Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அரசியலில் இரு நள்ளிரவுகள்!

-இரா. செழியன்

Webdunia
புதன், 25 ஜூன் 2008 (20:16 IST)
( இன்று ஜூன் 25. இதே நாளில்தான் 1975ஆம் இந்திய நாடு கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஒன்றரையாண்டுக் காலம் நீடித்த அந்த கொடுமையின் பெயர் எமர்ஜென்சி. நள்ளிரவில் பிரகடனம்
webdunia photoFILE
செய்யப்பட்டு நாடே இருளில் தள்ளப்பட்டப்போது, தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டபோது, அதனை எதிர்த்து நடந்த போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் இரா.செழியன். தலைசிறந்த நாடாளுமன்றவாதிகளில் ஒருவரான செழியன், எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டபோது நடந்த நிகழ்வை இக்கட்டுரையில் தந்துள்ளார் - ஆசிரியர்)

' தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலைத் தவறிக்கெட்டு பாழ்பட்ட ு' நின்ற இந்தியத் திருநாட்டுக்கு விடிவு
webdunia photoFILE
காலம் 1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வந்தது. அந்த நள்ளிரவில் டெல்லி நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் உணர்ச்சிமிக்க பேச்சில் குறிப்பிட்டார்: "நள்ளிரவின் மணியோசை கேட்கும் இந்த நேரத்தில், உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், இந்தியா விழித்துக்கொண்டு சுதந்திரமாக வாழத் தொடங்கிவிட்டது".

அதன்பின்பு சற்றேறக்குறைய 28 ஆண்டுகள் கடந்து ஒரு நள்ளிரவு வந்தது. 1975 ஜூன் 25ஆம் தேதியன்று! நாடு உறங்கிக் கொண்டிருந்த அந்த நள்ளிரவில், கடுமையான ஒரு நெருக்கடி காலப் பிரகடனத்தைப் பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார்!

1947 இல் பிரதமர் ஜவக‌ர்லால் நேரு நள்ளிரவில் சுதந்திர தீபத்தை ஏற்றிவைத்தார்! அடிமை இருளைப் போக்க வந்த தீபம் அது!

webdunia photoFILE
1975 இல் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் ஒளிவிட்டுக் கொண்டிருந்த சுதந்திரத் தீபத்தை அணைத்துவிட முயன்றார். அடிமை இருளுக்கு வரவு கூறினார்!

பிரதமராக இருந்த தந்தை ஏற்றிவைத்த தீபத்தை, அடுத்துப் பிரதமராக வந்த அவரின் மக‌ள் அணைத்துவிட முற்பட்டார்!

ஜவகர்லாலுக்கு இணையாக சுதந்திரப் போராட்ட வீரராக விளங்கிய ஜெயப்பிரகாசர் அந்த விடுதலை விளக்கை அணையாமல் பாதுகாத்திட இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை துவக்கி வெற்றி பெற்றார்! பெயரே பொருத்தமானதுதான் - ஜெயப்பிரகாசர், வெற்றியின் பிரகாசம் அவர்!

ஜூன் 11ஆம் தேதியன்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன் லால் சின்கா அவர்களின் தீர்ப்பு
webdunia photoFILE
வந்தது. 1971ஆம் ஆண்டு ரே பரேலி தொகுதியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சட்டவிரோதமான முறைகளை இந்திரா காந்தி கையாண்ட குற்றங்களுக்காக, அவர் வெற்றி பெற்றது செல்லாது எனத் தீர்ப்பில் கூறப்பட்டதுடன், மக்களவை உறுப்பினர் பதவியை இழந்ததுடன் மேலும் 6 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கும் சட்டப்பூர்வமானத் தடை வந்தது.

அடுத்த நாள் அதாவது ஜூன் 12ஆம் தேதி குஜராத் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன. அதுவரை தொடர்ந்து அந்த மாநிலத்தின் ஆட்சி பீடத்தில் அசையாது வீற்றிருந்த காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்து, ஜெயப்பிரகாசர் துவங்கிய ஜனதா முன்னணி வெற்றிபெற்று பாபுபாய் படேல் தலைமையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றது! தேர்தல் களத்தில் மக்கள் தந்த தீர்ப்பு, கட்சித் தலைவருக்கு எதிராக
webdunia photoFILE
நீதிமன்றம் தந்த தீர்ப்பு - இருபக்கத்திலும் இடி தாக்கியது! அரசியல் பூர்வமாக, சட்டப்பூர்வமாக, கிடைத்த தோல்விகளால் இந்திரா காந்தி பிரதமர் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பினர்.

தமது பதவியைக் காப்பாற்றிக்கொள்ள கடும் நடவடிக்கைகளை இந்திரா காந்தி எடுப்பார் என்பது நாங்கள் எதிர்பார்த்ததுதான். ஆனால் நெருக்கடிப் பிரகடனம் செய்யப்படும் என்று நினைக்கவில்லை. ஏனென்றால், பாகிஸ்தான்-பங்களாதேஷ் எல்லைப் பகுதிகளில் நிலவிய போர் சூழ்நிலையில், 1971 டிசம்பர் மாதத்தில் போடப்பட்ட நெருக்கடி நிலைமை 1975 ஜூன் மாதத்திலும் நீடித்து வந்தது.

1974 ஆம் ஆண்டிலேயே இந்திய அரசியலில் வளர்ந்துவரும் எதேச்சதிகாரத்துக்கு எதிராக எதிர்க்கட்சியினரை வைத்து தேசிய ஒருங்கிணைப்புக் கூட்டணி ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் அமைக்கப்பட்டது.
webdunia photoFILE
அதில் ஆச்சாரிய கிருபளானி, மொரார்ஜி தேசாய், அசோக மேத்தா, அதல் பிகாரி வாஜ்பாய், எல்.கே. அத்வானி, சரண் சிங், பிலு மோடி, என்.ஜி. கோரே, எஸ்.எம். ஜோஷி, கட்டுரை எழுதும் நான் உள்ளிட்டவர்கள் உறுப்பினர்களாக இருந்தோம். மேலும் பல முக்கியத் தலைவர்கள் அடிக்கடி எங்கள் கூட்டங்களில் கலந்துகொள்வார்கள்.

அலகாபாத் தீர்ப்பை வைத்து மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த ஒரு கூட்டத்தை ஜூன் 25 காலை10 மணிக்கு உ.பி. நிவாஸ் மாளிகையில் சரண் சிங் தங்கியிருந்த அறையில் ஜே.பி. கூட்டினார். நான் சென்ற பொழுது அங்கு ஜெயப்பிரகாசர், சரண் சிங், மொரார்ஜி தேசாய்,
webdunia photoFILE
அசோக மேத்தா, பிலு மோடி, ராஜ் நாராயண் உள்ளிட்ட பதினைந்து பேர்கள் இருந்தனர். (வாஜ்பாய், அத்வானி, நாடாளுமன்றக் குழு கூட்டத்திற்காக பெங்களூர் சென்றிருந்தால் அவர்கள் அன்றைய டெல்லிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை). அரசியல் நிலைமைகளை ஆராய்ந்த பிறகு, அலகாபாத் தீர்ப்புக்குப் பிறகு பிரதமர் பதவியிலிருந்து இந்திரா காந்தி விலக வேண்டும் என்பதை முன்வைத்து ஜூன் 29 முதல் நாடு தழுவிய கோரிக்கைப் போராட்டத்தை நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. அத்துடன், உடனடியாக பொதுத் தேர்தல் வைத்தால் அதைச் சந்திக்கத் தயார் என்று அழுத்தமான அறைகூவலை விடுத்தார் ஜே.பி.

அன்று மாலை டெல்லி ராம்லீலா மைதானத்தில் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்குப் போகும்பொழுது தம்முடன் வருமாறு அசோக மேத்தா என்னிடம் கூறினார். அதைக்கேட்ட ஜே.பி. இடைமறித்து, "செழியனுக்கு மற்றொரு வேலை இருக்கிறது. பொதுக் கூட்டத்துக்கு அவர் வரவேண்டாம்" என்று கூறி, ராஜ் நாராயணனை அழைத்து,
webdunia photoFILE
"அலகாபாத் நீதிமன்றம் தந்த முழுத் தீர்ப்பை செழியனிடம் தாருங்கள். இன்றிரவு அதைச் செழியன் படித்து குறிப்பெடுத்ததும் நாளை காலை அது பற்றி நாம் விவாதிக்கலாம்!" என்று சொன்னார். அத்துடன் நான் எனது பிஷாம்பர்தாஸ் தெரு 12ஆம் எண் இல்லத்துக்குத் திரும்பிவிட்டேன். ராஜ் நாராயண் அதே வீதியில் 8ஆம் எண் இல்லத்தில் இருந்தார். எனவே நான் வீடு திரும்பிய சிறிது நேரத்தில் ராஜ் நாராயணன் வீட்டிலிருந்து அலகாபாத் தீர்ப்புக் கட்டு வந்தது.

இரவு உணவு அருந்தியதும் 260 பக்கங்கள் கொண்ட அந்த தீர்ப்பை நான் படிக்கத் துவங்கினேன். நேரம் போனது தெரியவில்லை. தி.மு. கழக நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இருந்த எனக்கு உறுதுணையாக இருந்த அன்புமணி அப்பொழுது என்னுடன் தங்கியிருந்தார். இரவு 2.30 மணியளவில் டெலிபோன் மணி அடித்தது. பிலு மோடி பேசினார்: "தெரியுமா? ஜே.பி., மொரார்ஜி, அசோக் பலர் கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது. நெருக்கடி நிலைமை ( internal emergency) பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வழக்குரைஞர்களைக் கேட்டு இதை எதிர்த்து சுப்ரீம் நாம் வழக்குத் தொடரவேண்டும்... இரு, இரு! வெளியில் ஏதோ சத்தம்! போலிஸ் வேன் - போலிசார்! சரி, எனக்கும் அரசாங்க அழைப்பு வந்துவிட்டது. சரி நீ நாளை காலை கட்டாயமாக..." அத்துடன் டெலிபோன் நின்றுவிட்டது.

ஒரு நெருக்கடி நிலைமைக்கு மேல் இரண்டாவதாக மற்றொரு நெருக்கடி நிலைமையா? ஒரு பத்திரிக்கையாளர் டெலிபோனில் சொன்னார்: "அது வெளிநாட்டு நிலைமையால் ஏற்பட்ட நெருக்கடி, இது உள்நாட்டு நிலைமையால் ஏற்பட்ட நெருக்கடி. போலிசாரின் கைது வேட்டை வேகமாக நடைபெறும், பத்திரம்".

நான்கு மணியளவில் சென்னைக்கு கழகத் தலைவர் கலைஞருடனும் நாவலருடனும் டெலிபோன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். டெலிபோன் தொடர்புகள் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டன. இதற்குள்
webdunia photoFILE
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சோமநாத் சட்டர்ஜி என் வீட்டுக்கு வந்தார். "உடனே கிளம்புங்கள்! மறைவான இடத்துக்குச் சென்றுவிடலாம்" என்று என்னையும் அன்புமணியையும் அழைத்தார். உறங்கிக் கொண்டிருந்த என் மனைவி பிரேமாவை எழுப்பி நான் வெளியேறுவது பற்றிக் கூறிவிட்டு நாங்கள் கிளம்பி காலை ஐந்து மணியளவில் டெல்லியில் கிரீன்பார்க் பகுதியில் சோமநாத் சட்டர்ஜிக்குத் தெரிந்த ஒருவர் வீட்டில் போய் தங்கிவிட்டோம்.

டெல்லி பத்திரிகைகள் பலவற்றுக்கும் இருந்த மின்சாரத் தொடர்புகள் இரவே துண்டிக்கப்பட்டு விட்டதால் காலைப் பதிப்புகள் எதுவும் வெளிவரவில்லை. பத்திரிகைகள் மீது கடுமையானத் தணிக்கை முறை
webdunia photoFILE
அமல்படுத்தப்பட்டதாகத் தெரிந்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே, நெருக்கடி பிரகடனத்தை கண்டித்து நாங்கள் ஒரு கண்டன அறிக்கையைத் தயாரித்து பத்திரிகை நிருபரிடம் தந்தோம். அந்த அறிக்கை தணிக்கையில் சிக்கி இந்தியப் பத்திரிகைகளில் வெளியிடப்படவில்லை. ஆனால், வெளிநாட்டுக்குச் சென்று அங்கு பல பத்திரிகைகளில் வெளிவந்ததாகப் பின்பு எனக்குத் தெரியவந்தது.

காலையில் சென்ற அன்புமணி திரும்பிவந்து நெருக்கடி நிலைமையின் விவரங்களைத் தந்தார். காலை 5 மணியளவில் என் வீட்டைச் சுற்றி வேன்களையும், ஆயுதம் தாங்கிய போலிசாரையும் நிறுத்திவிட்டு, அரஸ்ட் வாரண்டுடன் போலிஸ் அதிகாரிகள் வந்தனராம். "அவர் நேற்றைய தினம் சென்னை சென்றுவிட்டார்" என்று என் மனைவி சொன்னதற்கு, "நேற்று உ.பி. நிவாஸ் கூட்டத்தில் ஜே.பி.யுடன் அவர் இருந்திருக்கிறார்" என்று போலிஸ் அதிகாரி சொன்னாராம். அதையும் சமாளித்து, "அவர் நேற்று மாலை சென்றார்" என்று என் மனைவி சொன்னதை நம்பாமல், வீட்டிற்குள் நுழைந்து ஒவ்வொரு அறையாகச் சோதனை போட்டார்களாம். நான் அங்கு இல்லை என்று முடிவாகத் தெரிந்ததும் வேறு வழியில்லாமல் திரும்பிச் சென்றுள்ளனர்.

ஜெய்பிரகாசர் கைது செய்யப்படும்போது அங்கு இருந்த யு.என்.ஐ. நிருபரிடம் கடைசியாக ஜே.பி. சொன்ன வாசகம், "விநாச காலே, விபரீத புத்தி" (அழிவு காலத்துக்கு முன்னதாக வரும் விபரீத புத்தி) என்பதாகும்.

தலைநகரில் தங்குவதில் பயனில்லை என்று நானும் அன்புமணியும் மாலை இருள் சூழும் நேரத்தில் டெல்லி விமான நிலையத்துக்குச் சென்றோம். நான் வெளியில் காத்திருந்தேன். அன்புமணி உள்ளே சென்று சென்னைக்கு டிக்கெட் ஒன்றை வாங்கிக்கொண்டு வந்தார். விமானம் புறப்படுவதற்கான கடைசி அறிவிப்பு வந்ததும், என்னுடைய கைப்பையை எடுத்துக்கொண்டு சென்னை செல்லும் விமானத்தில் ஏறிவிட்டேன். எந்த முன்னறிவிப்பும் முன்னேற்பாடும் இல்லாமல் நெருக்கடிப் பிரகடனம் வந்ததால், போலிசாருக்கே காவல் பார்க்கும் பணியில் ஒரு பயிற்சி அன்று இல்லை.

சென்னை வந்ததும், கிண்டியில் ஒரு இடத்தில் கலைஞரும்,
webdunia photoFILE
நாவலரும் மற்ற முன்னணித் தலைவர்களும் இருப்பதாக எனக்குத் தகவல் தரப்பட்டது. அவர்களைச் சந்தித்து டெல்லியில் நடந்தவற்றைத் தெரிவித்தேன். ஜனநாயக விரோதமான நெருக்கடி கால அறிவிப்பு குறித்து கழகத்தின் முடிவைத் தெரிவிப்பதாக அடுத்த நாளே தி.மு.கழகத்தின் செயற்குழுவைக் கூட்டிட ஏற்பாடு செய்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். (கழகத்தின் செயற்குழு 27.06.1975 தேதியன்று கலைஞர் தலைமையில் கூட நெருக்கடிப் பிரகடனத்தைக் கண்டித்து நிறைவேற்றிய தீர்மானம் திடமான - தீர்க்கமான அடிப்படையில் அமைந்திருந்தது. நாட்டுக்கு ஏற்பட்ட நலிவு குறித்து இவ்வளவு விரைவாக - வலிவாக அந்தத் தீர்மானம் வெளிவந்தது நாட்டின் அரசியல் வரலாற்றில் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்)

நான் வீடு செல்லும் பொழுது இரவு 12 மணிக்குமேல் ஆகிவிட்டது. கடந்த 24 மணி நேரத்துக்குள் நாட்டு நிலைமையில் நேரிடையாக எனக்குக் கிடைத்த அனுபவத்தை நான் குறித்துள்ளேன். ஜனநாயகம் - அரசியல்
webdunia photoFILE
சட்டம் - அடிப்படை உரிமைகள் எல்லாம் ஏட்டில் வைக்கப்பட்ட எழுத்துக் குவியல்களாகிவிட்டன! பத்திரிகைகள் மீது பலமான அடக்குமுறை! தலைவர்கள் சிறையில்! வெளியுலகம் அறியாதபடி நாட்டு நடப்பு ஒரு இருட்டு அறையில்! "நாடு சுடுகாடாகிவிட்டதே!" என்று பெருந்தலைவர் காமராசர் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் கண்ணீர்விடும் அளவுக்கு வேதனை மிக்க சோதனை! இத்தகைய நெருக்கடி காலம் மீண்டும் நமது நாட்டில் வரக்கூடாது. நமது நாட்டுக்கு மட்டுமல்ல, மற்ற எந்த நாட்டுக்கும் - நம்மீது தீராத வெறுப்புடன் பகையுணர்வு காட்டுகிற மற்றொரு நாட்டுக்குக்கூட இத்தகைய கொடுமையான நெருக்கடி வரக்கூடாது!

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments