Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டின் ரகசியம் மாதுக்காக விற்பனை!

Webdunia
புதன், 24 நவம்பர் 2010 (19:03 IST)
அரசியல்வாதிகள் ஒருபுறம் தங்கள் கைகளில் சிக்கிய திட்டங்களில் ஏகப்பட்ட தகிடுதத்தங்களை செய்து,பல ஆயிரம் கோடி ரூபாய்களை சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், மறுபுறம் அவர்களுக்கு தாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்று ஐஏஎஸ், ஐஎப்எஸ் அதிகாரி களும ் பணத்திற்காகவும், பெண்களுக்காகவும் நாட்டையே காட்டிக்கொடுக்கும் அளவுக்கு செல்வதை பார்த்து விக்கித்துபோய் நிற்கின்றனர் சமூக ஆர்வலர்கள்!

கடந்த ஏப்ரல் மாதம்தான் இஸ்லாமாபாத்திலுள்ள இந்திய தூதரக அதிகாரி மாதுரி, இந்திய ரகசியங்களை பாகிஸ்தானின் உளவு ஏஜென்சியான ஐஎஸ்ஐ- க்கு விற்றதாக கைது செய்யப்பட்டார்.

53 வயதான மாதுரி குப்தா என்ற அந்த பெண் அதிகாரி, திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வந்தவர்.

தனக்கு அளிக்கப்பட்ட பணிகளை விட, தகவல் பிரிவில் ஆர்வத்துடன் அவர் தலையிட்டு வந்ததை அடுத்து உளவு பிரிவின் சந்தேக வலையில் சிக்கினார்.

இதனையடுத்து சுமார் 4 மாதங்களாக இந்திய உளவுத்துறையின் `கண்காணிப்பு வளைய'த்தில் இருந்து வந்த அவர், பிரதமரின் பயணம் தொடர்பாக விவாதிக்க வேண்டியதுள்ளது என்று கூறி சாமர்த்தியமாக டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அவரிடம் முறைப்படி கவனித்து நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்து வந்த இந்திய உளவு நிறுவனமான `ரா'வின் உயர் அதிகாரியான ஆர்.கே.சர்மா தன்னிடம் அளித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்துக்கு கொடுத்ததாக, உண்மையை கக்கினார்.

இவர் ஏன் இவ்வாறு நாட்டைக் காட்டிக்கொடுக்கும் அளவுக்கு செயல்பட்டார் என்று அதிகாரிகள் தோண்டி துருவியபோது, திருமணம் ஆகாத மாதுரி குப்தாவுக்கு, பாகிஸ்தான் அதிகாரி ராணாவுடன் காதல் இருந்ததும், கூடவே ஏராளமான பணத்துக்கு ஆசைப்பட்டும், இந்திய ரகசியங்களை அவர் பாகிஸ்தானுக்கு விற்றதும் தெரியவந்தது.விசாரணையின்போது இந்த தகவலை மாதுரியும் ஒப்புக்கொண்டார்.

அதே சமயம் உயர் அதிகாரிகள் தன்னை தொடர்ந்து புறக்கணித்து வந்ததாகவும், பதவி உயர்வு வழங்காமல் சிரமமான பணிகளை தனது தலையில் கட்டியதாகவும், செய்த வேலையை மதிக்காமல் தன்னை மட்டம் தட்டியதாகவும், லண்டன் அல்லது அமெரிக்காவில் தனக்கு பணி ஒதுக்கப்படும் என்று காத்திருந்து ஏமாற்றம் அடைந்ததாகவும் அவர் கூறி இருந்தார்.

இது எந்த அளவுக்கு உண்மையோ தெரியவில்லை.தற்போது மாதுரி நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருக்கையில்தான், அடுத்ததாக உள்துறை ரகசியங்களை விற்றதாக ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டிருப்பது அரசு வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

ரவிந்தர் சிங் என்ற அந்த அதிகாரி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உள்நாட்டு பாதுகாப்பு இயக்குநர் பதவியில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், இந்திய பாதுகாப்பின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு கூறிவருவதாக உளவுத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

இந்தியாவிலுள்ள வணிக நிறுவனங்களுக்கு முக்கியமான விபரங்களை விற்றுவருவதாகவும் உளவு தகவல் தெரிவித்தது.

இதனையடுத்துதான், ரவிந்தர்சிங் நடவடிக்கைகள் கடந்த ஒரு மாத காலமாக கவனிக்கப்பட்டுவந்தது. இதன்பின்னரே அவரின் வீடு மற்றும் அலுவலகத்தின் சோதனை செய்யப்பட்டது. சோதனைக்குப்பின் டெல்லி சிறப்புக்காவல் பிரிவு அவரை கைது செய்துள்ளது.

உள்துறை தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த விபரங்களை வெளி நபர்களுக்கு தெரிவித்துள்ளதாக உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை தெரிவித்துள்ளார்.

பணம் மற்றும் செக்ஸ் ஆகியவற்றுக்காகவே அவர் இத்தகைய தேசத் துரோகத்தை அரங்கேற்றியுள்ளார்.

ரவிந்தர் சிங்கிற்கும், தனியார் நிறுவனம் ஒன்றிற்கும் இடைத்தரகராக செயல்பட்ட வினித் என்பவரையும் காவல்துறை வளைத்துள்ளது.

இந்த வினித்துதான் ரவிந்தர்சிங் சார்பில் தொலைபேசி நிறுவனம் ஒன்றுடன் பேரம் பேசியுள்ளார்.

பாதுகாப்பு தொடர்பான தகவல் ஒன்றை அளிப்பதற்காக 5 கோடி ரூபாய் தருமாறு கேட்டுள்ளார். அநேகமாக சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனத்தின் "செக்யூரிட்டி கிளியரன்ஸ்" தொடர்பான கோப்பு உள்துறை அமைச்சகத்தில் நிலுவையில் இருந்திருக்கும்.

அதனை நகர்த்துவதற்காகவே இந்த பேரம் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறும் அதிகாரிகள், ரவிந்தர் சிங், பணத்திற்காகவும், செக்ஸுக்காகவும் எவ்வாறு சங்கேத வார்த்தைகளை பயன்படுத்தி பேரம் பேசினார் என்ற தொலைபேசி தகவல்களையும் வெளியிட்டுள்ளனர்.

" உக்ரைன் சாப்ட்வேர் கிடைக்குமா?" என்று சிங், வினித்திடம் கேட்கிறார்.இதில் 'சாப்ட்வேர்' என்பது பெண்ணை குறிக்கும்.அதேப்போன்று ஓட்டல் அறைக்கு 'ஹார்டுவேர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பணத்திற்கு 'லாடு' என்றும் ரகசிய தகவலுக்கு 'பிரசாதம்' என்றும் குறிப்பிட்டு பேசியுள்ளார் சிங்.

சிங் ஐந்து மொபைல்போன்களை பயன்படுத்தியுள்ளார். இதில் இரண்டு தொலைபேசி எண்கள், தொழிலதிபர் வினித்தின் மொபைல் போனில் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விவகாரங்களை சிங் கையாண்டுள்ள நிலையில், கடந்த காலங்களில் இவர் இதுபோன்ற எத்தனை முக்கிய விடயங்களை விற்றாரோ என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இத்தகைய அதிகாரிகளை தட்டிகேட்டு நடவடிக்கை எடுக்கவேண்டிய இடத்தில் உள்ள அரசியல்வாதிகளும் அதே லட்சணத்தில் இருக்கையில், யார் மீது யார் நடவடிக்கை எடுக்க?
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!