Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யாவிற்காக விண்ணில் பறந்த நாய்!

ச.ர.ராஜசேக‌ர்

Webdunia
வியாழன், 24 ஏப்ரல் 2008 (16:44 IST)
' லைக்கா'... இந்தப் பெயரைக் கேட்டதும் ஏதாவது தோன்றுகிறதா... பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் அறிவியல் பாடம் நடத்தும் போது நன்றாக கவனித்திருந்தால் நிச்சயம் நினைவுக்கு வரும்... சரி மூளையை கசக்காதீர்கள்... 'லைக்கா'... விண்வெளியில் அனுப்பப்பட்ட முதல் உயிரினமான பெண் நாயின் பெயர்.

கடந்த 1957ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி 'ஸ்புட்னிக்-2' என்ற உலகின் 2வது செயற்கைக்கோள் மூலம் லைக்கா விண்ணில் பயணித்தது. வான்வெளியில் பயணித்த முதல் உயிரினம் என்ற பெருமையை பெற்ற லைக்கா, ஒரு சில மணி நேரத்திலேயே உயிரிழந்தது.

பிராணவாயு பற்றாக்குறை காரணமாக லைக்கா இறந்ததாக அப்போது தெரிவித்த ரஷ்ய அரசு, கடந்த 2002 அக்டோபரில் லைக்காவின் மரண சாசனத்தை திருத்தி வெளிட்டது... "லைக்கா பிராணவாயுக் குறைபாட்டால் இறக்கவில்லை, விண்வெளியின் வெப்பம் தாளாமலே உயிரிழந்தது" என்று.

இப்படி வீர மரணம்(!) அடைந்த லைக்காவுக்கு ரஷ்ய அரசு கடந்த ஏப்ரல் 11ம் தேதி சிலை வைத்துள்ளது. மாஸ்கோ நகரில் ஸ்புட்னிக்-2 செயற்கைக்கோள் ஏவப்பட்ட இடத்திற்கு அருகே உள்ள ராணுவ ஆராய்ச்சி நிலையத்தில் அந்த சிலை வைக்கப்பட்டுள்ளது இந்த ஆளுயர சிலை. இதன் உயரம் மிகத் துல்லியமாக 2 மீட்டர் (படத்தைப் பார்த்து நீங்களை அளந்து கொள்ளுங்கள்).

கடந்த காலத்தில் வல்லமை படைத்த வல்லரசு யார் என்பதில் ரஷ்யா, அமெரிக்கா இடையே குடுமிப்பிடி சண்டை. விண்வெளியில் கால் பதிக்க வேண்டும், அங்கும் தத்தமது நாட்டின் கொடிகளை பறக்க விட வேண்டும் என 2 நாடுகளுமே கங்கணம் கட்டிக் கொண்டு யோசித்தன. இதன் விளைவாகவே உலகின் முதல் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

சரி காலண்டரை கொஞ்சம் பின்னோக்கி திருப்புவோம்.... ஆண்டு 1957... மாதம் அக்டோபர்... ரஷ்யா அணு ஆயுத சோதனை நடத்த தேவையான அனைத்து நடவடிக்கையிலும் அதி தீவிரமாக மூழ்கியிருந்த சமயம். அந்நாட்டின் ராணுவ விஞ்ஞானிகள் ஹைட்ரஜன் பாம் தயாரிக்கும் பணியில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ஈடுபட்டிருந்தனர்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ரஷ்யாவின் வி-7 ஏவுகணையை, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணையாக பயன்படுத்த ராணுவம் திட்டமிட்டிருந்தது. அப்போது தான் அந்நாட்டின் தலைமை விஞ்ஞானியான கொரோலெவ்-க்கு அந்த யோசனை தோன்றியது.

உடனே அதனை அப்போதைய அதிபர் குருஷேவின் காதில் கசிய விட்டார். இதன் விளைவாகவே
உலகின் முதல் செயற்கைக்கோள் உருவானது.

கொரோலெவ் யோசனை... வி-7 ஏவுகணையை பயன்படுத்தி உலகின் முதல் செயற்கைக்கோளை ஏவ வேண்டும் என்பது தான். அவரின் யோசனைப்படியே கடந்த 1957ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி ஸ்புட்னிக்கை ரஷ்ய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக ஏவினர். இதுவே விண்வெளி போட்டியிலும் செம்படையின் ஆதிக்கத்திற்கு ஆனா, ஆவன்னா எழுதும் சம்பவமாக அமைந்தது.

உலகின் முதல் செயற்கைக்கோளை ரஷ்யர்கள் ஏவியதை கேள்விப்பட்ட அமெரிக்காவோ, தலையிலடித்துக் கொள்ளாத குறைதான். உலகம் முழுவதிலும் இருந்து ரஷ்யாவிற்கு குவியும் பாராட்டுக்கள் அனைத்தும் அமெரிக்கர்களின் தலையில் இடியாக இறங்கியது.

அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ஐசனோவர், விண்வெளிப் போட்டியில் ரஷ்யாவை மண்ணைக் கவ்வ வைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க கோரி, வெற்றுச் காசோலையில் கையெழுத்திட்டுக் கொடுத்தார் என்ற தகவல்கள் கூட அப்போது உலகம் முழுக்க இறக்கை கட்டிப் பறந்தது (ஸ்புட்னிக் போல...).

ஆனால் ரஷ்யர்கள் மீண்டும் தங்கள் தலையில் ஆணியடிப்பார்கள் என அமெரிக்கா சிறிதும் நினைக்கவில்லை. ஸ்புட்னிக் வெற்றி மற்றும் அதன் மூலம் கிடைத்த புகழை நினைத்து நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டிருந்த குருச்சேவிடம், தலைமை விஞ்ஞானி மீண்டும் ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த திட்டத்தை காதில் ஓதினார்.

அதன் காரணமாக உருவானது தான் ஸ்புட்னிக்-2... முதன் முதலில் விண்வெளியில் ஒரு உயிரினத்தை ஏற்றிச் சென்ற செயற்கைக்கோள். அதில் அனுப்பப்பட்ட பெண் நாய்தான் லைக்கா...

பிராணிகள் பாதுகாப்பகத்தில் இருந்து அவசர அவசரமாக செயற்கைக்கோள் ஏவும் சோதனைக் கூடத்துக்கு கொண்டு வரப்பட்ட லைக்காவுக்கு, அங்கிருந்த விஞ்ஞானிகள், விண்வெளியில் பயணிப்பதற்கு தேவையான சில பயிற்சிகளையும் அளித்ததாக ராணுவ வட்டாரங்கள் தமாஷாக கூறியதாக தகவல்.

ஆண்டு 1957... நவம்பர் மாதம் 3ஆம் தேதி விண்வெளிக்கு சென்ற முதல் பிராணி என்ற பெருமையுடன் ஸ்புட்னிக்-2 செயற்கைக்கோளில் சரித்திரப் புகழ் பயணத்தை துவக்கிய லைக்கா... மீண்டும் பூமிக்கு திரும்பவேயில்லை. விண்கலம் விண்வெளியை எட்டிய போது ஏற்பட்ட அதிக வெப்பத்தால் உடல் கருகி வீரமரணம் (!) அடைந்தது.

அந்தக் கால கட்டத்தில் தங்கள் குழந்தைகளுக்கு நிலாச்சோறு ஊட்டிய ரஷ்ய தாய்மார்கள், வான்வெளியில் தெரியும் ஏதாவது ஒரு நட்சத்திரத்தை காட்டி, "அங்கே பார் லைக்கா கண் சிமிட்டுகிறது... வாலாட்டுகிறது" என்று கூறியிருக்கவும் வாய்ப்புகள் உள்ளதை நிச்சயம் மறுக்க முடியாது.

ஸ்புட்னிக்-2 செயற்கைக்கோளை ஏவியதிலும் ரஷ்யாவிற்கு பாராட்டு மழை... இது அமெரிக்காவின் வயிற்றெரிச்சலை மேலும் அதிகரித்ததன் விளைவாகவே நாசா விண்வெளி நிறுவனமும், இணையதளத்தை கண்டறிந்த 'அர்ப்பா' என்ற ராணுவ ஆராய்ச்சி நிறுவனமும் உருவாக்கப்பட்டது. (இச்சம்பவம் நிகழ்ந்த 12 ஆண்டுகளுக்கு பின் நாசா நிறுவனம் நிலாவில் மனிதனை கால்பதிக்க வைத்து பழிதீர்த்துக் கொண்டது தனிக்கதை)

ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாத ரஷ்யா, ஸ்புட்னிக்-3 மற்றும் 4 என அடுத்தடுத்து 2 செயற்கைக்கோள்களிலும் நாய்களை ஏற்றி விண்வெளியில் அனுப்பியதுடன், அவற்றை உயிருடன் மீண்டும் பூமிக்கு திருப்பிக் கொண்டு வந்து, தனது விண்வெளி மகுடத்தில் மேலும் ஒரு தங்க இறகை
சொருகிக் கொண்டது. பெல்கா, ஸ்டிரெல்கா என இந்த 2 நாய்களுக்கும் பெயரிட்ட விஷயத்திலும் ரஷ்யர்களின் புத்திசாலித்தனம் வெளிப்பட்டுள்ளதை குறிப்பிடாமல் இருக்க முடியாது...

இப்படி சரித்திரப் புகழ் பெற்ற பெண் நாய் லைக்காவுக்கு, ரஷ்ய அரசு ஏன் 2 மீட்டர் உயர சிலை வைத்து மரியாதை செய்தது என்பதை இப்போது புரிந்து கொண்டீர்களா.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments