Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்காவின் ஜனநாயக அக்கறை

அமெரிக்காவின் ஜனநாயக அக்கறை
, செவ்வாய், 15 பிப்ரவரி 2011 (19:38 IST)
FILE
“எகிப்து உண்மையான ஜனநாயகத்தை நோக்கி செல்வதை அமெரிக்கா ஆதரிக்க வேண்டும் என்கிற எதிர்பார்பு நிலவுகிறது. எங்களுடைய நிலையும் அதற்கு ஆதரவானதுதான். அதனை மிக வலிமையாக ஆதரிக்கிறோம், அது விரைவில் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறோம்” என்று அமெரிக்க அயலுறவுச் செயலர் ஹில்லாரி கிளிண்டன் கூறியுள்ளார்.

தன்னை உண்மையான ஜனநாயகத்தின் நண்பன் என்று காட்டிக்கொள்வதற்கு கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் அமெரிக்கா மிக லாவகமாகவும், தனக்குச் சாதகமாகவும் பயன்படுத்திக்கொள்ளும் என்பதற்கு அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு ஹில்லாரி அளித்த இந்தப் பேட்டியும் ஒரு சான்று.

webdunia
FILE
எகிப்து அதிபராக இருந்த அன்வர் சதாத் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதிபரான ஹோஸ்னி முபாரக், கடந்த 30 ஆண்டுக்காலமாக ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்ததை எதிர்த்து அந்நாட்டில் பல மக்கள் இயக்கங்கள் நடைபெற்றுள்ளது. அப்படிப்பட்ட போராட்டங்களில் அமெரிக்க அரசு யார் பக்கம் நின்றது என்பதெல்லாம் எகிப்து மக்களுக்கு நன்றாகவே தெரியும். எகிப்து இராணுவத்திற்கு எண்ணிலடங்கா சலுகைகளை அளித்து, அவர்களை எப்போதும் ‘குஷி’யில் ஆழ்த்திவிட்டு, பல பில்லியன் டாலர்களை கொள்ளயடித்து அயல் நாட்டு வங்கிகளில் கொண்டுசென்று முபாரக் குவித்தபோதெல்லாம் வராத ஜனநாயக அக்கறை இன்றைக்கு வந்துள்ளது அமெரிக்காவிற்கு!

முபாரக் ஆட்சியை அமெரிக்கா ஆதரித்து வந்ததற்கு அதற்கு பல காரணங்கள் உள்ளன:

(௧) எகிப்து இராணுவத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 1.3 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் = 100 கோடி = ரூ.4,500 கோடி) கொடுத்து வந்தது அமெரிக்க அரசு.

(௨) தனது செல்லப்பிள்ளையான இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்த முதல் அரபு நாடு எகிப்து.

(௩) மத்திய கிழக்காசிய எண்ணெய் வளங்களை அயல் நாடுகளுக்கு கொண்டு செல்ல அதி முக்கியத் தேவையான சூயஸ் நீர் வழியை உறுதி செய்ய எகிப்து தேவை. அதுமட்டுமின்றி, டிரான் நீரிணை, அக்குவாபா வளைகுடா ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகளை நிலைநிறுத்துவது.

(௪) எகிப்து இராணுவத்தின் முழு ஒப்புதலுடன் இஸ்ரேல் விமானப் படை நடத்திய காசா- எகிப்து எல்லையிலுள்ள ஃபியாடெல்பி பாதையில் அமைந்திருந்த இரகசிய சுரங்கங்களின் மீதான தாக்குதல். எகிப்து எல்லையில் நடந்த இத்தாக்குதலில் ஒரு எகிப்து இராணுவ வீரன் கூட காயமடையவில்லை!

(௫) ஈரானிடன் அணு ஆயுதம் உள்ளதாக மிக அதிகமாகவே அமெரிக்கா பயமுறுத்துகிறது என்று கூறிய பன்னாட்டு அணு சக்தி முகமையின் தலைவர் எல் பராடீயை (இவர் எகிப்தைச் சேர்ந்தவர்) மீண்டும் அவ்வமைப்பின் தலைவராக வராமல் தடுத்தது.

(௬) எல்லாவற்றிற்கும் மேலாக, தனது மத்திய கிழக்காசிய கொள்கைகளுக்கு (கொள்கைகளுக்கு) நிபந்தனையற்ற ஆதரவளிக்கும் எகிப்து அரசை (முபாரக் ஆட்சி) விட்டுத் தர முடியாது என்று அமெரிக்கா கூறி வந்தது.

2வது பக்கம்...

webdunia
FILE
எகிப்து நாட்டு மக்கள் ஹோஸ்னி முபாரக்கை சர்வாதிகாரி என்கிறார்கள், “அவரை நான் சர்வாதிகாரி என்று கூற மாட்டேன்” என்கிறார் அமெரிக்காவின் துணை அதிபர் ஜோ பிடன்!

ஆக, இஸ்ரேலிற்கு எதிரான வலிமையான இராணுவத்தை கொண்ட ஒரு அரபு நாட்டை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும், அதனால் இஸ்ரேலிற்கும், மத்திய கிழக்காசியாவில் தனது பொருளாதார நலன்களுக்கும் எந்த பாதிப்பும் வந்தவிடாமல் காப்பாற்றிக்கொள்ளவும், அதனைத் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளும் ‘பரந்த’ நோக்குடனேயே எகிப்து அரசிற்கு பில்லியன் கணக்கில் அள்ளிக்கொடுத்து முபாரக் நடத்திய சர்வாதிகார ஆட்சிக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டிருந்தது அமெரிக்கா. 1967 இஸ்ரேல் எகிப்து போருக்குப் பின்னான கேம்ப் டேவிட் பேச்சுவார்த்தையில் எகிப்து மொக்கையாக்கப்பட்ட பின்னர், அது உருவாக்கிய கிழக்காசியத் திட்டத்தின் பாதுகாவலர்களில் முபாரக் மிக முக்கியமானவர்.

இன்று எகிப்து நாட்டின் இளைஞர்கள் ‘இஸ்லாமிய சகோதரத்துவம’ என்கிற அமைப்பின் மூலம் உருவாக்கிய மக்கள் எழுச்சி, கொஞ்சம் கொஞ்சமாக வேரூன்றி, மக்கள் கோவமாக வெடித்து 18 நாட்களில் முபாரக் ஆட்சியை சாய்த்தவுடன் ஜனநாயகப் பாடலை பாடுகிறது அமெரிக்கா. இதே இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு, அரசின் படைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தால், அதனை பயங்கரவாதம் என்று கூறி, ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் நுழைந்ததைப் போன்று உள்ளே நுழைந்து மற்றொரு இரத்தக் கிளறியை ஏற்படுத்த அமெரிக்கா தயங்கியிருக்காது.

webdunia
FILE
ஈராக்கில் பேரழிவு ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளார் சதாம் ஹூசேன் என்று கூறி, அங்கு படையெடுத்து, தான் அளித்த இராசாயண ஆயுதங்களைக் கூட கண்டெடுக்க முடியாத நிலையில், “நாங்கள் ஈராக் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்” என்று கூசாமல் பேசிய ஜார்ஜ் புஷ்ஷின் வார்த்தைகளை நினைவுபடுத்திப் பார்க்க வேண்டியுள்ளது.

இன்று, “முபாரக் காலம் முடிந்துவிட்டது. அங்கு உண்மையான ஜனநாயகத்தை நிறுவுவதற்கான பணிகளை முன்னெடுக்கும் நேரம் வந்துள்ளது” என்று ஹில்லாரி கிளிண்டன் பேசுவதும், அடுத்த வரும் ஆட்சியையோ அல்லது ஆட்சியாளரையோ தங்கள் ஆளாக மாற்றும் நோக்கம் கொண்ட வார்த்தைகள்தான் என்பதை எகிப்து மக்கள் அறிய வேண்டும். தனக்கான ஆட்சியை, தனது பொருளாதார நலன்களை பாதுகாத்துக்கொள்ளும் ஆட்சியை நிறுவும் ‘ஒரே நோக்கம்’ கொண்டதே அமெரிக்காவின் அயலுறவுக் கொள்கை என்பது.

அது உறவு கொள்ளும் நாட்டில் ஜனநாயகம் நிலவுகிறதா அல்லது அங்குள்ளவர்கள் ஜனநாயக ஆட்சியாளர்கள்தானா என்கிற வினாவிற்கு விடைகளை தேடிக்கொண்டு அமெரிக்கா உறவை ஏற்படுத்திக்கொள்வதில்லை. மாறாக, தனது வசதிக்கான நாட்டையே அது நண்பனாக பார்க்கிறது. உண்மையான ஜனநாயக அக்கறை அதற்கு இருந்திருக்குமென்றால், அது முஷாரஃப் அரசுடன் வாஞ்சையோடு கொஞ்சியிருக்குமா?

தெற்காசிய பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் பாகிஸ்தான் என்கிறது இந்தியா, அதனை பயங்கரவாதத்திற்கு எதிரான நண்பன் என்கிறது அமெரிக்கா. ஆனால், அமெரிக்காவுடனான உறவை உச்சிமேல் வைத்து புளங்காகிதம் அடையும் பிரதமர் மன்மோகன் சிங் அரசு, ‘அதெப்படி அவர்களும் நண்பர்கள், நாங்களும் நண்பர்கள்?’ என்று வினா எழுப்பவில்லை! அமெரிக்காவின் அயலுறவுக் கொள்கையை புரிந்தவரல்லவா நமது நாட்டின் பிரதமர்? இல்லையென்னால் அந்நாட்டு நிறுவனங்களின் நலன் காக்க அணு விபத்து இழப்பீடு சட்டத்தை நிறைவேற்றுவாரா?

webdunia
FILE
எனவே இன்றைக்கு எகிப்தின் அடுத்த தலைவர் யார் என்பதை தெரிவு செய்யும் ஒரு மிகப் பெரிய சவால் அந்நாட்டு மக்களுக்கு உள்ளது. மக்கள் புரட்சியை ஆதரித்ததற்காக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட பன்னாட்டு அணு சக்தி முகமையின் தலைவராக இருந்த மொஹம்மது எல் பராடீ உள்ளிட்ட பலர் தலைமையை நிரப்ப முன்வரலாம். எகிப்து மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எகிப்து மக்களைப் புரிந்த, மக்களோடு வாழ்ந்துவரும் தலைவர் ஒருவரை அவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

இல்லையெனில், 21வது நூற்றாண்டில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் மக்கள் ஜனநாயகப் புரட்சி பயன்றறதாகப் போய்விடும்.

Share this Story:

Follow Webdunia tamil