Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைஞருக்கு ஆஸ்கர் விருது தரலாம்!

Webdunia
திங்கள், 23 பிப்ரவரி 2009 (13:04 IST)
திரைத்துறையினரின் கனவாகவும், மிக உயரியதாகவும் கருதப்படும் ஆஸ்கார் விருதுகளை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பெற்றிருப்பது, தமிழர்களாகிய நாம் அனைவரையும் பெருமையடையச் செய்துள்ளது.

webdunia photoFILE
ஆஸ்கார் விருது பூரிப்பால், அடுத்த சில தினங்களுக்கு ஈழத் தமிழரின் வேதனை வெளிப்பாடுகள் ஊடகங்களில் மறைந்து போகலாம்; அல்லது மறக்கடிக்கப்படலாம். அதுவே நமது முதல்வரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கக் கூடும்.

ஆஸ்கார் விருது வென்ற சாதனைக்கு முன்னால், வழக்கறிஞர்- காவல்துறையினர் பிரச்னை தொடர்பாக தான் அறிவித்த உண்ணாவிரத 'மிரட்டலுக்கு' ஊடகங்களில் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படாதது அவருக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கக்கூடும்.

வழக்கறிஞர்-காவல்துறையினர் மோதலால் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமாக பாதிக்கப்படும் என்று கருதும் நமது முதல்வரின் கவலை நியாயமானதே. அதற்காக அவர் அறிவித்த உண்ணாவிரத முடிவும், அவர் விரும்பிய பலன்களை ஒருவேளை தரலாம்.

மருத்துவமனையில் உடல்நலம் குன்றிய நிலையில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ள முதல்வரின் முடிவு, அனைவருக்கும் கவலை தரக்கூடிய ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆயினும், அவரது இந்த அறிவிப்புக்கு இதுவரை எவ்வித எதிர் விளைவுகளோ, அவர் விரும்பிய சாதகமான அறிவிப்புகளோ வரவில்லை. குறைந்தபட்சம், 'உண்ணாவிரதம் வேண்டாம்.. மறுபரிசீலனை செய்யுங்கள்..' என்ற கோரிக்கைகள் கூட, அவர் சார்ந்த கட்சியிலிருந்து வந்ததாகத் தெரியவில்லை.

இதற்கெல்லாம் என்ன காரணம்? தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு, அதன் காரணமாக ஆட்சி கலைப்பு கோரிக்கை வலுப்படும் என்ற கவலையால் முதல்வர் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக மக்கள் கருதுகிறார்கள்.

இலங்கையில் தினமும் செத்து மடியும் தமிழர்களின் நலன் குறித்து இதுவரை எத்தகைய கடும் முடிவுகளையும் தி.மு.க. மேற்கொள்ளவில்லை. குறைந்தபட்சம், சில நாட்களே உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையாவது அது உதறித் தள்ளியிருக்கலாம். ஆனால் அதையும் விடுவதற்கு மனமில்லை.

இலங்கைப் பிரச்னையில் ஒப்புக்காக சில நடவடிக்கைகளை எடுத்து, தமிழினம் பற்றி பக்கம் பக்கமாக எழுதும் கலைஞரின் நடவடிக்கை, இதுவரை அவரை 'தமிழினத் தலைவர்' என்று நம்பி வந்த மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது.

முதல்வர் தனது 'உண்ணாவிரத மிரட்டலை' இலங்கை பிரச்னைக்கு பயன்படுத்தியிருந்தால், ஈழத்தில் எப்போதோ போர் நிறுத்தம் ஏற்பட்டு, பல ஆயிரம் தமிழர்கள் செத்து மடிந்திருப்பதை தடுத்திருக்கலாம்; பல முத்து‌க்குமாரர்களும் உருவாகியிருக்க மாட்டார்கள்.

கலைஞர் இவ்வாறு செய்திருந்தால், வரலாற்றிலும் தமிழர்கள் மத்தியிலும் தனக்கென ஒரு புகழைப் பெற்றிருப்பார்.

ஆனால், இன்று அவர் செய்ததோ வேறு. தனது பதவிக்கு ஆபத்து என்றதும் பிரசனையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அவர் எடுத்துள்ள ஆயுதம்தான் உண்ணாவிரதம் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை விவகாரத்தில் கடந்த பல ஆண்டுகளாக அவர் போட்டு வந்த வேடம், தற்போது கலைந்து வருகிறது.

ஆனாலும், இதுவரை சாதுர்யமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி வந்த - வந்து கொண்டிருக்கிற அவருக்கு, இதற்காகவாவது நிச்சயம் ஒரு ஆஸ்கார் விருதை வழங்கியிருக்கலாம்.

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

Show comments