Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு எதற்கு?

காவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு எதற்கு?
, சனி, 13 நவம்பர் 2010 (16:54 IST)
FILE
காவிரி நதி நீர்ப் பிரச்சனையில“ஏடாகூடமாகப் பேசி கர்நாடகத்திற்கு தெம்பூட்டுவதை விட, அடுத்து என்ன செய்யலாம் என்பதை முடிவு செய்ய அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுவோம், விவாதிப்போம். அதில் நீங்கள் சொல்லும் யோசனை வெற்றி பெறுமா? வெற்றி பெறாதா? அது நிறைவேறுமா? நிறைவேறாதா? என்பதையெல்லாம் சிந்திப்போம்” என்று தமிழக சட்டப் பேரவையில் இப்பிரச்சனை மீது நடந்த விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் சட்டப் பேரவையில் தமிழ்நாடு எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஆளும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடுமையாக அரசியல் விவாதம் நடந்துள்ளதுதான் இதுவரை வரலாறாக உள்ளதே தவிர, அந்த விவாதம் எந்த விதத்திலும் தமிழ்நாட்டிற்கு பலன் பெற்றுத் தராது என்பதற்கு, காவிரி பிரச்சனையில் நேற்று நடந்த விவாதமும், அதற்கு தமிழக முதல்வர் அளித்து பதிலும் போதுமான சான்றுகளாகும்.

முதல்வரின் பேச்சைப் பார்த்தால், ஏதோ தமிழ்நாட்டில் ஆளும், எதிர்க்கட்சிகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையின்மையின் காரணமாகவே காவிரியில் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடகம் பிடித்து வைத்துக்கொண்டு மறுப்பதுபோல் உள்ளது. ஆளும் தி.மு.க. முக்கிய எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க. ஆகியவற்றிற்கு இடையே ஒத்த கருத்து ஏற்பட்டு, அவர்கள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டால், அதைக் கண்டு பயந்து காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுவிடுமா என்ன? கேட்பதற்கே நகைசுவையாகவுள்ளது.

காவிரி நதி நீர்ப் பகிர்வு பிரச்சனை சட்டப்பூர்வமாக வழக்காகி உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று, உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையின்படி, மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர்த் தகராறு சட்டம் - 1956இன் கீழ் நடுவர் மன்றம் (தீர்ப்பாயம்) 1990இல் அமைக்கப்பட்டு, அது ஒவ்வொரு நீராண்டிலும் தமிழ்நாட்டிற்கு 205 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் காவிரியில் திறந்துவிட வேண்டும் என்று ஒரு அட்டவணையுடன் கூடிய ஒரு இடைக்கால உத்தரவை வழங்கி, அது மத்திய அரசால் அரசிதழில் (கசட்) வெளியிடப்பட்டு, இன்றளவும் நடைமுறையில் உள்ள உத்தரவாக உள்ளது.

காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியிருந்தாலும், அது தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளாமல் மேல் முறையீட்டிற்கு சென்றுள்ளதால், அதன் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே இறுதித் தீர்ப்பு குறித்து இப்போதைக்குப் பேச எந்த அவசியமும் இல்லை.

அப்படிப்பட்ட நிலையில் காவிரி மன்றம் அளித்த இடைக்கால உத்தரவின் அடிப்படையில் கர்நாடக அரசு, தமிழ்நாட்டிற்கு உரிய நீரை, நடுவர் மன்றம் அளித்த அட்டவணையின்படி திறந்துவிட வேண்டியது சட்டப்பூர்வமான கட்டாயமாகும். அதனை கர்நாடகம் செய்யவில்லை. எனவே, உச்ச நீதிமன்றத தீர்ப்புக்கு இணையான நடுவர் மன்றத்தின் உத்தரவை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்று, கர்நாடக அரசை தட்டிக்கேட்கககூடிய அரசமைப்பு சட்ட ரீதியான கட்டாயம் மத்திய அரசிற்கு (அதன் நீர் வள அமைச்சகத்திற்கு) உள்ளது. ஆனால் மத்திய அரசு அமைதி காக்கிறது. இதனை ஒரு முறை (ராசா மேட்டரை செட்டில்பன்ன டெல்லி சென்றிருந்தபோது) தமிழக முதல்வர் கருணாநிதி செய்தியாளர்கள் சந்திப்பிலேயே சுட்டிக்காட்டினார். நதி நீர்ப் பிரச்சனைகளில் தனது கடமையை மத்திய அரசு செய்யவில்லை என்று டெல்லியில் இருந்தபடியே வெளிப்படையாக குற்றம் சாற்றினார்.

webdunia
FILE
தமிழக முதல்வர் கூறிய குற்றச்சாற்றை ஒரு கேள்வியாக பிரதமரிடமே செய்தியாளர்கள் தொடுத்தனர். அதற்கு உரிய பதில் தர முடியாமல் பிரதமர் மன்மோன் சிங் மழுப்பியதெல்லாம் இப்பிரச்சனையை கவனித்துவரும் அனைவருக்கும் நினைவிருக்கும்.

ஆக, தமிழக முதல்வர் கூறியபடி, காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவை நிறைவேற்ற மறுக்கும் கர்நாடக அரசின் மீது மத்திய அரசு அழுத்தம் தரவில்லை. மாறாக, ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்குச் செல்லுமாறு கூறிவிட்டு ஒதுங்கிக்கொள்கிறது.

இதற்கு எதற்கு மத்திய அரசு? என்ற கேள்வியை தமிழ்நாடு மட்டுமல்ல, ஆந்திரம், இராஜஸ்தான் மாநிலங்கள் கூட எழுப்பியுள்ளன. கர்நாடக அணைகளில் போதுமான அளவிற்குத் தண்ணீர் இருந்தும், “எங்கள் அணைகள் முழுமையாக நிரம்பிய பிறகே தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிடுவோம்” என்று கர்நாடக அரசு ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது என்றால், மத்திய அரசு என்ன செய்துக் கொண்டிருக்கிறது? அப்படியானால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணையான நடுவர் மன்றத்தின் உத்தரவிற்கு என்ன பொருள்? இதுதான் தமிழக முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதாவும் பிரதமர் மன்மோகன் சிங்கைப் பார்த்த எழுப்ப வேண்டிய கேள்வி.

அதைச் செய்யாமல் இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சாற்றி அறிக்கை விட்டுக்கொண்டு, அதையே அர்த்தமில்லாமல் சட்டப் பேரவையிலும் விவாதிப்பார்கள் என்றால், இவர்கள் இருவரும் திட்டமிட்டே, இரகசிய ஒற்றுமையுடன் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றுதான் பொருள்.

அனைத்துக் கட்சிக் கூட்டம் இப்போது எதற்கு? அதையெல்லாம் போட்டு, தீர்மானம் நிறைவேற்றியப் பின்னர்தானே உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று வழக்குத் தொடர்ந்தது. அதே கதையை மீண்டும் அரங்கேற்றுவது யாரை ஏமாற்ற?

தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. இருவருக்குமே தங்கள் அரசியல் நலனிற்காக காங்கிரஸ் கட்சியின் கூட்டணி தேவை. அதற்காக அடிக்கும் கூத்தில் காவிரி பிரச்சனையையும் பகடையாக்குகிறார்கள். இதில் பிரச்சனையாவது தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வதாரமே.

இந்த இரண்டு திராவிடக் கட்சிகளும், காங்கிரஸூடன் இணைந்துகொண்டு தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தை அழித்து வருகிறார்கள் என்பதற்கு இவர்களின் அர்த்தமற்ற இந்த அரசியல் பிள்ளை விளையாட்டே போதுமான சான்றாகும்.

Share this Story:

Follow Webdunia tamil