Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2ஜி ஊழல் இராசாவையும் தாண்டியது?

2ஜி ஊழல் இராசாவையும் தாண்டியது?
, வெள்ளி, 19 நவம்பர் 2010 (15:55 IST)
மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறை, செல்பேசி சேவைகளை புதிதாக தொடங்க முன்வந்த நிறுவனங்களுக்கு, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேட்டால் பயன்பெற்ற நிறுவனங்கள் எவைகள் என்பதும், எந்த அளவிற்கு அவைகள் பயன் பெற்றன என்பதையும் அறிய ஆழமான விசாரணை நடத்த வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது.

PTI
தொலைத்தொடர்பு துறையின் அமைச்சராக இருந்த ஆ.இராசா, 1999ஆம் ஆண்டு விதிமுறைகளின்படிதான் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டைச் செய்ததாகவும், அதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும் அமைச்சர் பதவி இழந்த பிறகும் கூறி வருகிறார். ஆனால் இந்தியாவின் தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர், இந்த முறைகேடான ஒதுக்கீட்டால் அரசுக்கு 1.76 இலட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியதோடு மட்டுமின்றி, 2ஜி செல்பேசி சேவை நடத்த அளிக்கப்பட்ட 122 உரிமங்களில், 13 நிறுவனங்களுக்கு அளித்து 85 உரிமங்கள் தகுதியற்றவை என்று கூறியுள்ளார்.

டிராயின் திடீர் விழிப்ப

தலைமை தணிக்கையாளர் கூறிய அந்த 85 உரிமங்களைப் பெற்ற நிறுவனங்களில் ஸ்வான் டெலகாம், லூப், வீடியோகான் ஆகியன உள்ளிட்ட 5 நிறுவனங்கள் பெற்ற 34 உரிமங்களை இரத்து செய்யுமாறு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India - TRAI) மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகத்திற்கு இன்று பரிந்துரை செய்துள்ளது. இவற்றில் தலைமை தணிக்கையாளர் தனது அறிக்கையில் குற்றம்சாற்றியுள்ள ஸ்வான் டெலகாம் (இப்போது எடிசலாட்), யூனிநார், லூப், சியஸ்டீமா உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும். இவைகளுடைய உரிமங்களை இரத்து செய்யுமாறு டிராய் பரிந்துரை செய்யவதற்குக் காரணம்: செல்பேசி சேவைகளை தொடங்கும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்பதாகும். அதாவது முறைகேடாக செல்பேசி சேவைகளை இந்த நிறுவனங்கள் தொங்கியுள்ளன.

இந்த 5 நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட 34 உரிமங்கள் மட்டுமின்றி, மேலும் 28 உரிமங்களையும் இரத்து செய்ய வேண்டும் என்றும் டிராய் பரிந்துரை செய்துள்ளது. அதற்குக் காரணம்: முறையாக சேவைகளைத் துவக்கவில்லை என்பது. அதாவது சேவைகளை முறைகேடாக துவக்கியுள்ளனர் என்று சொல்லாமல் சொல்கிறது டிராய். இதிலும் எடிசலாட், லூப், வீடியோகான் ஆகிய நிறுவனங்கள் அடங்கும்.

டிராய் குறிப்பிடும் அந்த 62 உரிமங்களில், எடிசலாட் 15 தொலைத் தொடர்பு வட்டங்களில் செல்பேசி சேவை நடத்துவும், 8 வட்டங்களுக்கு யூனிநார், 10 வட்டங்களுக்கு இரஷ்யாவின் சிஸ்டீமா - இந்தியாவின் ஷியாம் இணைந்த கூட்டு நிறுவனம், 10 வட்டங்களுக்கு வீடியோகான், 19 வட்டங்களுக்கு லூப் ஆகியன உரிமம் அளிக்கப்பட்டவையாகும

நமது கேள்வி: இதுநாள் வரை டிராய் என்றழைக்கப்படும் இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மெளனம் காத்ததேன்? என்பதே.

டிராய் இன்றைக்கு உரிமம் இரத்து செய்யுமாறு கூறும் 5 நிறுவனங்களும் உரிமம் பெற்றது 2008ஆம் ஆண்டில். இரண்டரை ஆண்டுகள் கும்பகர்ணத் தூக்கம் போட்டது, அதுபற்றி ஏதும் தெரியாமலா அல்லது பெரு நிறுவனங்களின் வசதிக்காகவா? என்பதே. ஏனெனில் டிராய் அமைப்பு, தொலைத்தொடர்பு சேவை முறையாக நடத்தப்படுவதை கண்காணிக்கவும், நுகர்வோர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவுமே உருவாக்கப்பட்டது. அப்படிப்பட்ட அமைப்பு, தலைமை தணிக்கையாளர் அறிக்கை அளித்து, அது அரசியல் புயலை கிளப்பி, அமைச்சரை வீட்டிற்கு அனுப்பிய பிறகு விழித்துக்கொள்வதா? கேலிக்கிடமாக இருக்கிறது.

நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையே தேவை

இந்த உரிமங்கள் யாவும் 2001ஆம் ஆண்டு விலையில் 2008ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்டவை. இதனால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பைத்தான் 3ஜி ஏலத்தில் கிடைத்த வருவாய் அடிப்படையில் ஒப்பிட்டு தலைமை தணிக்கையாளர் அரசிற்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை மதிப்பீடு செய்துள்ளார்.

அவர் கூறிய வருவாய் இழப்பு மிகப்பெரிய அளவிளானது. இந்தியாவின் ஊழல் வரலாறு காணாத மாபெரும் ஊழல். அதே நேரத்தில் அரசுக்கு இந்த அளவிற்கு ஒரு பேரிழப்பை ஏற்படுத்தியதில் பயன்பெற்றோர் அல்லது நிறுவனங்கள் எத்தனை? இதில் அமைச்சர் ஆ.இராசா எவ்வளவு பெற்றிருப்பார் என்பதும், அது எங்கே போய் சேர்ந்திருக்கும் என்பதும் நிச்சயம் நாட்டிற்கு அம்பலப்படுத்த வேண்டிய உண்மைகள் என்றாலும், அந்த முறைகேட்டால் இந்த நாட்டிற்குள்ளும், வெளியும் பயன்பெற்ற நபர்கள் அல்லது நிறுவனங்கள் எத்தனை? எவ்வளவிற்கு? என்பதை நாட்டிற்கு அம்பலப்படுத்த வேண்டியது மிக மிக அவசியமானதாகும்.

பதவி இழந்த அமைச்சர் ஆ.இராசா, முதலில் வந்தவருக்கு முதலில் அளித்தோம், ஆனால் இது வருவாய் பகிர்வின் அடிப்படையில் வழங்கப்பட்டது என்கிறார். அப்படியானால் இதுவரை தொலைத் தொடர்புத் துறைக்கு கிடைத்தது எவ்வளவு? என்பதையும் அறிய வேண்டியுள்ளது.

இந்த உண்மைகளை அறியவதற்கு எந்த விசாரணை சிறந்தது? நிச்சயமாக மத்திய புலனாய்வுக் கழக (சிபிஐ) விசாரணை கூடாது.

அது உண்மையை புதைக்கப் பயன்படுத்தப்படும் புலனாய்வு நிறுவனமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அது ஒட்டோவியோ குட்ரோக்கி போன்ற வசமாக சிக்கிய ‘கனமான’ திருடனையே மிக லாவகமாக தப்பவிட்ட சாதனை புரிந்துள்ளது. எனவே, மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு விசாரணை வேண்டுமெனில் இன்றுள்ள நிலையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையே அவசியமானதாகும்.

இதற்கு காங்கிரஸ் அஞ்சுவதற்குக் காரணம், இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்களாகக் கருதும் எவரையும் விசாரணைக்கு அழைக்கக்கூடிய அதிகாரம் அதற்குள்ளது. அந்த அதிகாரம், காங்கிரஸ் ‘பரிந்துர’ செய்யும் பொது கணக்குக் குழுவிற்கு (Public Accounts Committee) கிடையாது. எனவே வெளிப்படையான விசாரணையைத் தரும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு மத்திய அரசு முன்வர வேண்டும். அப்போதுதான் அது தன்னளவில் தூய்மையானது என்பதை ஓரளவிற்காவது மக்கள் நம்புவார்கள்.

இதுவும் நாடு கடந்த ஊழலா?

webdunia
PIB
ஆனால் இப்பிரச்சனையை கேள்வியாக எழுப்பும் போது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மிகக் கடுமையாகப் பேசுகிறார். அது, நேர்மையின் சாயலாகத் தெரியவில்லை, மேலும் சந்தேகத்தையே கூட்டுகிறது. அது மட்டுமல்ல, 2ஜி முறைகேடு தொடர்பாக வழக்குத் தொடர்ந்துள்ள ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி, அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ள ஆ.இராசாவி்ன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும், அவருக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது கவனிக்கத்தக்கதாகும். ஏனென்னால் இப்படிப்பட்ட விவகாரங்களில் விவரமறிந்தவராக இருப்பவர் இந்த நாட்டில் சுப்ரமணிய சுவாமியை விட யார் உள்ளார்?

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான உண்மைகளை ஆ.இராசா வெளியில் சொல்லிவிடாமல் தடுக்க அவரை ஒருவழியாக ‘அமைதியாக்கி’ ஆள் ஏற்பாடு செய்யும் நோக்குடன் இரண்டு ஐரோப்பிய பெண்மணிகள் துபாய் வந்துள்ளதாகவும், எனவே இராசாவிற்கு உயர் பாதுகாப்பு அளிக்கக் கோரி பிரதமருக்கு தான் கடிதம் எழுதியுள்ளதாக சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, அலைக்கற்றை ஒதுக்கீடு அமெரிக்க வங்கிகளில் நடத்தப்பட்ட ஆவண பரிமாற்ற விவரங்களையும் அமெரிக்க அரசை கேட்டுப் பெறுமாறும் பிரதமரை சு.சாமி கேட்டுக்கொண்டுள்ளார். இவை யாவும் 2ஜி ஊழலின் பரிமாணத்தை நாட்டின் எல்லைகளைக் கடந்து கொண்டு செல்கின்றன. எனவே, விரிவான, வெளிப்படையான நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு மத்திய அரசிற்கு நெருக்குதல் தரவேண்டும்.

இராசாவிற்கு முன் / பின்

அதுமட்டுமல்ல, கூடுதலாக 2ஜி அலைக்கற்றை வழங்கியதில் மட்டும் அரசிற்கு 37,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தலைமை தணிக்கையாளர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். இது குறித்து ஒரு பேட்டியில் ஆ.இராசா வெளியிட்ட மற்றொரு விவரத்தையும் அந்த விசாரணையில் சேர்க்க வேண்டும். தனக்கு முன்னர் தொலைத்தொடர்பு அமைச்சர்களாகயிருந்த பிரமோத் மகாஜன், அருண் ஜோரி, தயாநிதி மாறன் ஆகியோர் கூடுதலாக (அதாவது 6.2 மெகா ஹெர்ட்ஸிற்கும் அதிகமான அலைக்கற்றை) ஒதுக்கீடு செய்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். எனவே விசாரணையை இப்போது நடந்த முறைகேட்டுடன் முடித்துவிடாமல், அவர்கள் காலத்தில் செய்யப்பட்டது எப்படி என்பதையும், அதில் யார் பயனாளர்கள் என்பதையும் அம்பலப்படுத்துவது அவசியமாகும்.

ஏனெனில் 2ஜி அலைக்கற்றயை மிகக் குறைந்த கட்டணத்திற்கு ஒதுக்கீடு செய்ததை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் அருண் ஜெய்ட்லி குறை கூறி பேசியதற்கு பதிலளித்த ஆ.இராசா, “நானாவது வட்டத்திற்கு ரூ.1,650 கோடியை பெற்றுக் கொண்டு அளித்தேன். உங்கள் ஆட்சியில் எந்தக் கட்டணத்தையும் பெறாமலேயே ஒதுக்கீடு செய்தீர்களே” என்று சொன்னதும், அத்தோடு பேசுவதையே நிறுத்திக்கொண்டார் அருண் ஜெய்ட்லி. எனவே இது கட்சிகள் கடந்த பெரும் ஊழல் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனாலேயே இந்த ஊழல் முழுமையாக வெளிவராமல் மறைக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சமும் எழுகிறது.

நமது நாட்டில் பெரும் ஊழலில் சிக்கிய யாரும் தண்டிக்கப்பட்ட வரலாறு இல்லை. இதில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Share this Story:

Follow Webdunia tamil