Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்னி முகாம்களில் மனிதப் பேரழிவு அபாயம்: அம்னஸ்டி, ஐ.நா. எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2009 (17:12 IST)
இலங்கையில் வட கிழக்குப் பருவ மழை பொழியத் துவங்கினால் அதன் காரணமாக வன்னி முகாம்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மிகப் பெரிய மனிதப் பேரழிவு ஏற்படும் அபாயம் உள்ளதென பன்னாட்டுப் பொது மன்னிப்புச் சபையும் (அம்னஸ்டி இண்டர்நேஷணல்), ஐ.நா.வும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

FILE
சிறிலங்க அரசு ஈழத் தமிழர்கள் மீது தொடுத்தப் போரினால் தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் 3 இலடசம் பேர் கடந்த 5 மாதங்களாக வன்னியில் சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 41 முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த முகாம்களில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லையென்றும், அங்குள்ள மக்களின் விருப்பத்திற்கு எதிராக அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதனாலும் இம்முகாம்களை சிறை முகாம்கள் ( Detention Camps) என்றும், ஒட்டுமொத்தத் தண்டனையாகவே ( Collective Punishment) அவர்களை சிறிலங்க அரசு அடைத்து வைத்துள்ளதெனவும் கூறியுள்ள அம்னஸ்டி இண்டர்நேஷணல், வட கிழக்குப் பருவ மழை அம்மக்களுக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாக ஆகப் போகிறது என்றும், மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அதனால் பெரும் மனிதப் பேரழிவு நிகழும் அபாயம் உள்ளதெனவும் எச்சரித்துள்ளது.

இதே எச்சரிக்கையை சிறிங்க அரசிற்கு விடுத்துள்ள அந்நாட்டிற்கான ஐ.நா. அலுவலர், மழையால் ஏற்படும் வெள்ளப் பெருக்கினால் கழிவு நீரும் கலந்து வெளியேறும் நிலை உள்ள இடங்களில் இருந்து முகாம்களை அகற்றுமாறும், அதில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார். கடந்த செப்டம்பரில் பெய்த மழையிலேயே அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அம்மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர்.

சிறிலங்காவிற்கு அளித்துவரும் அவசர நிதியுதவிகள் தவிர மற்ற நிதியுதவிகளை முழுமையாக நிறுத்தியுள்ள இங்கிலாந்து, முகாம்களில் உள்ள மக்களை உடனடியாக விடுவிக்குமாறு சிறிலங்க அரசிற்கு அழுத்தும் கொடுத்து வருகிறது. இதனை இங்கிலாந்து உள்நாட்டு மேம்பாட்டு அமைச்சர் மைக் ஃபோஸ்டர் சிறிலங்க அரசிற்கு அறிவுறுத்தியுள்ளார்.

“முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாதுகாப்பும், உதவியும் அளிக்க வேண்டும் என்று கூறுவது கருணையின் அடிப்படையில் அல்ல, அது அவர்களுக்குரிய உரிமை. பாதுக்காப்பை தேடிக் கொள்ளவும், எங்கு சென்று தங்கிக் கொள்வது என்பதும் அவர்களின் விருப்பத்திற்குட்பட்டதாகவே இருக்க வேண்டும ்” என்று அம்னஸ்டி இண்டர்நேஷணல் அமைப்பின் இலங்கைப் பொறுப்பாளர் யோலண்டா ஃபோஸ்டர் கூறியுள்ளார்.

“முகாம்களில் உள்ள மக்கள் வெளியேறத் துடிக்கின்றனர். அவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படுவதை சிறிலங்க அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ள...

யோலண்டா ஃபோஸ்டர், “போதுமான மருத்துவ வசதியின்மையால் பல பெண்கள் பொது இடத்திலேயே குழந்தை பெற்றுள்ளனர ்” என்ற திடுக்கிடும் செய்தியை வெளியிட்டுள்ளார்.

FILE
“5 முதல் 9 வரையிலான முகாம்களில்தான் போதுமான மருத்துவ வசதிகள் உள்ளன. சிகிச்சை பெறுவதற்காக காலை முதல் வரிசையில் நிற்கின்றனர். இந்த வரிசையில் கற்பமுற்றப் பெண்மணி எவ்வாறு பல மணி நேரம் நிற்க முடியும்? போர் முடிந்துவிட்டது என்றால் இவர்களை இன்னமும் சிறிலங்க அரசு விடுவிக்காதது ஏன்? ” என்று யோலண்டா கேள்வி எழுப்பியுள்ளார்.

பொது மக்களோடு கலந்துள்ள விடுதலைப் புலிகளை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறி, முகாம்களில் இருந்து எவரையும் வெளியேற விடாமல் இராணுவம் தடுத்து வருகிறது என்று தங்களுக்குத் தகவல் வந்துள்ளதாக கூறியுள்ள யோலண்டா, விடுதலைப் புலிகள் கலந்துள்ளார்கள் என்று காரணம் காட்டி எல்லோரையும் தண்டிக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

வன்னி முகாம்களில் இருந்து பொதுமக்களை விடுவித்து வருவதாக சிறிலங்க அரசு கூறிவருவது குறித்துப் பேசியுள்ள யோலண்டா, அவர்களை வன்னி முகாம்களில் இருந்து வெளியேற்றி மற்ற முகாம்களுக்கு கொண்டு சென்று அடைத்து வைக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

முகாம்களை திறந்து விடுங்கள் என்ற பெயரில் ஒரு இயக்கத்தையே கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அம்னஸ்டி இண்டர்நேஷணல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா.வும், அம்னஸ்டியும் இந்த அளவிற்கு வன்னி முகாம்களின் அவலத்தை எடுத்துரைத்தப் பின்னரும், அம்முகாம்களில் உள்ளவர்களை உடனடியாக விடுவிக்குமாறு இதுவரை ஒரு வார்த்தை கூட இந்தியா சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் தமிழக நாடாளுமன்றக் குழு நேற்று முன் தினம் வன்னி முகாம்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளது.

தமிழக நாடாளுமன்றக் குழுவினர் நன்றாக பாரமரிக்கப்படும் முதல் ஒன்பது முகாம்களில் உள்ள எட்டு முகாம்களை பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

Show comments