இந்திரா காந்தியின் மகனும், இன்றைக்கு ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கும் ராகுல் காந்தியின் தந்தையுமான ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது நடந்த ஊழல்தான் - ஆழ குழித் தோண்டிப் புதைக்கப்பட்ட பிறகும் - சமீபத்தில் உயிர் பெற்று எழுந்துள்ள போபர்ஸ் பீரங்கி பேர ஊழல். அந்த ஊழலின் முக்கிய குற்றவாளியான இத்தாலி ‘பிசினஸ்மேன ்’ ஒட்டோவியோ குட்ரோக்கியை நாட்டை விட்டு தப்பவிட்டு, பிறகு அவருக்கு எதிராக சர்வதேச காவல்துறையால் (இண்டர்போல்) விடுத்த சிகப்பு எச்சரிக்கை அறிக்கையை திரும்பப் பெற்று, பிறகு அவர் தரகுப் பணம் பெற்றதற்கான நேரடி ஆவணங்களை சுவீடன் புலனாய்வுப் பிரிவினர் அளித்தும், அதனை ஏற்க மறுத்து, நீதிமன்றத்தில் ஜெராக்ஸ் காப்பியை தாக்கல் செய்து, அந்த காரணத்திற்காகவே வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வைத்து, பிறகு ஓடடோவியோ குட்ரோக்கியின் லண்டன் கணக்குகள் மீதான தடையை நீக்கி, இறுதியாக அந்த ‘மாமனி த ’ருக்கு எதிரான வழக்கை ‘இதற்கு மேலும் தொடர்வது நியாயம் இல்ல ை’ என்று டெல்லி நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுக் கழகத்தைக் கொண்டே மனு செய்ததுவரை, இவை யாவும் ஊழலிற்கு எதிராக - அதாவது ஊழல் செய்தவரை முழுமையாக காப்பாற்றி, அதன் மூலம் ஊழல் என்ற ஒன்று நடைபெற்றதற்கு ஆதாரமே இல்லை என்று சட்டப்படி முடிவு செய்ய - மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைதானே?
ஊழலை ஒழிப்பது என்பது, அதற்கான ஆதாரங்களை அழிப்பதுதான் என்பது காங்கிரஸ் கட்சியின் அடிப்படைக் கொள்கை அல்லவா?
அதனால்தான், இப்போது கூட, 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததும்,
அதனால் பலன் பெற்ற (லெட்டர் பேட்) நிறுவனங்கள், பிறகு தங்கள் பங்குளை பல்லாயிரம் கோடிக்கு விற்று கொள்ளை அடித்ததும், அதனால் அரசுக்கு (தொலைத் தொடர்புத் துறைக்கு) ஏற்பட்ட இழப்பு 1.76 இலட்சம் கோடி ரூபாய் என்று மத்திய அரசின் தலைமை கணக்காய்வாளர் மற்றும் தணிக்கையாளர் அறிக்கை கொடுத்து, அதை பரிசீலத்த இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அரசைக் கண்டித்த பின்னரும், ‘அப்படி எந்த இழப்பும் ஏற்படவில்ல ை’ என்று தொலைத் தொடர்பு அமைச்சக பொறுப்பை ஏற்ற கபில் சிபல் கூறுகிறார் என்றால், அதற்குக் காரணம் காங்கிரஸ் கட்சியால் ஊழல் குற்றச்சாற்றை சகிக்க முடியாது என்பதால்தானே?
ஆ.இராசா எடுத்த நடவடிக்கையால் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று ஒரு வாரத்திற்கு முன்னர் கூறிவிட்டு, இப்போது, அப்படிப்பட்ட முறைகேடு ஏதும் நடைபெறாமல் தடுக்க, அலைக்கற்றை ஒதுக்கீட்டை உரிமத்துடன் சேர்த்து அளிக்கும் கொள்கையை இன்றைக்கு மாற்றிக்கொண்டதாக அறிவித்துள்ளாரே கபில் சிபல்! எதற்காக? ஆ.இராசா கடைபிடித்த ‘வழிமுற ை ’ சரியானதுதான் என்றால் இன்றைக்கு புதிய கொள்கை அறிவிப்பு எதற்காக? எனவே, இதுதான் காங்கிரஸ் கட்சியின் ஊழல் சகியாமைக்கான எடுத்துக்காட்டாகும்.
இந்த நாட்டில் உள்ள ஊடகங்களும், அதில் பெரிதாக எழுதி, பேசி கிழிப்பவர்கள் என்று அனைவரும் பெரு நிறுவனங்களின், அரசியல் கட்சிகளின் பாக்கெட்டில் உள்ளதால், எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற ‘கருத்துச் சுதந்திரம ்’ ராகுல் காந்திக்கு உள்ளது, எனவே பேசுகிறார்.
காங்கிரஸ் கட்சியும் ஊழலும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று கடந்த சில மாதங்களில் இந்த நாட்டு மக்கள் நன்றாகவே புரிந்துகொண்டுவிட்டனர். அவர்களுக்கு உள்ள பிரச்சனை, இதற்கு ஏது மாற்று? என்பதுதான். மாற்றம் தேவை என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள், அவர்களே மாற்றையும் உருவாக்குவார்கள். சிறிது காலம் ஆகும்.
அதுவரை ராகுல் காந்தி போன்றவர்கள் ‘எதிர்காலம ்’ பற்றி கனவு கண்டுக்கொண்டிருக்கலாம். ஊழலை ஒழிக்கத் தோன்றியுள்ள புதிய அவதாரம் இவரே என்று காங்கிரஸ் கட்சி கூட பிரச்சாரம் செய்யலாம், அதனை வார்த்தை பிசகாமல் ஊடகங்களும் எழுதலாம். ஏமாறுவதற்குத்தான் மக்கள் இருக்க மாட்டார்கள்.