Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லைப் பெரியாறு : பேச ஒப்புக்கொண்டது தவறு!

Webdunia
புதன், 19 டிசம்பர் 2007 (14:14 IST)
webdunia photoFILE
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை தொடர்பாக பிரதமரின் வற்புறுத்தலுக்கு இணங்க கேரள முதலமைச்சருடன் பேசுவதற்கு தான் ஒப்புக்கொண்டதாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்று மத்திய நீர்வள ஆணையத்தின் நிபுணர்கள், தமிழக, கேரள நீர் பாசனத்துறை பொறியாளர்களுடன் இணைந்து சோதனை செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில், அணையின் நீர்மட்டத்தை முதற்கட்டமாக 136 அடியிலிருந்து 142 அடிக்கு உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை முடக்கும் வண்ணம் கேரள அரசு தனது மாநிலத்தின் பாசனம் மற்றும் அணைகள் பாதுகாப்புச் சட்டத்தில் ஒரு திருத்தத்தை நிறைவேற்றியது. இது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று கூறி தமிழக அரசு செய்த மேல் முறையீடு உச்ச நீதிமன்றத்தில் ஜனவரி 3வது
webdunia photoFILE
வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், நேர் எதிர் போக்காக கேரள முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதலமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளது நிச்சயமாக தமிழ்நாட்டின் சட்ட ரீதியான அணுகுமுறைகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடியதாகும்.

பிரதமரின் முன்னிலையில் எவ்வளவு விரைவாக பேச்சுவார்த்தை நடந்தாலும் முதல் பேச்சுவார்த்தையிலேயே எந்த முன்னேற்றமோ அல்லது முறிவோ (அதுதான் இறுதியில் ஏற்படும்) ஏற்பட்டுவிடப் போவதில்லை. பல கட்டங்களாக பேச்சுவார்த்தையை இழுக்க கேரள அரசு முயற்சிக்கும். அந்த நிலையில் வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வரும்போது, இரு மாநில முதல்வர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதால் வழக்கு விசாரணையை தள்ளிவைக்குமாறு கேரள அரசு கேட்டுக்கொள்ளும், வேறு வழியில்லாமல் தமிழக அரசும் ஒப்புக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

webdunia photoFILE
இதனால், கேரள அரசு நிறைவேற்றிய சட்டத்திற்குப் புறம்பான சட்ட திருத்தத்தின் மீதும், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றம் 12 அம்சங்கள் குறித்து நடத்தப் போகின்ற விசாரணையும் தள்ளிப்போய் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நியாயம் காலதாமதமாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை தொடர்பாக தீர்வு காண்பதற்கு ஏதுமில்லை என்று கூறிவரும் கேரள முதல்வர் அச்சுதானந்தனும், அம்மாநில பாசனத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரனும், பிரச்சனைக்கு ஒரே தீர்வு புதிய அணை கட்டுவது என்றும், அது குறித்து பேச தமிழக அரசு முன்வரவேண்டும் என்றும்தான் கூறிவருகிறார்கள். இது, தமிழகத்தின் நிலைப்பாட்டோடு எந்தவிதத்திலும் தொடர்புடையதன்று.

webdunia photoFILE
புதிய அணை குறித்து தமிழக அரசுடன் பேசுவதற்கு பிரதமர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் வலியுறுத்தியதற்குப் பிறகு, அப்படிப்பட்ட பேச்சுவார்த்தையால் பிரச்சனை திசை திருப்பப்படும் என்று தமிழ்.வெப்துனியா.காம் திட்டவட்டமாக கூறியிருந்தது. ஓரிரு நாட்களில் அறிக்கை வெளியிட்ட தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், கேரளத்துடன் பேசுவதற்கு ஏதுமில்லை என்று விளக்கமாகக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், பிரதமரின் வற்புறுத்தலுக்கு இணங்கி கேரள முதலமைச்சருடன் பேசுவதற்கு தமிழக முதல்வர் எந்த அடிப்படையில் ஒப்புக்கொண்டார் என்பது புரியவில்லை. புதிய அணை குறித்து பேசவேண்டும் என்றே கேரள முதல்வர் கூறியுள்ளார். அப்படியானால், புதிய அணை கட்டுவது குறித்து பேசுவதற்கு தமிழக முதலமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளாரா? என்பதனை தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments