Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பயன் பெற்றவர்கள் யார்? தணிக்கையாளர் கேள்வி

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2010 (18:46 IST)
FILE
புதிய செல்பேசி நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேட்டினால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு ரூ.1,76.000 கோடி என்று கூறியுள்ள இந்திய தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளரின் அறிக்கை, இதனால் பயன்பெற்ற நிறுவனங்கள் எவை என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடுகளை வெளிக்கொணர்ந்த இந்தியத் தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளரின் அறிக்கை இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், தணிக்கையாளர் கண்டுபிடித்துக் கொடுத்துள்ள விவரங்கள், எப்படிப்பட்ட திட்டமிட்ட மாபெரும் முறைகேடு இது என்பதை தெட்டத் தெளிவாக விளக்கியுள்ளது.

அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஏற்கனவே கடைபிடிக்கப்பட்ட கொள்கையையே தான் கடைபிடித்ததாக, தற்போது பதவி இழந்துள்ள அமைச்சர் ஆ.இராசா கூறியது, முறைகேடு செய்வதற்காகவே வசதியாக அந்தக் கொள்கை கடைபிடிக்கப்பட்டுள்ளது என்பதை தணிக்கையாளர் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

முதலில் விண்ணப்பித்தவருக்கே முதலில் உரிமம் வழங்கப்படும் என்ற ‘வழிமுறைப்பட ி ’ என்று கூறப்பட்டாலும், தான் ‘விரும்பி ய’ நிறுவனங்கள் மட்டுமே உரிமம் பெற வசதியாக, 2008ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதியன்று மதியம் 2.47 மணிக்கு அமைச்சர் இராசா ஓர் அறிவிக்கை செய்துள்ளார். அடுத்த 45 நிமிடத்திற்குள் வந்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று குறுகிய கால அவகாசம் அளிக்கிறார். ஆனால் அந்த கால இடைவெளிக்குள் 13 நிறுவனங்கள் (இவர்கள் யாவருக்கும் அமைச்சர் வெளியிடப்போகும் செய்தி முன்னரே தெரியும் என்பதால்) உரிமத்திற்குரிய வங்கி காப்புடனும், நுழைவுக் கட்டணத்திற்கான வரைவோலையுடன் வந்து உரிமத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர் (!) என்றும், முதலில் வருபவருக்கு முதலில் உரிமம் என்ற வழிமுறை கடைபிடிக்கப்பட்டதாகக் கூறுவது அங்கு கடைபிடிக்கப்படவில்லை என்றும் தணிக்கையாளர் அறிக்கை கூறுகிறது.

அமைச்சர் இராசா வழங்கிய 121 உரிமங்களில் 85 உரிமங்கள் சட்டத்திற்குப் புறம்பானவை என்று கூறியுள்ள தணிக்கையாளர் அறிக்கை, உண்மையில் முதலில் வரும் நிறுவனத்திற்கு முதலில் உரிமம் என்ற வழிமுறை கடைபிடிக்கப்பட்டிருக்குமானால், அந்தந்த நிறுவனங்களின் விண்ணப்பங்கள் தொலைத் தொடர்புத் துறையில் பதிவு செய்யப்பட்டு, அதற்கான எண்ணுடன் கூடிய பற்றுச்சீட்டு அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆனால் அமைச்சர் இராசா கடைபிடித்துள்ள முறை, அவர் அறிவிக்கை செய்த பிறகு வங்கி காப்பு உறுதியுடனும், நுழைவுக் கட்டணத்திற்கான வரைவோலையுடன் வந்த நிறுவனங்களை வரிசைப்படுத்தி உரிமம் அளித்துவிட்டு, தான் முதலில் வந்த நிறுவனத்திற்கு முதலில் என்ற வழிமுறையைக் கடைபிடித்ததாகக் கூறுகிறார் என்று கூறியுள்ள தணிக்கையாளர், அமைச்சர் இராசாவின் தில்லுமுல்லை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

புறக்கணிப்பட்ட பிரதமர், சட்ட அமைச்சக ஆலோசனைகள்!

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏலம் விடுதல் போன்ற வெளிப்படையான நடைமுறையை கடைபிடிக்குமாறும், போதுமான அளவிற்கு அலைக்கற்றை இல்லாத நிலையில் உரிமக் கட்டணத்தையும், தற்போதுள்ள நுழைவுக் கட்டணைத்தை உயர்த்துமாறும் 2007ஆம் ஆண்டு நவம்பரில் பிரதமர் மன்மோகன் சிங், தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் இராசாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தின் நகலை தனது அறிக்கையின் கூடுதல் இணைப்பில் தலைமை தணிக்கையாளர் சேர்த்துள்ளார். ஆக, இந்த முறைகேட்டில் பிரதமர் அலுவலகத்திற்கு தொடர்பில்லை என்று தணிக்கையாளர் அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

இதேபோல், எந்தெந்த நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவது, உரிமம் மற்றும் நுழைவுக் கட்டணம் ஆகியவற்றை நிர்ணயிப்பது ஆகியவற்றை முடிவு செய்ய மத்திய அமைச்சர்களைக் கொண்ட அதிகாரமிக்க அமைச்சர்களின் குழுவை ( Empowered Group of Ministers) நியமிக்கலாம் என்று சட்ட அமைச்சகம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

இதனை ஏற்காத அமைச்சர் இராசா, புதிதாக கொள்கை வகுக்கும்போதுதான் அதிகாரமிக்க அமைச்சரவைக் குழுவை நியமித்து முடிவு செய்ய வேண்டுமே தவிர, இந்த உரிமம் ( Unified access service licence) வழங்க அது தேவையற்றது என்று சட்ட அமைச்சகத்திற்கு பதிலளித்துள்ளார்.

சட்ட அமைச்சகத்திற்கு தொலைத் தொடர்பு அமைச்சகம் அளித்த இந்த பதில் பொதுவாக கடைபிடிக்கப்படும் அமைச்சரவையின் ஒட்டுமொத்த பொறுப்பு ( Collective Responsibility) என்ற மரபிற்கு முரணானதாகும் என்று தணிக்கையாளர் கூறியுள்ளார்.

3 ஜி சேவை உரிமத்தை ஏலம் விட்டதில் அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.67,000 கோடியாகும். இதன் அடிப்படையில், 2ஜி உரிமம் 122 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதிலும், 35 நிறுவனங்களுக்கு இரட்டை தொழில்நுட்ப உரிமங்களை வழங்கியதிலும் அரசிற்கு வரவேண்டிய வருவாய் ரூ.1,76,645 கோடி ரூபாய் என்று மதிப்பிட்டுள்ளதாக தலைமைத் தணிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த முறைகேட்டில் பயன் பெற்ற நிறுவனங்கள் எவை?

மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கு இந்த அளவிற்கு மிகப் பெரும் இழப்பை ஏற்படுத்திய 2ஜி முறைகேடால் பயன் பெற்ற பெரு நிறுவனங்கள் (கார்ப்பரேட்) எவை என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் தலைமை தணிக்கையாளர்.

செல்பேசி சேவை நடத்திவரும் எந்த ஒரு நிறுவனமும், ஒரே தொலைத் தொடர்பு வட்டத்தில் சேவையை நடத்திவரும் இரண்டு நிறுவனங்களில் 10 விழுக்காட்டிற்கும் அதிகமாக முதலீடு செய்திருக்கக் கூடாது. ஆனால் 2ஜி உரிமம் பெற்ற ஸ்வான் டெலகாம் நிறுவனம், இந்தியா முழுவதும் செல்பேசி சேவையை நடத்திவரும் ஒரு பெரும் நிறுவனத்தின் முதலீட்டைப் பெற்றுள்ளது. உரிம விதிமுறைகளின்படி, ஸ்வான் டெலகாம் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால், அதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் தங்களுக்கு எந்த முதலீடும் இல்லை என்று அந்த இந்தியாவின் முதன்மையான நிறுவனம் கூறியுள்ளது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஸவான் டெலகாம் மட்டுமின்றி, யூனிடெக், லூப் அண்ட் டேட்டா காம் அலையன்ஸ் இன்ஃப்ரா ஆகியனவும் விதிமுறைகளை மீறியுள்ளன. மொத்ததில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட 122 நிறுவனங்களில் 86 சட்டத்திற்குப் புறம்பானவை என்று தலைமை தணிக்கையாளர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

2 ஜி ஒதுக்கீட்டில் நடைபெற்ற விதிமுறை மீறல்கள், முறைகேடுகள் ஆகிய அனைத்திற்கும் ஆதாரங்களாக விளங்கும் சான்றுகளை ஒரு இணைப்பாகவே தனது 77 பக்க அறிக்கையுடன் இணைத்துள்ள தலைமைத் தணிக்கையாளர், “2ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கல் தன்னிச்சையாகவும், நியாயமற்றதாகவும், சமமின்மையாகவும் நடந்துள்ளது. பிரதமர் வெளிப்படையாக நடத்துமாறு கூறியுள்ளார். சட்ட அமைச்சகம் அதிகாரமிக்க அமைச்சர்கள் குழுவை நியமித்து உரிமம் மற்றும் கட்டணத்தை நிர்ணியிக்கலாம் என்று கூறியுள்ளது. ஆனால் எதையும் தொலைத் தொடர்பு அமைச்சகம் ஏற்கவில்லை. தொலைத்தொடர்பு ஆணையத்தையும் அணுகவில்லை. நிதி ஆளுமை, விதிமுறைகள், நடைமுறைகள் என்று அனைத்தும் மீறப்பட்டு, 2001ஆம் ஆண்டு விலைக்கு 2008ஆம் ஆண்டு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளத ு” என்று கூறியுள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments