Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கானல் நீராகுமோ காமன்வெல்த் போட்டிகள்?

கானல் நீராகுமோ காமன்வெல்த் போட்டிகள்?
, புதன், 22 செப்டம்பர் 2010 (19:21 IST)
FILE
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக ஒவ்வொரு நாளும் நிகழும் சம்பவங்களும், செய்திகளும் நமது நாட்டின் மானத்தை சர்வதேச அளவில் கப்பலேற்றிக் கொண்டிருக்கிறது.

எந்த ஒரு நாட்டிற்கும், உலகின் பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் கலந்துகொள்ளும் ஒரு சர்வதேச போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதென்பது மிகுந்த சவாலான ஒரு நடவடிக்கையாகும். ஆனால் காமன்வெல்த் போட்டிகளை இதுவரை எந்த ஒரு நாடும் நடத்தியிராத அளவிற்கு நாங்கள் நடத்தப்போகிறோம் என்று கூறிவிட்டு, போட்டி தொடங்குவதற்கு இன்னமும் 10 நாட்கள்தான் இருக்கிறது என்ற நிலையில், நடைபாலம் ஒன்று இடிந்து விழுந்தது, அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 30 பேர் காயமுற்றுள்ளனர் என்கிற செய்தியும், பளு தூக்கும் போட்டி நடைபெறவுள்ள அரங்கின் உள் விதானம் இடிந்து விழுந்தது என்று இன்று வந்துள்ள செய்தியும் வருத்தத்தையும், வெட்கத்தையும் ஏற்படுத்துகின்றன.

இதுமட்டுமல்ல, புதுடெல்லி வந்துள்ள காமன்வெல்த் போட்டிகள் கூட்டமைப்பின் தலைவர் மைக்கேல் ஃபென்னல் தலைமையிலான குழுவினர், நேற்று போட்டியில் கலந்துகொள்வோர் தங்கும் கிராமத்தைப் (Sports village) பார்த்து அதி்ர்ச்சியுற்றுள்ளனர். தாங்கள் கண்டதை ஒரு கடிதமாக்கி இந்திய அமைச்சரவைச் செயலர் எம்.கே. சந்திரசேகருக்கு ஒரு கடிதத்தையே அனுப்பியுள்ளனர். அதில் விளையாட்டுக் கிராமத்தின் தூய்மை தங்களுக்குக் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் அடுத்த இரண்டு நாட்களில் டெல்லிக்கு வரவுள்ள நிலையில், அவர்கள் தங்க வேண்டிய அறைகளில் தெரு நாய்கள் படுத்திருக்கும் காட்சி காமன்வெல்த் போட்டிகள் கூட்டமைப்புக் குழுவினரை பெரிதும் பாதித்துள்ளது. ஆனால் இந்தக் கடிதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயலரும், காமன்வெல்த் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளருமான லலித் பானட், தூய்மை குறித்து காமன்வெல்த் குழுத் தலைவர் கூறிய கருத்திற்காக நாம் வெட்கப்படத் தேவையில்லை என்று கூறியுள்ளது தன்னை இந்தியன் என்று நினைக்கும் இந்த நாட்டின் குடிமகன் ஒவ்வொருவரையும் தலை குனியச் செய்யக் கூடியதாகும்.

விளையாட்டைக் கவ்வியிருக்கும் ஊழல் சக்திகள

காமன்வெல்த் விளையாடுப் போட்டிகளை நடத்தும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தினர் மட்டுமின்றி, இப்போது டெல்லி அரசும், நேற்று இரவு முதல் பிரதமர் அலுவலகமும் களமிறங்கி செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. போட்டிகளை நடத்துவது தொடர்பான ஏற்பாடுகள் ஒவ்வொரு நாளும் எந்த அளவிற்கு முடிந்துள்ளது என்பது குறித்து அன்றாடம் தனக்கு விவரமளிக்குமாறு பிரதமர் அமைச்சரவைச் செயலரை கேட்டுக்கொள்ளும் அளவிற்கு பிரச்சனை தலைக்கு மேல் வெள்ளமாக கரைபுரண்டு ஓடுகிறது.

webdunia
PTI
காமன்வெல்த் போட்டிகளை நடத்த இந்திய அரசின் சார்பில் ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தாலும், அதற்கான பொறுப்பையும் செலவையும் டெல்லி மாநில அரசும், இந்திய ஒலிம்பிக் சங்கமுமே ஏற்றுள்ளன.

இந்த போட்டிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ரூ.36,000 கோடியாகும்! ஆனால் போட்டி துவங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர்வரை செலவிடப்பட்டதாகக் கூறப்படும் தொகையான 27,600 கோடியில் சகட்டுமேனிக்கு ஊழல் நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்தது.

காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதற்காக அரங்குகள், மைதானங்கள் ஆகியவற்றை நவீனப்படுத்தவும், அதில் தேவையான வசதிகளை செய்யவும் ரூ.680 கோடி மட்டுமே அதுவரை செலவு செய்யப்பட்டிருப்பதாகவும், ஆனால் செய்யப்பட்ட செலவில் பெரும்பகுதி ஊழல் என்பது அம்பலமானது.

எப்படியெல்லாம் ஊழல் நடந்தது என்பது குறித்த செய்திகளின் அடிப்படையில் தமிழ்.வெப்துனியா.காம் பல கட்டுரைகளை வெளியிட்டது. ரூ.27.600 கோடியில் ரூ.680 கோடி போக மீதமுள்ள சற்றேறக்குறை ரூ.27,000 கோடி டெல்லியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த செலவிடப்பட்டதாகவும், அதிலும் ஊழல் என்றும் செய்திகள் வெளியாயின.

அன்றுமுதல் ஒவ்வொரு நாளும் ஊழல் செய்திகள் வெளிவரத் தொடங்கின. ‘காமன்வெல்த’ என்ற பெயரே அதன் பொருளை தவறாக புரிந்துகொண்டு கருத்துக் கூறும் அளவிற்கு பொதுவில் பேசப்படும் நிலை இன்று உள்ளது.

நமது நாட்டின் அரசியல் - நிர்வாக அமைப்பில் ஊழல் என்பது ஒரு பெரிய விடயமில்லைதான். போஃபர்ஸ் பீரங்கி வாங்கியதிலேயே ஊழலைப் பார்த்த நாடு இது. ஆனால், இப்படிப்பட்ட ஒரு பன்னாட்டு அளவிலான ஒரு விளையாட்டுப் போட்டியை நாம் நடத்தும்போது அது நமது நாட்டின் இளம் வீரர்கள், வீராங்கனைகளுக்கு தங்களுடைய திறனை வெளிப்படுத்ததும் ஒரு சுலபமான வாய்ப்பைத் தருகிறது. ஏனெனில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நட்பு அடிப்படையில் நடைபெறும் போட்டிகளே தவிர, தகுதி பெற்ற போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் போட்டியல்ல. எனவே, வளர்ந்துவரும் இளம் போட்டியாளர்களுக்கு சர்வதேச அளவில் புகழ் பெற்ற போட்டியாளர்களுடன் விளையாடும் வாய்ப்பை அளிக்கிறது. அந்த வகையில்தான் காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதென்ற முடிவை அனைவரும் வரவேற்றோம். ஆனால், அந்த விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்கிறோம் என்ற போர்வையில் நமது நாட்டின் விளையாட்டு அமைப்புகளும், அவர்களோடு சேர்ந்தியங்கும் அரசுத் துறைகளும் அமைப்புகளும் அதனை ஊழல் விளையாட்டாகவே ஆக்கிவிட்டதுதான் கொடுமையானது.

காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டில் நடந்துள்ள ஊழலிற்காக அதன் ஏற்பாட்டாளர்கள் யாரும் வெட்கப்பட்டதாகத் தெரியவில்லை. எல்லோரும் சிரிக்கிறார்கள், டேக் இட் ஈசி என்கிறார்கள், வெட்கப்படத் தேவையில்லை என்கிறார்கள்.

இது நமது நாட்டின் விளையாட்டு அமைப்புகளின் உண்மையான முகத்தை அடையாளம் காட்டியுள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நமது நாட்டில் திறன் பெற்ற விளையாட்டாளர்கள் உள்ளார்கள், ஆனால் மேலுக்கு வருவதில்லை என்று கூறப்படுவதுண்டு. அதற்குக் காரணம் இதுதான். விளையாட்டு அமைப்புகளை கைப்பற்றியிருக்கும் ‘நபர’களுக்கும் விளையாட்டிற்கும் சம்மந்தமில்லாததும், விளையாட்டை, விளையாட்டாளர்களை மேம்படுத்த வேண்டிய அந்த நபர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள விளையாட்டு அமைப்புகளை பயன்படுத்திவருவதுதான் நமது நாடு 110 கோடி மக்களைக் கொண்டிருந்தும் ஒரு விளையாட்டுச் சக்தியாக உருவெடுக்காததற்குக் காரணமாகும்.

இந்தியாவைப் பற்றியுள்ள அதிகார வெறிகொண்ட அந்த ஊ.ழல் சக்தி, விளையாட்டு அமைப்புகளையும் கைப்பற்றி வைத்துள்ளது. இந்த அமைப்புக்களின் பொறுப்பில் உள்ளவர்கள், உதாரணத்திற்கு ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடியில் இருந்து ‘வெட்கப்படாத’ லலித் பானட் வரை நீண்ட காலமாகத் தங்கள் பிடியில் அமைப்புக்களை வைத்துள்ளார்கள். இவர்கள் ஆளும் கட்சியின் கரங்கள். இவர்களைத் தாண்டி ஒரு விளையாட்டும் மேம்பாடு அடையாது.

போட்டிகளை நடத்தும் திறன‌ற்றதா இந்தியா?

webdunia
FILE
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்தத் திராணியற்ற நாடா இந்தியா? இல்லை, இல்லவே இல்லை. 1983இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மிக நன்றாக, அனைத்து விளையாட்டு அமைப்புகளும் பாராட்டும் அளவிற்கு டெல்லியில் நடைபெற்றது. அந்த விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்படுவதற்கு ராஜீவ் காந்தி பெரிதும் துணை நின்றார்.

அதேபோல், ஒலிம்பிக் சங்கத்திற்கு உட்படாத எத்தனையோ விளையாட்டுகள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தப்பட்டுள்ளன. ஆனால் ஒலிம்பிக், ஹாக்கி, கால்பந்தாட்டச் சங்கங்கள் ஏற்பாடு செய்யும் போட்டிகளில்தான் தரமற்ற நிலை நிலவி வருகிறது. காரணம் ஊழல் நிர்வாகம்.

விளையாட்டை அரசியலின் கட்டுப்பாட்டிலிருந்து பிரிக்க வேண்டும். இந்த நாட்டின் பல்கலைக் கழகங்களில் விளையாட்டுத் துறைகளின் இயக்குனர்களாக உள்ள பலர், விளையாட்டு நிர்வாகத்திலும், பயிற்சியிலும் மிகவும் தேர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் விளையாட்டு அமைப்புகளை வழிநடத்த இந்த ஊழல்வாதிகள் அனுமதிப்பதில்லை. அதனால்தான் பல்கலைக் கழக அளவில் சிறந்து விளங்கும் விளையாட்டாளர்கள் பிறகு காணாமல் போவது நடந்துவருகிறது.

இன்றைய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு எப்படிபட்ட பயிற்சியை அளிக்க வேண்டும் என்பது குறித்து கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் 3 நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. பல்வேறு பல்கலைக் கழகங்களில் விளையாட்டு இயக்குனர்கள் 30 பேர் தங்களுடைய அறிக்கைகளை சமர்ப்பித்தனர். இந்த கருத்தரங்கை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் உடல் பயிற்சிக் கல்வித் துறை இயக்குனர் ஏற்பாடு செய்திருந்தார். அந்த கருத்தரங்களில் வெளியிடப்பட்ட அறிக்கைகளை கடைபிடித்தால் போதும் சர்வதேச அளவில் சிறந்த விளையாட்டாளர்களை நம்மால் உருவாக்க முடியும். அதற்கு விளையாட்டு அமைப்புகளை அரசியல் பின்னணிக் கொண்ட முதலைகளிடமிருந்து பிடுங்க வேண்டும்.

காமன்வெல்த் அமைப்பும், விளையாட்டும

அக்டோபர் 3ஆம் தேதி டெல்லியில் துவங்கவுள்ள காமன்வெல்தை விளையாட்டுப் போட்டிகள் பன்னாட்டு அளவில் மதிக்கப்படும் ஒரு போட்டியல்ல. அதில் கலந்துகொள்வதற்கு தகுதிப் போட்டிகள் நடத்தப்படுவதில்லை. அதில் செய்யப்படும் சாதனைகளுக்கும் சர்வதேச அங்கீகாரம் ஏதுமில்லை. காரணம் இது காமன்வெல்த் நாடுகளிடையே நட்பை வளர்க்க நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளே.

காமன்வெல்த் அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய தெற்காசிய நாடுகளில் இருந்து ஆஸ்ட்ரேலியா, நியூ ஸீலாந்து ஆகிய பசிபிக் நாடுகளும், கனடா போன்ற மேற்கத்திய நாடுகளும், தடகளச் சக்திகளாகக் கருதப்படும் ஜமைக்கா போன்ற மேற்கிந்திய தீவு நாடுகள் உட்பட 54 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பிரிட்டிஷ் காலனி நாடுகளாக இருந்து, பின்னர் அதன் ஆதிக்கத்தில் இருந்து விடுதலைப் பெற்ற நாடுகளையெல்லாம் உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்பே காமன்வெல்த் என்பது.

உலகின் 30 விழுக்காடு மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளின் ஒரு பெரும் கூட்டமைப்பாக இருந்தாலும், காமன்வெல்த் உலகளாவிய அளவில் துடிப்புடன் இயங்கும் ஒரு பன்னாட்டு அமைப்பு அல்ல.

உறுப்பு நாடுகளில் ஜனநாயகத்தை மேம்படுத்துவது, சர்வதேச அமைதிக்கும், மனித உரிமைக்கும், சமத்துவத்திற்கும் ஒன்றிணைந்து பாடுபடுவது என்றெல்லாம் காம்ன்வெல்த் அமைப்பின் நோக்கம் என்று கூறப்பட்டாலும், இந்த விடயங்களில் அது என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று் பார்த்தால் ஒன்றுமில்லை என்பதே உண்மையாகும்.

காமன்வெல்த் அமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ள பலவற்றில் மனித உரிமைகள் காற்றாய் பறக்கின்றது, இலங்கை போன்ற நாடுகளில் மனித உரிமை வீசை என்ன விலை என்று கேட்கும் அளவிற்கு உள்ளது. அங்கே சொந்த நாட்டு மக்கள் மீதே அந்நாட்டுப் படைகள் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி இனப் படுகொலையில் ஈடுபட்டபோது ஒரு நாடு கூட இந்த காமன்வெல்த் அமைப்பைப் பற்றிப் பேசவில்லை.

அரசியல், பொருளாதார நிலைகளில் எப்படி ஒரு அடையாளமற்ற அமைப்பாகத் திகழ்கிறோ அவ்வாறே காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளும் அங்கீகாரமற்ற ஒரு போட்டியாக இருக்கிறது. ஆயினும் இது நாம் மேலே குறிப்பிட்டிருப்பதைப் போல் வளர்ந்துவரும் இளைய போட்டியாளர்களுக்கு தங்கள் திறனை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாகிறது. அந்த வாய்ப்பு கிடைக்குமா? அல்லது ஊழல்வாதிகளால் கானல் நீராகுமா?

Share this Story:

Follow Webdunia tamil