Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோக்பால் மசோதா மக்களை ஏமாற்றவா?

Webdunia
செவ்வாய், 31 மே 2011 (19:31 IST)
ஊழலுக்கு எதிராக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே நடத்திய உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து நாளைக்கே நாட்டில் ஊழல் ஒழியப்போகிறது என்பது ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்திய மத்தியில் ஆட ்சியிலுள்ள காங்கிரஸ் அரசு, தற்போது ஊழல் செய்தாலும் பிரதமர், நீதிபதிகள், எம்.பி.க்கள் ஆகியோரை லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வர கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதன் மூலம் அதன் சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

லோக்பால் மசோதா வரைவுக் குழுவின் 5 வது கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள், எம்.பி.க்களை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது லோக்பால் வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள், எம்.பிக்களை கொண்டு வருவதற்கு அக்குழுவில் குடிமக்கள் சார்பில் இடம் பெற்ற பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்த நிலையில்,மத்திய அரசு சார்பில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டும், இந்த விவகாரத்தில் இரு தரப்பினர் இடையே இறுதிவரை ஒருமித்தக் கருத்து ஏற்படவில்லை.இதையடுத்து வருகிற ஜூன் 6 ஆம் தேதி மீண்டும் கூடி ஆலோசிப்பதென முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து லோக்பால் மசோதா வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள், எம்.பி.க்களை கொண்டு வருவது குறித்து அனைத்து மாநில அரசுகள், அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கேட்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது லோக்பால் மசோதா உருவாக்குவதை மேலும் இழுத்தடிக்க மத்திய அரசு கையாளும் ஒருவித தந்திரம் என்றே கூறப்படுகிறது.

ஊழல் செய்தால் பிரதமர், நீதிபதிகள் மற்றும் எம்.பி.க்களை லோக்பால் மசோதா வரம்புக்குள் கொண்டுவரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கும் மத்திய அரசு,வழக்கம்போல எளிதில் மூளைச் சலவைக்கு உள்ளாக்கப்படும் அல்லது மூளைச் சலவை செய்யப்பட்ட மத்திய தர வர்க்க மக்களை திருப்திபடுத்துவதன் மூலம், ஊழல் ஒழிக்கப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது.

அதாவது கிரிக்கெட் போட்டியில் உலக கோப்பையை இந்தியா வென்றாலோ அல்லது சச்சின் டெண்டுல்கர் போன்றவர்கள் கிரிக்கெட்டில் சதம் அடித்தாலோ "இந்தியா... இந்தியா....!" என்று கூவ வைத்து தேசபக்தி பீறிட்டுக் கிளம்புவதாக காண்பிக்கும் அபத்தங்களின் மூலம் "ஒற்றுமையான இந்தியா!" என்ற மாயையை ஏற்படுத்துவது போன்று, 100 க்கும், 500 க்கும் கை நீட்டும் இடைநிலை மற்றும் கடை நிலை அரசு ஊழியர்களை கைது செய்வது மற்றும் ஊழல் அதிகாரிகளின் சொத்துக்களை முடக்கி, அதனை பறிமுதல் செய்வதற்கு மட்டும் மத்திய அரசு தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் மட்டும் லோக்பால் வரைவு குழுவில் இடம்பெற்ற குடிமக்கள் பிரதிநிதிகள் குழு மற்றும் அரசு தரப்பு பிரதிநிதிகள் இடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டில் தேசபக்தியை கூவ வைப்பதுபோன்று, ஊழல் மற்றும் லஞ்சத்தில் மாட்டும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை மட்டும் கைது செய்வது மற்றும் அவர்கள் மீதான நடவடிக்கைகளை கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் மத்திய அரசின் ஊதுகுழலாக மாறிப்போன தேசிய ஆங்கில சேனல்களில் மாறி மாறி ஒளிபரப்ப வைத்து, மக்களின் ஊழலுக்கு எதிரான உணர்வுகளுக்கு வடிகாலை ஏற்படுத்தி தாங்கள் தப்பித்துக் கொள்ளும் அரசில் இடம்பெற்றுள்ள அரசியல்வாதிகளின் தந்திரங்கள்தான் இவை.

தான் மட்டும் தப்பிக்க வழி ஏற்படுத்திக் கொண்டால் நீதிபதிகள் கேள்விகள் கேட்பார்களே என்ற அச்சத்தில், அவர்களையும் லோக்பால் விசாரணை குழுவில் கொண்டுவர ஆட்சேபணை தெரிவிக்கிறார்கள் லோக்பால் வரைவு குழுவில் இடம்பெற்றுள்ள அரசு தரப்பு பிரதிநிதிகள்.

நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த லோக்பால் மசோதாவை தற்போது நிறைவேற்ற தயாராக உள்ளது போன்று மத்திய அரசு பம்மாத்துக் காட்ட முன்வந்தது கூட, மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு மீது போபர்ஸ் ஊழல் வழக்கு குற்றவாளி ( சோனியா காந்தியின் உறவினர்) ஒட்டாவியோ குட்ரோச்சியை விடுவித்தது, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல் என அடுத்தடுத்து கிளம்பிய ஊழல் குற்றச்சாட்டுக்கள், மக்கள் மத்தியில் காங்கிரஸ் மற்றும் அக்கட்சி தலைமையிலான மன்மோகன் சிங் அரசு மீது எழுந்த கோப அலைகளையும், உணர்வையும் அடக்கவும், அதற்கு வடிகால் ஏற்படுத்தவும் என்றுதான் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

அதாவது லோக்பால் மசோதாவை வலியுறுத்தி அண்ணா ஹசாரே டெல்லியில் நடத்திய உண்ணாவிரத போராட்டமும், அதற்கு தேசிய ஆங்கில சேனல்கள் போட்டிப்போட்டுக்கொண்டு அளித்த முக்கியத்துவமும் மத்திய அரசின் ஏற்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட ஒரு நாடகம் என்றும் கூறுகிறார்கள்.

இதற்கு ஒரு வலிமையான காரணத்தை சுட்டிக்காட்டும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்,"ஊழல் ஒழிப்பு" என்ற பெயரில் ஹசாரே டெல்லியில் உண்ணாவிரத போராட்டத்திற்கு நடத்தியதற்கு பல மாதங்களுக்கு முன்னரே 93 வயதான சுதந்திர போராட்ட வீரரும், "வெள்ளையனே வெளியேறு" போராட்டம் உள்ளிட்ட பல்வேறு சுதந்திர போராட்டங்களில் மகாத்மா காந்தியுடன் சேர்ந்து பங்கேற்றவருமான ஷாம்பு தத் என்ற காந்தியவாதி, இந்த ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதியன்றே "ஊழலுக்கு எதிரான இந்தியா" என்ற கோஷத்துடன் சாகும் வரை உண்ணவிரத போராட்டத்தை தொடங்கினார்.

இவரது காந்திய சேவா மற்றும் சத்யகிரக படையில் (முன்பு- லோக் சேவா சங்) 20 க்கும் அதிகமான முன்னாள் நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள்,வருமான வரி ஏய்ப்பாளர்களை கண்டுபிடிக்கும் நுண்ணறிவு பிரிவில் பணியாற்றியவர்கள், கடற்படை உள்ளிட்ட பாதுகாப்புத் துறையில் பணியாற்றிய பல மூத்த நேர்மையான, ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற உள்ள சுத்திகொண்ட அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

இத்தகைய படைக்கு தலைமை தாங்கும் ஷாம்பு தத்தா மேற்கொண்ட ஊழல் ஒழிப்பு போராட்டத்தை,மேற்கூறிய தேசிய ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை.ஆனாலும் போராட்டம் உளப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளதால், இந்த பொறி தேசம் முழுவதும் பரவிக்கூடாதே என்ற பதைபதைத்த சில அரசு ஆதரவு சக்திகள், தத்தாவை நேரில் சந்தித்து, தாங்களும் அவரது ஊழல் ஒழிப்பு இயக்கத்தில் பங்கேற்பதாக கூறி,அவரிடம் தொடர்ந்து வேண்டுகோள்விடுத்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வைத்தனர்.

இவ்வாறு தத்தாவை நேரில் சந்தித்தவர்களில் சுவாமி அக்னிவேஷ், அரவிந்த கேஜ்ரிவால் மற்றும் கிரண் பேடி போன்றவர்களும் இடம்பெற்றிருந்ததோடு, அவரது ஊழல் ஒழிப்பு செயல்திட்டத்தை தாங்கள் அரசிடம் வலியுறுத்துவதாக கூறி வாக்குறுதி அளித்தனர்.

ஆனால் இந்த நிகழ்வுகள் எதுவுமே ஊடகங்களில் பெரிய அளவில் வெளிவரவில்லை. அதே சமயம் ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்தை ஊடகங்கள் ஏக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது மற்றும் ஹசாரேவுக்கு ஆதரவாக சென்னை உட்பட பல நகரங்களில் மாணவர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆதரவு பிரச்சாரம், நீண்ட பேனர்களில் சாலைகளில் போவோர், வருவோரையெல்லாம் கையெழுத்திட வைத்தது போன்றவை நடந்தேறி, அவை ஊடகங்களிலும் வெகு ஜோராகவே வெளிப்படுத்தப்பட்டன.

இதன் மூலம் ஹசாரே போராட்டம் அரசு ஆதரவுடன் நடந்தேறிய திட்டமிட்ட நாடகம் என்பதை உணர்ந்துகொள்ளலாம் என்று கூறுகின்றார் அந்த ஐஏஎஸ் அதிகாரி. இதனை உறுதிபடுத்துவது போன்றுதான் நேற்றைய நிகழ்வுகள் நடந்தேறியுள்ளது.

லோக்பால் மசோதா வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள், எம்.பி.க்களை கொண்டு வருவது குறித்து அனைத்து மாநில அரசுகள், அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கேட்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறி லோக்பால் மசோதா உருவாக்குவதை மேலும் இழுத்தடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், அரசுக்கு கை கொடுக்க களமிறங்கியுள்ளார் பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் என்ற சாமியார்.

இவர் லோக்பால் மசோதா வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள், எம்.பி.க்களை கொண்டு வருவது கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

ஊழல் ஒழிப்பு என்று குரல் கொடுக்கும் ஹசாரே, லோக்பால் வரைவு குழு அமைப்பது தொடர்பாக ஊழலின் ஊற்றுக்கண்ணாக திகழும் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், போபர்ஸ் ஊழல் வழக்கிலிருந்து சர்ச்சையான முறையில் விடுவிக்கப்பட்டவருமான ஒட்டாவியோ குட்ரோச்சியின் உறவினருமான சோனியா காந்திக்கு கடிதம் எழுதி அவரது ஒத்துழைப்பை கோரியபோதே அவர் மீதான நேர்மை சந்தேகத்திற்கு உள்ளாகிவிட்டது.

இந்நிலையில் மத்திய அரசுக்கு ஆதரவாக தற்போது சர்ச்சை சாமியார் பாபா ராம்தேவ் களமிறக்கப்பட்டுள்ளார்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது, லோக்பால் மசோதா உருவாகி,ஊழல் அரசியல்வாதிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கான சாத்தியமே இல்லை என்பதாகத்தான் உள்ளது.

வழக்கம்போல் நம் மக்கள் கிரிக்கெட் போட்டி வெற்றியிலும், சச்சின் சதமடிப்பதிலும் சந்தோஷமாக இருக்க பழகிக்கொள்ள வேண்டியதுதான் போல!

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments