இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த அக்டோபரில் 21.3 விழுக்காடு உயர்ந்து 18 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளதென வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி 21.3 விழுக்காடு உயர்ந்துள்ள அக்டோபரில் இறக்குமதி 6.8 விழுக்காடு மட்டுமே உயர்ந்து 27.68 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது (1 பில்லியன் = 100 கோடி). கடந்த 3, 4 ஆண்டுகளில் இப்போதுதான் இறக்குமதி வளர்ச்சியை விட ஏற்றுமதி வளர்ச்சி மிக அதிகமாக இருந்ததில்லை.
கடந்த ஆண்டு அக்டோபரில் ஏற்றுமதி 14.8 பில்லியன் டாலர்களாகவும், இறக்குமதி 25.9 டாலர்களாகவும் இருந்தது.
இந்த ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான 7 மாதங்களில் ஏற்றுமதி 26.8 விழுக்காடு உயர்ந்து 121.3 பில்லியன் ஆகவும், இறக்குமதி 26 விழுக்காடு அதிகரித்து 194.1 பில்லியன் ஆகவும் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது. அதேபோல், தென் அமெரிக்கா, ஆப்ரிக்க நாடுகளுக்கும் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
ஏற்றுமதியில் தொழிலக கருவிகள், ஆபரண கற்கள், நகைகள், இராசாயணப் பொருட்கள், பெட்ரோலியம் ஆகியவற்றின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.
ஆனால், தேயிலை, புகையிலை, முந்திரி, கைவினைப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி குறைந்துள்ளது.
இறக்குமதியைப் பொறுத்தவரை, அக்டோபரில் எண்ணெய் பொருட்கள் இறக்குமதி 0.3 விழுக்காடு அதிகரித்து 8.41 விழுக்காடும், இதர பொருட்கள் 9.9 விழுக்காடு அதிகரித்து 19.27 பில்லியன் டாலர்களாகவும் உயர்ந்துள்ளது.
தற்போதுள்ள ஏற்றுமதி வளர்ச்சி இந்த நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட ஏற்றுமதி இலக்கான 200 பில்லியன் டாலர்களை நிச்சயம் எட்ட உதவும் என்று அரசு செயதிக் குறிப்பு தெரிவிக்கிறது.