலுக்கு சோனியா காந்தி குடும்பத்திற்கு சொந்தமாக உள்ள அறக்கட்டளைகளின் சொத்து மற்றும் நிதி விவரங்கள், அவை எப்படி வந்தன என்பது குறித்து சோனியா விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.இது குறித்து சோனியா தரப்பிலிருந்து இதுவரை பதிலில்லை.

போதாதற்கு சோனியாவும், அவரது மகன் ராகுல் காந்தியும் ரகசியமாக அண்மையில் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.அவர்கள் ஐரோப்பா நாடு ஒன்றிற்கு சென்றிருப்பதாக கூறப்படும் நிலையில், பா.ஜனதா பேச்சாளர் நிர்மலா சீதாராமன் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊழலுக்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஊழலை ஒழிக்கப்போவதாக வாய்கிழிய பேசும் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் அது குறித்து மவுனம் சாதிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய சீதாராமன், ராம்தேவ் விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாகவும் சாடியுள்ளார்.

இதற்கும் காங்கிரஸ் தரப்பில் பதில் இல்லாமல் போகவேதான், நடப்பதையெல்லாம் உன்னிப்பாக கவனித்து வந்த பா.ஜனதா தலைவர் நிதின் கட்கரி, சோனியா ஒரு ஊழல்வாதி என்ற பொருள்படும்படி நேரடியாகவே நேற்றுமுன்தினம் சாடினார்.

" ஊழலுக்கு எதிராக போராடப் போவதாக சோனியா காந்தி கூறுவது, தீவிரவாதத்துக்கு எதிராக போராடப் போவதாக பாகிஸ்தான் கூறுவது போல் உள்ளது. தீவிரவாதத்துக்கு எதிராக போராடப்போவதாக பாகிஸ்தான் கூறுவதை யாரும் நம்பமாட்டார்கள். இதேபோல் ஊழலுக்கு எதிராக போராட போவதாக சோனியாகாந்தி சொல்வதை காங்கிரஸ்காரர்கள் கூட நம்பமாட்டார்கள்" என்று நிதின் கட்காரி கூறியது, 2ஜி ஊழலில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள தொடர்பை மனதில் வைத்துதான் என்று கூறுகிறார்கள் டெல்லி அரசியல் நோக்கர்கள்.

அதனால்தான் கட்கரி இவ்வாறு கூறியதும் பதற்றமடைந்துபோன காங்கிரஸ், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து அவர் மீது விழுந்து பிறாண்டியது.

ஆனால் ஆட்சி அதிகாரம் தற்போது கையில் இருக்கும் தைரியத்தில்,எந்த ஊழலையும் காங்கிரஸ் மறைக்கலாம் அல்லது கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களை பலிகடாவாக்கிவிட்டு தப்பித்துக்கொள்ளலாம்;ஆனால் நாளை அரசியல் நிலைமை எப்படியும் மாறலாம்.

இந்திரா காந்தியையே உள்ளே தள்ள வைத்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய தேசம்தான் இது என்பதை மறந்துவிடக்கூடாது!

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments